Tilak Varma Net Worth: இந்திய அதிரடி வீரரான திலக் வர்மா இன்று தனது 23வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவரின் ஐபிஎல் சம்பளம், பிசிசிஐ ஒப்பந்தம், கார்கள் மற்றும் சொத்து விவரம் ஆகியவற்றை இங்கு காணலாம்.
Tilak Varma: திலக் வர்மா 23வது பிறந்தநாளை கொண்டாடி வரும் சூழலில், இன்று இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5வது டி20ஐ போட்டியில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5வது டி20ஐ போட்டி (India vs Australia 5th T20I) இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் பிளேயிங் லெவனில் மாற்றம் இல்லை.
ஆனால், இந்திய அணியை பொருத்தவரை, பிளேயிங் லெவனில் ஒரே ஒரு மாற்றம் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. திலக் வர்மாவுக்கு பதில் ரிங்கு சிங் (Rinku Singh) சேர்க்கப்பட்டார். திலக் வர்மா தனது 23வது பிறந்தநாளை கொண்டாடும் சூழலில், இன்று அவர் விளையாடவில்லை.
அந்த வகையில், திலக் வர்மாவின் ஐபிஎல் சம்பளம், அவர் பிசிசிஐ ஒப்பந்தம் மூலம் பெறும் சம்பளம், அவர் வைத்துள்ள கார் உள்ளிட்டவை சேர்த்து அவரின் நிகர சொத்து விவரத்தை இங்கு காணலாம்.
திலக் வர்மா (Tilak Varma) தற்போது இந்திய அணியில் விளையாடி வருகிறார். அவர் பிசிசிஐயின் C பிரிவு வீரராக உள்ளார். இதன்மூலம் அவருக்கு வருடத்திற்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் வரும். திலக் வர்மா ஓடிஐ போட்டிகளில் விளையாடியிருந்தாலும் தொடர்ந்து டி20ஐ போட்டிகளில் மட்டுமே விளையாடியிருக்கிறார். 4 ஓடிஐ போட்டிகளிலும், 36 டி20ஐ போட்டிகளிலும் திலக் வர்மா விளையாடியிருக்கிறார். ஒரு டி20ஐ போட்டியில் விளையாட அவருக்கு ரூ.3 லட்சம் ஊதியம் கொடுக்கப்படும்.
ஐபிஎல் தொடரை பொருத்தவரை அவர் 2022ஆம் ஆண்டில் மும்பை இந்தியன்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார். அப்போது அவரை மும்பை அணி ரூ.1.70 கோடிக்கு எடுத்தது. தொடர்ந்து, அவரை 2025 ஐபிஎல் மெகா ஏலத்தை முன்னிட்டு மும்பை அணி ரூ.8 கோடிக்கு அவரை தக்கவைத்தது.
இவருக்கு இன்ஸ்டாகிராமில் 3 மில்லியன் பாலோயர்ஸை கொண்டுள்ளார். இவர் எந்த பிராண்டிற்கு விளம்பர தூதராக இருக்கிறார் என்பது குறித்து தெளிவான தகவல்கள் இல்லை. இருப்பினும் இவருக்கு சமூக வலைதளங்கள் மூலம் ஒரு மாதத்திற்கு ரூ.40 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை வருமானம் வரலாம்.
இவர் Mercedes Benz S-Class மற்றும் BMW 7-Series போன்ற கார்களை வைத்திருக்கிறார். Mercedes Benz S-Class விலை 1.78 கோடி ரூபாய் முதல் ரூ.1.88 கோடி ரூபாய் வரை விற்கப்படுகிறது. BMW 7-Series கார் ரூ.1.82 கோடியாக விற்கப்படுகிறது.
இதன்மூலம், திலக் வர்மாவின் சொத்து மதிப்பு ரூ.5 கோடி முதல் ரூ.10 கோடி வரை இருக்கும் என கணக்கிடப்படுகிறது. ஒருவேளை அவர் தொடர்ந்து இந்திய அணியில் விளையாடினாலோ அல்லது ஓடிஐ அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தாலோ இன்னும் சொத்து மதிப்பு உயரும் வாய்ப்பு உள்ளது.