Tamil Nadu School Holiday: தமிழக மாணவர்கள் அரையாண்டு விடுமுறை எப்போது என்ற கேள்வி எழுந்துள்ளது. அரையாண்டு தேர்வுக்கான அட்டவணை வெளியான நிலையில், விடுமுறைக்காக மாணவர்கள் காத்திருக்கின்றனர்.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் அரையாண்டு தேர்வு எப்போது நடக்கும் என்ற கேள்வி எழுந்தது. இதுகுறித்து கடந்த சில நாட்ளுக்கு முன்பு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அரையாண்டு தேர்வு குறித்த தேதியை அறிவித்தார்.
இந்த நிலையில், இன்று (நவம்பர் 16) அரையாண்டு தேர்வுக்கான அட்டவணையை அதிகாரப்பூர்வமாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்கள் அரையாண்டு தேர்வுக்கு தங்களை தயார்ப்படுத்தி கொள்ளலாம்.
தமிழகத்தில் 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுககு 2025 டிசம்பர் 15ஆம் தேதி முதல் டிசம்பர் 23ஆம் தேதி வரை அரையாண்டு தேர்வு நடைபெற உள்ளது. மேலும், 6ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு டிசம்பர் 15ஆம் தேதி அரையாண்டு தேர்வு தொடங்கி, டிசம்பர் 23ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
அதனை தொடர்ந்து, 10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு டிசம்பர் 10ஆம் தேதி முதல் டிசம்பர் 23ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, அரையாண்டு விடுமுறை எப்போது தொடங்கும் என மாணவர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அரையாண்டு விடுமுறை டிசம்பர் 24ஆம் தேதி முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை விடுமுறை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்பிறகு, ஜனவரி 2ஆம் தேதி அரையாண்டு விடுமுறை முடிந்து, பள்ளிகள் திறக்கப்படலாம் என சொல்லப்படுகிறது. இருப்பினும், அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளிவரவில்லை.
ஆனால், ஜனவரி 2ஆம் தேதி வெள்ளிக்கிழமை வருவதால், அடுத்த ஜனவரி 3 சனிக்கிழமை, ஜனவரி 4ஆம் தேதி ஞாயிற்று கிழமை என பொது விடுமுறை நாட்கள் வருகிறது. இதனால், ஜனவரி 2ஆம் தேதி வரை அரையாண்டு விடுமுறை இருக்கும் என கூறப்படுகிறது.
எனவே, ஜனவரி 5ஆம் தேதி திங்கள் கிழமை அரையாண்டு விடுமுறை முடிந்து, பள்ளிகள் திறக்கப்படுமா என்ற ஆவலும் மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை நடத்தி, விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.