Tamil Nadu Budget 2025: 2025-26 தமிழ்நாடு பட்ஜெட்டில் மாணவர்களுக்கு சிறப்பான அறிவிப்பு ஒன்று காத்திருக்கிறது என தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழ்நாடு பட்ஜெட் வரும் மார்ச் 14ஆம் தேதி தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இதுவே தற்போதைய திமுக அரசின் (DMK Government) கடைசி முழு பட்ஜெட் தாக்கல் என்பதால் பல்வேறு புதிய அறிவிப்புகள், திட்டங்களை பொதுமக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
முதலமைச்சர் ஸ்டாலின் (MK Stalin) தலைமையிலான திமுக ஆட்சிப் பொறுப்பேற்று சுமார் 4 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில், பல்வேறு புதிய திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.
குடும்பத் தலைவிகளுக்கு பயனளிக்கும் வகையில் மாதந்தோறும் ரூ.1000 வங்கிக் கணக்கின் மூலம் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (Kalaignar Magalir Urimai Thogai Thittam) பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.
அதுமட்டுமின்றி, ஒன்றாம் மற்றும் 5ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கான முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் (Mudhalvar Morning Breakfast Scheme) கனடா நாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது என்றும் இங்கிலாந்தில் வரும் ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வருகிறது என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
மேலும், அரசுப் பள்ளியில் பயின்று தற்போது உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு ஊக்கத்தொகையாக மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டமும் (Pudhumaipenn Scheme) நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இதன்பின் உயர்கல்வியில் மாணவிகள் ஆர்வம் காட்டுவதாகவும் தமிழ்நாடு அரசு (Tamil Nadu Government) தெரிவித்திருந்தது.
இந்த புதுமைப்பெண் திட்டம் முதலில் அரசு பள்ளிகளுக்கு பயின்றவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்ட இந்த திட்டம், அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் பயின்றவர்களுக்கும் நீட்டிக்கப்பட்டது. இதேபோல், மாணவர்களுக்கு தமிழ் புதல்வன் திட்டம் (Tamil Pudhalvan Scheme) கொண்டுவரப்பட்டது.
தமிழ் புதல்வன் திட்டத்தில் அரசு பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ் மொழியில் பயின்ற மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படுகிறது. இந்நிலையில், இத்திட்டத்தை விரிவாக்கம் செய்ய தமிழ்நாடு அரசு முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதாவது, புதுமைப்பெண் திட்டத்தை போல அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் பயின்று உயர்கல்வியில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் தமிழ் புதல்வன் திட்டத்தை விரிவாக்கம் செய்து, வரும் தமிழக பட்ஜெட்டில் (Tamil Nadu Budget 2025) அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் பழைய ஓய்வூதிய திட்டம் (Old Pension Scheme) குறித்த அறிவிப்பும் தமிழக பட்ஜெட்டில் வெளியாகலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.