Special FD Schemes: சிறப்பு FD திட்டங்களின் கீழ், நிலையான வைப்புத்தொகைக்கு அதிக வட்டிகளை தரும் 5 வங்கிகளை இங்கு காணலாம்.
நிலையான வைப்புத்தொகை (Fixed Deposits) திட்டம் என்பது வங்கிகளில் எப்போதும் இருக்கும் என்றாலும், சிறப்பு திட்டங்கள் அப்படியில்லை. அவை குறிப்பிட்ட காலத்தில் மட்டுமே உங்களால் இணைய முடியும். அந்த வகையில், தற்போது செயல்பாட்டில் இருக்கும் 5 திட்டங்களை இங்கு தெரிந்துகொள்ளுங்கள்.
புதிய நிதியாண்டு பிறந்திருக்கும் இந்த வேளையில் பல வங்கிகள் அதன் சிறப்பு FD திட்டங்களை நிறைவு செய்திருக்கும். இருப்பினும், சில வங்கிகள் மட்டும் சிறப்பு FD திட்டங்களை தொடர்ந்து வருகிறது. மேலும், சில சிறப்பு FD திட்டங்கள் தொடஙக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இந்த 5 வங்கிகளின் சிறப்பு FD திட்டங்களில் நீங்கள் நிச்சயம் முதலீடு செய்யலாம். இவற்றில் 8.05% வரை வட்டியும் கிடைக்கும்.
1. IDBI வங்கி உத்சவ் FD திட்டம்: இந்த வங்கி அதன் உத்சவ் FD திட்டங்களின் கீழ் 300 நாள்கள், 375 நாள்கள் FD திட்டங்களை நிறுத்திவிட்டது. இருப்பினும் வாடிக்கையாளர்கள், இதன்கீழ் வரும் 444 நாள்கள் FD திட்டங்களில் முதலீடு செய்யலாம். இதில் பொது வாடிக்கையாளர்களுக்கு 7.25%, மூத்த குடிமக்களுக்கு 7.75%, சூப்பர் மூத்த குடிமக்களுக்கு 7.90% வட்டி கிடைக்கும்.
அதே IDBI வங்கியில் 555 நாள்கள், 700 நாள்கள் FD திட்டங்களிலும் அதிக வட்டி வருவாய் கிடைக்கும். 555 நாள்கள் திட்டத்தில் பொது வாடிக்கையாளர்களுக்கு 7.30%, மூத்த குடிமக்களுக்கு 7.80%, சூப்பர் மூத்த குடிமக்களுக்கு 7.95% வட்டி கிடைக்கும். அதே நேரத்தில் 700 நாள்கள் திட்டத்திற்கு பொது வாடிக்கையாளர்களுக்கு 7%, மூத்த குடிமக்களுக்கு 7.50%, சூப்பர் மூத்த குடிமக்களுக்கு 7.65% வட்டி கிடைக்கும். இந்த அனைத்து திட்டங்களுக்கும் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 2025ஆம் ஆண்டு ஜூன் 30 ஆகும்.
2. கனரா வங்கி: இங்கும் 444 நாள்கள் சிறப்பு FD திட்டம் இருக்கிறது. இதில் பொது வாடிக்கையாளர்களுக்கு 7.25%, மூத்த குடிமக்களுக்கு 7.75% வட்டி கொடுக்கப்படுகிறது.
3. பஞ்சாப் & சிந்த் வங்கி சிறப்பு FD: இந்த வங்கி அதன் சிறப்பு FD திட்டத்தை வரும் ஜூன் 30ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. ஆனால், 333 நாள்கள் மற்றும் 555 நாள்கள் FD திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. ஆனால், தற்போது 444 நாள்கள், 777 நாள்கள், 999 நாள்கள் என 3 திட்டங்கள் உள்ளன. இதில் 444 நாள்கள் திட்டத்திற்கு 7.10% வட்டியும், 777 நாள்கள் திட்டத்திற்கு 6.50% வட்டியும், 999 நாள்கள் திட்டத்திற்கு 6.35% வட்டியும் வழங்கப்படுகிறது. இந்த வட்டி விகிதம் 2025 ஏப். 1ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது.
4. எஸ்பிஐ அம்ரித் விருஷ்டி திட்டம்: இந்த திட்டம் மார்ச் 31ஆம் தேதியே நிறைவடைந்த நிலையில், தற்போது மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளது. ஏப். 15ஆம் தேதி முதல் 444 நாள்கள் FD திட்டம் இந்த அம்ரித் விருஷ்டி திட்டத்தின்கீழ் அமலுக்கு வந்தது. இதில் 7.05% வட்டி விகிதம் கிடைக்கும்.
5. இந்தியன் வங்கி FD திட்டம்: இந்தியன் வங்கி அதன் IND Supreme 300 நாள்கள் மற்றும் IND Supreme 400 நாள்கள் சிறப்பு FD திட்டங்களின் கடைசி நாளை நீட்டித்துள்ளது. வரும் ஜூன் 30ஆம் தேதி வரை நீங்கள் இதில் இணைந்துகொள்ளலாம். இதில் சூப்பர் மூத்த குடிமக்களுக்கு 8.05% வட்டி வழங்கப்படுகிறது.