Tamil Nadu Part Time Teachers Salary Hike: பகுதி நேர ஆசிரியர்களின் ஊதிய உயர்வு ரூ.12,500-ல் இருந்து ரூ.15,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். இனி பகுதி நேர ஆசிரியர்கள் குஷியடைந்துள்ளனர்.
Tamil Nadu Part Time Teachers Salary Hike: ஆசிரியர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு, அமைச்சர் அன்பில் அவர்களின் ஊதியத்தை ரூ.15,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது பெரிதும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பகுதி நேர ஆசிரியர்ள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்ற முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுப் பள்ளி இடைநிலை ஆசிரியர்கள் சென்னையில் 20 நாட்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
மேலும், ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தும் பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களுக்கு கட்டாயம் அவர்கள் நினைத்தப்படி உரிய அறிவிப்பு வெளியிடப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் ஏற்கனவே கூறியிருந்தார்.
இந்த நிலையில், இன்று (ஜனவரி 14) 20 நாட்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஆசிரியர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி காலை 11 மணிக்கு பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் இடைநிலை மற்றும் பகுதிநேர ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். மேலும் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
பேச்சுவார்த்தைக்கு பிறகு, அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது முக்கிய அறிவிப்பை பகுதி நேர ஆசிரியர்களுக்கு அவர் வழங்கினார். அதாவது, ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று அவர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.
அவர் பேசுகையில், பகுதி நேர ஆசிரியர்களின் மாத ஊதியம் ரூ.12,500-லிருந்து ரூ.15,000 ஆக உயர்த்தப்படுகிறது என அவர் தெரிவித்துள்ளார். மேலும், இனி வருடத்தில் 12 மாதங்களும் சம்பளம் வழங்கப்படும் எனவும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர்களின் போராட்டத்தை முடிக்கும் வைக்கும் வகையில், பகுதி நேர ஆசிரியர்களின் சம்பளத்தில் கூடுதலாக ரூ.2,500 அதிகரித்துள்ளோம் என தெரிவித்துள்ளார். இதில் முக்கிய அறிவிப்பாக, பகுதி நேர ஆசிரியர்களுக்கு பள்ளி கோடை விடுமுறை நாட்களாக உள்ள மே மாதம் சம்பளம் தரப்படாமல் இருந்தது.
நீண்ட நாட்களாக மே மாதமும் சம்பளம் வழங்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதனையும் தற்போது தமிழக அரசு நிறைவேற்றியுள்ளது. அதாவது, மே மாத சம்பளமாக பகுதி நேர ஆசிரியர்களுக்கு ரூ.10,000 வழங்கப்படும் என அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இதன் மூலம், ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியது.