Tamil Nadu Rain Updates: தமிழ்நாட்டையொட்டி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியிருக்கும் நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட், ஆரஞ்சு அலர்ட் கொடுத்துள்ளது என்பதை இங்கு காணலாம்.
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று மற்றும் நாளை எங்கெல்லாம் அதி கனமழை, கனமழைக்கான வாய்ப்புள்ளது என்ற விவரங்களை வெளியிட்டுள்ளது. தீபாவளி முடிந்து ஊர் திரும்பும் மக்கள் இதை அறிந்து எச்சரிக்கையுடன் பயணம் மேற்கொள்ளவும்.
1/8தென்மேற்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக இன்று (அக். 21) வலுப்பெற்றது.
2/8அடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழ்நாடு, தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளை நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், ஏற்கனவே பல மாவட்டங்களில் பெய்து வரும் மழை மேலும் வலுப்பெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
3/8இதனை தொடர்ந்து, சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளுக்கு ரெட் மற்றும் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் அதிகனமழைக்கு வாய்ப்பிருக்கும், அதாவது 24 மணிநேரத்தில் 204.4 மிமீ அளவுக்கு மழை பெய்யும். ஆரஞ்சு அலர்ட் என்பது 24 மணிநேரத்தில் 115.6 மிமீ முதல் 204.மிமீ அளவுக்கு மழைக்கு வாய்ப்புள்ளது எனலாம்.
4/8விழுப்புரம், கடலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 8 மாவட்டங்களில் இன்று (அக். 21) ரெட் அலர்ட் விடுவிக்கப்பட்டுள்ளது. அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
5/8அதேநேரத்தில் நாளை (அக். 22) செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களுக்கும், புதுச்சேரிக்கும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த மாவட்டங்களில் நாளை அதிகனமழைக்கு வாய்ப்புள்ளது.
6/8சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய 10 மாவட்டங்களில் இன்று (அக். 21) ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
7/8சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 11 மாவட்டங்களுக்கும், காரைக்காலுக்கும் நாளை (அக். 22) ஆரஞ்ச் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
8/8சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் நாளை மறுதினமும் (அக். 23) ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு இன்று முதல் மூன்று நாள்களுக்கு கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.