India vs England: ஐசிசி டி20 உலகக் கோப்பையின் 2வது அரையிறுதியில் இந்திய அணிக்கு இந்த 3 இங்கிலாந்து வீரர்கள் கடுமையான சவாலை அளிப்பார்கள். அவர்கள் யார் யார் என்பதை பார்க்கலாம்.
ICC T20 World Cup 2026, IND vs ENG: இந்திய அணி நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் 7 போட்டிகளில் விளையாடி ஒரே ஒரு தோல்வியை மட்டுமே சந்தித்துள்ளது. இங்கிலாந்து அணியும் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே தோற்றது. சம பலம் வாய்ந்த அணி 2வது அரையிறுதியில் மோத இருக்கிறது.
ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி சுற்று நாளை தொடங்க உள்ளது. முதல் அரையிறுதியில் தென்னாப்பிரிக்கா - நியூசிலாந்து அணிகள் (South Africa vs New Zealand) நாளை (மார்ச் 4) மோத உள்ளன. இப்போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.
2வது அரையிறுதிப் போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் (India vs England) நாளை மறுதினம் (மார்ச் 5) மோத உள்ளன. இப்போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற இருக்கிறது.
நடப்பு சாம்பியனான இந்திய அணி (Team India), தொடர்ச்சியாக இரண்டு டி20 உலகக் கோப்பையை வெல்லும் முதல் அணி என்ற பெருமையை பெற, நிச்சயம் இப்போட்டியை வெல்ல வேண்டும். ஒருவேளை இந்த முறையும் டி20 உலகக் கோப்பையை வென்றால் டி20 உலகக் கோப்பையை 3வது முறையாக வெல்லும் அணி என்ற பெருமையையும் சேர்த்தே பெறும்.
மறுமுனையில் 2010, 2022 ஆகிய இரண்டு முறை டி20 உலகக் கோப்பையை இங்கிலாந்து அணி வென்றிருக்கிறது. இங்கிலாந்து அணியும் டி20 உலகக் கோப்பையை 3வது முறையாக கைப்பற்றும் முதல் அணி என்ற பெருமையை பெற முனைப்பு காட்டும். இங்கிலாந்து அணி சூப்பர் 8 சுற்றில் சிறப்பாக விளையாடி நியூசிலாந்து, இலங்கை, பாகிஸ்தான் அணிகளை வென்றது.
அந்த வகையில், 2வது அரையிறுதி போட்டியில் இந்திய அணிக்கு பெரும் சவாலை அளிக்கக் கூடிய இந்த மூன்று இங்கிலாந்து வீரர்கள் குறித்து இங்கு காணலாம்.
ஜோப்ரா ஆர்ச்சர்: பாடி-லைனில் பவுன்சர் போட்டால் சஞ்சு சாம்சன் தடுமாறுவார் என்பதை வெளிச்சமிட்டுக் காட்டியதே ஆர்ச்சர்தான் (Jofra Archer). 2025 இங்கிலாந்து அணியின் இந்திய சுற்றுப்பயணத்தில் 5 போட்டிகளில் மூன்று முறை ஆர்ச்சர் தான் சஞ்சு சாம்சன் விக்கெட்டை கைப்பற்றினார். மும்பை வான்கடே மைதானத்தில் புதிய பந்தில் ஓரிரு ஓவரில் ஸ்விங் இருக்கும் என்பதால், அபிஷேக் சர்மா - இஷான் கிஷனும் கூட ஆர்ச்சரிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
ஹாரி புரூக்: கேப்டனான இவர் நம்பர் 5 பேட்டராக களமிறங்கி தொடர்ச்சியாக சொதப்பி வந்தார். ஆனால் சூப்பர் 8 சுற்றில் இவர் நம்பர் 3இல் களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். நேபாள் அணிக்கு எதிரான முதல் போட்டியில் அரைசதம் அடித்த ஹாரி புரூக் (Harry Brook), சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இவர் அடித்த சதம்தான் அன்று இங்கிலாந்து அணியை வெற்றிபெற வைத்தது எனலாம். நம்பர் 3இல் இறங்கி அதிரடி காட்டும் இவரை இந்திய அணி பந்துவீச்சாளர்கள் விரைவாக விக்கெட் எடுக்க வேண்டும். இவர் செட்டிலாகிவிட்டால் இவரை அவுட்டாக்குவது கடினமாகிவிடும்.
வில் ஜாக்ஸ்: நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து அணிக்காக சிறப்பாக விளையாடி வருகிறார், ஜாக்ஸ் (Will Jacks). இங்கிலாந்து அணி தற்போது அரையிறுதிக்கு தகுதிபெற்றிருப்பதற்கு வில் ஜாக்ஸின் பார்ம் முக்கிய காரணம். நம்பர் 7 இடத்தில் களமிறங்கி இந்த தொடரில் 7 இன்னிங்ஸில் 191 ரன்களை அடித்துள்ளார். சிறப்பான பினிஷராகவும் திகழ்கிறார், பல போட்டிகளை இவரின் பேட்டிங்கே காப்பாற்றி உள்ளது. இவர் 6 இன்னிங்ஸில் 7 விக்கெட்டையும் கைப்பற்றியிருக்கிறார். முக்கிய விக்கெட்டை கைப்பற்றும் திறனை பெற்றிருக்கிறார், பவர்பிளேவில் கூட சிறப்பாக பந்துவீசுகிறார். டாப் ஆர்டரில் அபிஷேக் சர்மா, இஷான் கிஷன் மட்டுமின்றி திலக் வர்மா, சிவம் தூபே, அக்சர் பட்டேல் என எக்கச்சக்க இடது கை வீரர்கள் இருப்பதால் இவர் இந்திய அணிக்கு கடும் சவாலை அளிப்பார்.