TNPSC Free Coaching : குரூப் 1 தேர்வு மூலம் கலெக்டராக ஆசை இருந்தால் தமிழ்நாடு அரசு கொடுக்கும் இலவச பயிற்சியை பயன்படுத்திக் கொள்ளுங்கள்
Tamilnadu Government TNPSC Free Coaching Announcement : தமிழ்நாடு அரசு டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 1 தேர்வுகளுக்கு நடத்தும் இலவச பயிற்சி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் கலந்து கொள்வது எப்படி? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
அரசு வேலையில் சேர வேண்டும் என கனவு காண்பவர்களுக்கு தமிழ்நாடு அரசு ஒரு குட்நியூஸை வெளியிட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 1 தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற விருப்பத்தில் இருப்பவர்களுக்கு இலவச பயிற்சி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் இது தொடர்பான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில், தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டம் மூலமாக TNPSC & TNUSRB போன்ற போட்டித்தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.
இதில் தஞ்சாவூர் மாவட்டத்தில் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் அதிக அளவில் பங்கு பெற்று பயனடைந்து வருகின்றனர். தற்போது TNPSC தொகுதி IV தேர்விற்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது.
கடந்த ஆண்டு இவ்வலுவலக தன்னார்வ பயிலும் வட்ட கட்டணமில்லா பயிற்சி வகுப்பில் பயிற்சி பெற்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட தொகுதி -IV தேர்வில் 14 மாணவர்களும், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட காவலர் தேர்வில் 3 மாணவர்களும் வெற்றி பெற்று அரசுப் பணிவாய்ப்பு பெற்றுள்ளனர்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் ஏப்ரல் மாதத்தில் அறிவிக்கப்படவுள்ள, தொகுதி | தேர்வு ஜூன் மாதத்தில் நடைபெறவுள்ளதாக டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.
இத்தேர்விற்குத் தயாராகி வரும் போட்டித் தேர்வாளர்கள் பயன்பெறும் வகையில், கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் எதிர்வரும் 13.03.2025 (வியாழக்கிழமை) முதல் தொடங்கப்பட்டுள்ளது.
இப்பயிற்சி வகுப்பு திங்கள் முதல் வெள்ளி வரை வார நாட்களில் பிற்பகல் 02.30 மணி முதல் மாலை 04.30 மணி வரை நடைபெறவுள்ளது.
இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவித்துள்ளார்.