Chennai Super Kings: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ரவீந்திர ஜடேஜாவை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு கொடுப்பதற்கான மூன்று முக்கிய காரணங்களை இங்கு விரிவாக காணலாம்.
CSK RR Trade: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஜடேஜாவையும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சஞ்சு சாம்சனையும் டிரேட் செய்கிறது. இவர்கள் இருவருக்கும் சம்பள தொகை ரூ.18 கோடியாகும். எனவே, இவர்களது டிரேட் ஐபிஎல் வரலாற்றில் குறிப்பிடத்தகுந்த ஒன்றாகும்.
ஐபிஎல் டிரேடிங் பேச்சுவார்த்தை தற்போது சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. அதில் சஞ்சு சாம்சன் - ரவீந்திர ஜடேஜா டிரேட் ஏறத்தாழ உறுதியாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் இடையே இந்த இரு வீரர்களையும் பரஸ்பரம் டிரேட் செய்ய உடன்பாடு எட்டிவிட்டதாகவும், இதன் இறுதி முடிவு விரைவில் அறிவிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
அந்த வகையில், ரவீந்திர ஜடேஜாவை சிஎஸ்கே, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு தாரைவார்ப்பதற்கான மூன்று முக்கிய காரணங்களை இங்கு காணலாம்.
ஒயிட்-பால் விளையாடவில்லை: ரவீந்திர ஜடேஜா டி20ஐ பார்மட்டில் இருந்து கடந்த 2024ஆம் ஆண்டிலேயே ஓய்வுபெற்றுவிட்டார். ஓடிஐ போட்டியில் இருந்து தற்போதைக்கு ஓரங்கப்பட்டுள்ளார். இனி இவர் வொயிட் பால் கிரிக்கெட் விளையாடுவதே குறைந்துவிடும் என்பதால் சிஎஸ்கே இவருக்கு பதில் இன்னொரு ஆல்-ரவுண்டரை எடுக்கலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கலாம்.
பேட்டிங்கில் ஏற்பட்ட தொய்வு: ரவீந்திர ஜடேஜா கடந்த இரண்டு ஐபிஎல் சீசன்களாக பேட்டிங்கில் பெரியளவுக்கு காத்திரமாக செயல்படவில்லை. ஓரிரு போட்டிகளில் அவர் சிறப்பான இன்னிங்ஸை கட்டமைத்து விளையாடியிருக்கிறார் என்றாலும் அழுத்தம் நிறைந்த தருணங்களில் பலமுறை சோபிக்கத் தவறியிருக்கிறார். எனவே, மிடில் ஆர்டரில் வேறு அதிரடி வீரரை பொருத்துவதற்காகவும் சிஎஸ்கே இந்த முடிவை எடுத்திருக்கலாம்.
பிரீமியம் ஸ்பின்னராகிவிட்ட நூர் அகமது: ரவீந்திர ஜடேஜா கடந்த சீசனில் பல போட்டிகளில் தனது 4 ஓவர் கோட்டாவை முழுமையாக வீசாமல் இருந்திருக்கிறார். 2024இல் ருதுராஜ் இதை செய்தாலும், 2025இல் தோனி கேப்டன்ஸியில் ஒரு சில போட்டிகளிலும் இந்த போக்கை காண முடிந்தது. சேப்பாக்கத்தில் கூட ஜடேஜா முழுமையாக பந்துவீசவில்லை. காரணம் மிடில் ஓவர்களில் நூர் அகமது, அஸ்வின் ஆகியோர் ஆக்கிரமித்ததால் அவர் வீசவில்லை எனலாம். அஸ்வின் தான் இப்போது இல்லையே என நீங்கள் கூறினாலும் பிரீமியம் ஸ்பின்னராக நூர் அகமது கிடைத்துவிட்ட பிறகு பேட்டிங் ஆல்-ரவுண்டரே சிஎஸ்கேவுக்கு தேவையாக இருக்கிறது. இதனாலும் அவரை விடுவித்திருக்கலாம்.
2022இல் சிஎஸ்கேவின் கேப்டன்ஸியை பெற்ற ஜடேஜா, அதே தொடரிலேயே அந்த பதவியை இழந்தார். இது பெரியளவு விமர்சிக்கப்பட்டது. அதன்பின் தோனியும், ருதுராஜ் மட்டுமே கேப்டன்ஸி பொறுப்பை வகித்து வருகின்றனர். ஜடேஜா தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் சென்றால் கேப்டன்ஸி வாய்ப்பு கிடைக்க சிறு வாய்ப்பு உள்ளது. அங்கும் ரியான் பராக், ஜெய்ஸ்வால் இடையே போட்டி இருக்கிறது எனலாம்.
ஜடேஜாவை விடுவிக்க 100 காரணங்கள் இருந்தாலும், சிஎஸ்கே அவரை விடுவிக்காமல் இருப்பதே ரசிகர்களின் விருப்பமாக உள்ளது. 2023இல் கோப்பையை வென்றுகொடுத்த ஜடேஜாவை, தோனி தூக்கிக் கொண்டாடும் அந்த அற்புத தருணத்தையும், நினைவையும் இந்த டிரேடிங் நீர்த்துப்போகச் செய்துவிடும் என்பதே ரசிகர்களின் மனவோட்டமாக இருக்கிறது.