SIP Mutual Fund: SIP எனப்படும் மாதந்திர முதலீட்டின் மூலம், மியூச்சுவல் ஃபண்டில் ஒவ்வொரு மாதமும் ஒரு நிலையான தொகையை டெபாசிட் செய்து வந்தால், கிடைக்கும் வருமானம் 10 முதல் 15 சதவீதம் அல்லது அதற்கும் அதிகமாக இருக்கலாம் என்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள்.
சரியான திட்டமிடல் இல்லாததால், ஓய்வுக்குப் பிறகு, கையில் போதுமான பணம் இல்லாமல் தவிக்கும் நிலை ஏற்படாமல் இருக்க, இளம் வயதிலேயே திட்டமிட்டு முதலீடு செய்யத் தொடங்குங்கள்.
சிஸ்டமேடிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (SIP) என்பது மக்களின் கோடீஸ்வரராகும் கனவை நிறைவேற்றும் ஒரு வழிமுறையாகும். ஆனால், இதில் பணம் பன்மடங்காக, நீண்ட கால முதலீடு தேவை. இந்நிலையில், ரூ.10,000 மாத முதலீட்டில் கோடீஸ்வரர் ஆக எவ்வளவு காலம் எடுக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்
பரஸ்பர நிதியம்: மியூச்சுவல் ஃபண்டுகள் என்னும் பரஸ்பர நிதியம் மூலம் முதலீட்டாளர்கள் ஆயிரங்களை கோடிகளாக உருவாக்கலாம். இதில் வருமானம் சிறப்பாக இருப்பதோடு, கூட்டு வட்டியின் பலனும் கிடைப்பதால், பணத்தை பன்மடங்காக்குவது எளிதாகிறது.
10x15x18 சூத்திரம்: 10x15x18 சூத்திரத்தின் உதவியுடன், நீங்கள் 10,000 ரூபாய் தொடர் முதலீட்டில், ரூ.1 கோடிக்கும் அதிகமான கார்பஸை உருவாக்கலாம். இதில் 10 என்றால் 10 ஆயிரம் ரூபாய். 15 என்றால் 15 சதவிகிதம் வருமானம் மற்றும் 18 என்றால் 18 ஆண்டுகளுக்கு தொடர் முதலீடு என்பதைக் குறிக்கிறது.
12% முதல் 15% வருமானம்: மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது 12% முதல் 15% வரை வருமானத்தை அளிக்கிறது. அதிலும், சில சிறந்த பரஸ்பர நிதியங்கள் 20% - 30% என்ற அளவில் கூட வருமானத்தை தருகின்றன. SIPயில் பொதுவாக வாராந்திர, காலாண்டு அல்லது மாதாந்திர முதலீடு செய்யலாம்.
ரூ 10,000 SIP: நீங்கள் SIP மூலம் மாதம் 10,000 ரூபாய் முதலீடு செய்த நிலையில், சராசரி ஆண்டு வருமானம் 15 சதவீதம் என்று வைத்துக்கொள்வோம். இந்தத் தொகையை 18 ஆண்டுகள் தொடர்ந்து முதலீடு செய்தால், உங்களிடம் மொத்தம் ரூ.1,10,42,553 இருக்கும்.
வருமானம்: நீங்கள் பரஸ்பர நிதியத்தில் முதலீடு செய்த நிலையுஇல், அதில் கிடைக்கும், வருமானம் ரூ.88,82,553 ஆகவும், மொத்த முதலீடு ரூ.21,60,000 ஆகவும் இருக்கும். உங்கள் முதலீடு 18 ஆண்டுகளில் 5 மடங்காக பெருகியுள்ளது.
SIP என்பது மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதற்கான ஒரு வழி. எனினும், இதில் மொத்தமாகவும் முதலீடு செய்யலாம். முறையான முதலீட்டுத் திட்டம் அல்லது SIP என்பது ஒரு குறிப்பிட்ட தொகையை மியூச்சுவல் ஃபண்டுகளில் சீரான இடைவெளியில் முதலீடு செய்யும் செயல்முறையாகும்.
குறிப்பு: பரஸ்பர நிதிய முதலீடுகள் சந்தை அபாயத்திற்கு உட்பட்டவை. எனவே, முதலீட்டு முறைகள் குறித்து நிதி ஆலோசகருடன் விரிவாக ஆலோசனை செய்து அதுகுறித்து விரிவாக தெரிந்து கொண்டு முதலீடு செய்ய வேண்டும்.