2025 மார்ச் 7ஆம் தேதி, தமிழ் திரையரங்குகளில் ஒன்பது புதிய படங்கள் வெளியாகின்றன. இவை ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகின்றன. இந்த படங்கள் குறித்த சிறிய கண்ணோட்டத் தொகுப்பை இங்கு தெளிவாக பார்க்கலாம்.
இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே பல்வேறு அதிரடி திரைப்படங்கள் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகின்றன. மேலும், பல்வேறு கதைகளைக் கொண்ட, வெவ்வேறு நடிகர்கள் நடித்த திரைப்படங்கள் இன்று ஒரே நாளில் திரையரங்குகளில் வெளியாகின்றன. இதுகுறித்த சிறப்பு கண்ணோட்டத்தை பார்ப்போம்.
கிங்ஸ்டன்(Kingston): ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் திவ்ய பாரதி நடித்துள்ள இந்த திரைப்படத்தை கமல் பிரகாஷ் இயக்கியுள்ளார். கடல் பின்னணியில் ஃபேண்டஸி அட்வென்ச்சர் வகையில் உருவாகியுள்ள இப்படம், இந்தியாவின் முதல் கடல் அமானுஷ்யத் திரைப்படமாகும்.
எமகாதகி(Yamagaathagi): பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன் இயக்கத்தில் உருவான இப்படம், அமானுஷ்யத் திகில் கதையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ரூபா கொடுவாயூர் மற்றும் யூடியூப் பிரபலம் நரேந்திர பிரசாத் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
அஸ்திரம்(Asthiram): அரவிந்த் ராஜகோபால் இயக்கத்தில், நடிகர் ஷியாம் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள கிரைம் மற்றும் சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படம். நீண்ட இடைவெளிக்குப் பின்னர் ஷியாம் ஹீரோவாக நடித்துள்ள படம் இது.
நிறம் மாறும் உலகில்(Nirammaarum ulagil): ஜிபி பிரிட்டோ இயக்கத்தில், நட்ராஜ், ரியோ ராஜ், யோகி பாபு, சாண்டி மாஸ்டர், பாரதிராஜா, வடிவுக்கரசி, காவ்யா அறிவுமணி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம், ஐந்து பேரின் வாழ்க்கை ஒரு முனையில் எப்படி முடிகிறது என்பதை எதார்த்தமாக காட்டுகிறது.
லெக்பீஸ்(Legpiece): ஸ்ரீநாத் இயக்கி நடித்துள்ள காமெடி திரைப்படம். விடிவி கணேஷ், ரவி மரியா, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
படவா(Badava): விமல் மற்றும் சூரி நடித்துள்ள இந்த காமெடி திரைப்படம், 6 வருடங்களுக்கு முன்பு படமாக்கப்பட்டு, தற்போது வெளியிடப்பட்டுள்ளது. கே.வி. நந்தா இயக்கியுள்ளார்.
மர்மர்(Murmur): ஹேம்நாத் நாராயணன் எழுதி இயக்கியுள்ள இந்த திரைப்படம், தமிழ் திரையுலகில் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் படமாகும். இசை மற்றும் பாடல்கள் இல்லாமல் உருவாக்கப்பட்டுள்ளது.
ஜென்டில்வுமன்(Gentlewoman): மலையாள நடிகை லிஜோமோல் மற்றும் ஹரிகிருஷ்ணன் நடித்துள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் ஜோசுவா சேதுராமன் இயக்கியுள்ளார். கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.
அம்பி(Ambi movie): ரோபோ ஷங்கர் கதாநாயகனாக நடித்துள்ள காமெடி திரைப்படம். ரமேஷ் கண்ணா, கஞ்சா கருப்பு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். Bosser J Elvin இயக்கியுள்ளார்.