India vs New Zealand 1st ODI: நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஓடிஐ போட்டிக்கு முன் பயிற்சியில், இந்திய அணியின் முக்கிய வீரருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அவர் பயிற்சியை நிறுத்தி மைதானத்தில் இருந்து வெளியேறி உள்ளார்.
ரிஷப் பண்ட் தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடி வருகிறார். டி20ஐ போட்டிகளிலும், ஓடிஐ போட்டிகளிலும் அவருக்கான இடம் கிடைக்கவில்லை. இந்தச் சூழலில் தற்போது பேக்-அப் வீரராக ஓடிஐ ஸ்குவாடில் மட்டும் நீடித்திருக்கிறார்.
நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தியா - நியூசிலாந்து 3 ஓடிஐ போட்டிகள், 5 டி20 போட்டிகளை விளையாட இருக்கிறது.
வதோதரா நகரில் இந்தியா - நியூசிலாந்து இடையிலான முதல் ஓடிஐ போட்டி நாளை (ஜன. 11) மதியம் தொடங்க உள்ளதை முன்னிட்டு, இரு அணிகளின் வீரர்களும் இன்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.
அந்த வகையில், இந்திய அணியின் ரிஷப் பண்டும் தீவிர வலைப் பயிற்சியில் ஈடுபட்டார். விக்கெட் கீப்பர் பேட்டரான ரிஷப் பண்ட், கேஎல் ராகுலுக்கு பேக்-அப் வீரராக இருக்கிறார். அவருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைப்பது அரிது. ஒருவேளை இந்திய அணி 5 பௌலிங் ஆப்ஷனுடன் விளையாட முடிவெடுத்தால் நம்பர் 5 இடத்தில் ரிஷப் பண்ட் விளையாடுவதை நாம் பார்க்க வாய்ப்புள்ளது.
Rishabh Pant Injury: முதல் ஓடிஐ போட்டியை ஒட்டி, வதோதரா பிசிஏ மைதானத்தின் பி கிரவுண்டில் ரிஷப் பண்ட் இன்று வலைப் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். அப்போது அவருக்கு இடுப்புக்கு மேல் பந்து தாக்கியதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. வலியால் துடித்த அவருக்கு முதலுதவி சிகிச்சை மைதானத்திலேயே நீண்ட நேரத்திற்கு அளிக்கப்பட்டது.
அவருக்கு இந்திய அணி பயிற்சியாளர் குழு உடனடி சிகிச்சை அளித்தது. அப்போது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீரும் உடன் இருந்தார்.
முதற்கட்ட முதலுதவி சிகிச்சை நிறைவடைந்த பின்னர், ரிஷப் பண்ட் மைதானத்தில் இருந்து வெளியேறினார். அவர் வெளியேறிய பின்னர் கேப்டன் சுப்மான் கில் மற்றும் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் ஆகியோர் நீண்ட நேரம் உரையாடலில் ஈடுபட்டனர்.
ரிஷப் பண்ட் ஒருவேளை காயத்தால் ஸ்குவாடில் இருந்து வெளியேறும்பட்சத்தில், தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஓடிஐ ஸ்குவாடில் இடம்பெற்ற துருவ் ஜூரேல் மீண்டும் இந்திய அணிக்குள் வர வாய்ப்புள்ளது. இல்லையெனில், உள்நாட்டு போட்டிகளில் சிறப்பாக விளையாடி ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கான இந்திய ஸ்குவாடில் இடம்பெற்ற விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் ஓடிஐ அணிக்கும் அழைக்கப்படலாம். அவர் ரிஷப் பண்டை போல் இடது கை வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய இந்திய ஸ்குவாட்: ரோஹித் சர்மா, சுப்மான் கில் (கேப்டன்), விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், நிதிஷ் குமார் ரெட்டி, ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ரிஷப் பந்த், யஷஸ்வி ஜெய்ஸ்வால்.