Personal Loan: தமிழ்நாடு அரசின் தனிநபர் கடன் திட்டத்தில் யார் யார் பயனடைய லாம், அதற்கான தகுதிகள், அளிக்கப்பட வேண்டிய ஆவணங்கள், விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்டவற்றை இங்கு காணலாம்.
Tamil Nadu Government: தமிழ்நாடு அரசு பல்வேறு தரப்பினருக்கு பல வகையில் நலத்திட்டங்களை வகுத்து அதை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையிஸ், சிறுபான்மையினரின் நலன் கருதி இந்த தனிநபர் கடன் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் (Tamil Nadu Government) பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (TAMCO) இந்த தனிநபர் கடன் திட்டத்தை வழங்குகிறது.
தனிநபர் கடன் திட்டத்தின் (Personal Loan Scheme) கீழ் ரூ.30 லட்சம் வரையிலான திட்டங்களுக்கு தனி நபர்களுக்கு சுய தொழில் தொடங்க, வியாபாரம் செய்ய, கறவை மாடுகள் வாங்கவும் கடன் வழங்கப்படுகிறது.
இதற்கு சில தகுதிகளும் உள்ளன. விண்ணப்பதாரர் மதவழி சிறுபான்மை இனத்தவரான இஸ்லாமியர்கள், பார்சிகள், கிறிஸ்துவர்கள், ஜெயினர்கள், சீக்கியரகள் ஆகியோர்களில் ஒருவராக இருத்தல் வேண்டும்.
விண்ணப்பதாரர் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடன் வழங்கப்படும். இந்த தகுதிகள் இருந்தால் இதற்கான ஆவணங்களை சமர்பித்து விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பங்களுடன் பல்வேறு ஆவணங்களின் நகலையும், அந்தெந்த மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்கள் / கூட்டுறவு வங்கிகள் / மண்டல் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் அவர்களின் சிறுபான்மையினர் மதச்சான்றிதழ், சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், உணவுபங்கீடு அட்டை அல்லது இருப்பிட சான்றிதழ், ஆதார் அட்டை, திட்ட அறிக்கை, வங்கிகள் கோரும் தேவையான ஆவணங்களை சமர்பிக்க வேண்டும்.
இந்த தனிநபர் கடனுக்கான விண்ணப்ப படிவங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகம்/ மாவட்ட சிறுபான்மையினர் அலுவலகத்தில் கிடைக்கும். மேலும், மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகங்களிலும் கிடைக்கும்.
மாவட்ட / மத்திய கூட்டுறவு வங்கி அல்லது அதன் கிளைகள் அல்லது நகர கூட்டுறவு வங்கி அல்லது தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ஆகிய இடங்களிலும் இந்த தனிநபர் கடன் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் கிடைக்கும். விண்ணப்பத்தை சரியாக பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
இதில் இரண்டு திட்டங்கள் இருக்கின்றன. முதலில், திட்டம் 1-ஐ பார்க்கலாம். உங்களின் ஆண்டு வருமானம் கிராமப் புறங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் ரூ.3 லட்சத்திற்கு மிகாது இருக்க வேண்டும். உங்களுக்கு அதிகபட்சமாக ரூ.20 லட்சம் வரை கடன் கொடுக்கப்படும். ஆண்கள், பெண்கள் இரு தரப்புக்கு ஆண்டு வட்டி விகிதம் 6% ஆகும். இந்த கடனை அதிகபட்சம் 5 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்த வேண்டும்.
திட்டம் 2-ஐ பார்த்தோமானால், திட்டம் 1இன் கீழ் நன்மை பெற முடியாத நபர்கள் மற்றும் ஆண்டு வருமானம் 8 லட்சம் வரை கொண்டவர்களுக்கு (கிராமப்புறம் மற்றும் நகர்புறங்களுக்கு) ரூ. 30 லட்சம் வரை அதிகபட்சம் கடன் கொடுக்கப்படும். இதில் ஆண்களுக்கு ஒரு ஆண்டு வட்டி விகிதம் 8% ஆகவும், பெண்களுக்கு 6% ஆகவும் விதிக்கப்படும். அதேபோல், இந்த கடனை 5 ஆண்டுகளுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும்.