Tamil Nadu Government: குடியிருப்பு மற்றும் வணிக இடங்களில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் வசதி கட்டாயம் இருக்க வேண்டும் என தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தற்போது பெட்ரோல், டீசல் வாகனங்களை காட்டிலும், மின்சார வாகனங்களின் பயன்பாடு என்பது சற்று அதிகரித்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை, பெரும்பாலும், பெட்ரோல் வாகனங்களை பயன்படுத்தி வந்தாலும், சிலர் மின்சார வாகன பயன்பாட்டுகளுக்கு மாறியுள்ளன.
சென்னையில் கூட அரசு மின்சார பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. எனவே, மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது தமிழகத்தில் 1413 மின்சார சார்ஜிங் நிலையங்கள் உள்ளன. தற்போது, இதனை அதிகரிக்க தமிழக அரசு முடிவு எடுத்துள்ளது.
இந்த நிலையில் தான், தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, குடியிருப்பு மற்றும் வணிக இடங்களில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் வசதி கட்டாயம் இருக்க வேண்டும் என தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பின்படி, 8 வீடுகளுக்கு மேலான அல்லது 750 சதுர மீட்டருக்கு அதிகமான குடியிருப்புகளில் மின்சார சார்ஜ் வசதி கட்டாயமாகும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. 50 வீடுகளுக்கு அதிகமான குடியிருப்புகள் இருந்தால், வெளியில் இருந்து வருவோருக்கும் இ சார்ஜிங் வசதி கட்டாயம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மேலும், 300 சதுர மீட்டருக்கு அதிகமான பரப்பளவில் உள்ள தொழில் நிறுவனங்களில் இ சார்ஜிங் வசதி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தொழில் நிறுவனங்களில் மின்சார வாகனங்களுக்காக குறைந்தது 10 விழுக்காடு பார்க்கிங் வசதி ஒதுக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இருப்பினும், புதிய விதிமுறை 14 மீட்டருக்கும் குறைவான உயரத்திற்கும், 8 அல்லது அதற்கும் குறைவான குடியிருப்பு அலகுகளைக் கொண்ட அல்லது 750 சதுர மீட்டருக்கு குறைவான கட்டுமானப் பரப்பளவைக் கொண்ட குடியிருப்பு கட்டிடங்களுக்குப் பொருந்தாது.
2023 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தமிழ்நாடு மின்சார வாகனக் கொள்கை, மின்சார வாகனங்களை ஊக்குவிப்பதற்காக சில திருத்தங்களை வெளியிட்டது. இந்தக் கொள்கையின்படி, நகரங்களில் உள்ள அனைத்து புதிய கட்டுமானங்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கும் திட்டமிடல் கட்டத்திலேயே சார்ஜிங் உள்கட்டமைப்பு ஒருங்கிணைக்கப்படுவதை உறுதி செய்வதற்காக கட்டிடம் மற்றும் கட்டுமானச் சட்டங்களில் திருத்தங்கள் செய்யப்படும் என கூறியிருந்தது.