கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பெயர்கள் நீக்கப்படுவது ஏன்?
தமிழ்நாடு அரசு பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் கலைஞர் உரிமைத் தொகை (Kalaingar Magalir Urimai Thogai) திட்டத்தில் வழங்குகிறது. அரசு கணக்கின்படி சுமார் 1 கோடியே 16 லட்சம் பெண்கள் இந்த திட்டத்தின் கீழ் பயனாளிகளாக இருக்கின்றனர். வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் என்பது உள்ளிட்ட பல்வேறு அளவுகோல்களின்படி கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் சேர்க்கப்படுகின்றனர்.
ஆண்டுக்கு 2.5 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டும் குடும்பங்கள், 5 ஏக்கருக்கு மேல் நன்செய் நிலங்கள், 10 ஏக்கருக்கு மேல் புன்செய் நிலங்கள் வைத்திருப்பவர்கள், ஆண்டுக்கு 3600 யூனிட்டிற்கும் அதிகமாக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்கள் ஆகியோர் இந்த திட்டத்தில் பயனாளிகளாக சேர்க்கப்படமாட்டார்கள்.
கார் உள்ளிட்ட வாகனங்கள் வைத்திருக்கக்கூடாது என்பது உள்ளிட்ட இதுதவிர இன்னும் சில வரையறைகளும் இருக்கின்றன. இந்த அளவுகோல்களை தமிழ்நாடு அரசு மாதந்தோறும் கண்காணித்து வருகிறது.
அதனடிப்படையில், வருவாய்த்துறை உதவியுடன் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பயனாளிகள் இறந்தால் அவர்களின் பெயர் உடனடியாக இந்த திட்டத்தில் இருந்து நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படாது. அந்த வீட்டில் வேறொரு மகளிர் தகுதிவாய்ந்தவராக இருந்தால் முறைப்படி புதிதாக விண்ணப்பித்து கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற்றுக் கொள்ளலாம்.
சம்பந்தப்பட்ட வருவாய் அலுவலகத்துக்கு நேரில் சென்று இது குறித்து தகவல்களை தெரிவித்தால் கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிய பயனாளியை சேர்ப்பது குறித்த வழிமுறையை தெரிவிப்பார்கள். அதனடிப்படையில் இணைந்து கொள்ளலாம்.
இதுதவிர புதிதாக கார் வாங்கியிருப்பவர்கள், ஆண்டு வருமானம் உயர்வு, ஜிஎஸ்டி வரி கட்டும் வரம்பு அதிகரிப்பு ஆகிய காரணங்களுக்காகவும், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மாதம் ஆயிரம் ரூபாய் பெற்று வந்த பெண்கள் புதிதாக அரசு வேலையில் இணைந்திருந்தால் அவர்களின் பெயர் நீக்கப்படும்.
அண்மையில் இந்த தகவல்களின் அடிப்படையில் சுமார் 1.27 லட்சம் பெண் பயனாளிகளை தமிழ்நாடு அரசு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் இருந்து நீக்கியுள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் தகுதிகளை மீறும் வகையில் நீங்களும் இருந்தால் உங்களின் பெயரும் நீக்கப்படும்.
இதுதவிர தகுதியற்ற பெண்கள் யாராவது கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயன்பெற்று வந்தால் அவர்கள் குறித்து ஆன்லைனில் புகார் அளிக்கவும் முடியும். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் அதிகாரப்பூர்வ பக்கத்துக்கு சென்று உங்களின் பெயர், தொலைபேசி எண் கொடுத்து, தகுதியற்ற பெண் பயனாளி குறித்த தகவல்களை பதிவு செய்ய வேண்டும்.
அதனடிப்படையில் அதிகாரிகள் நேரடியாக கள ஆய்வு செய்து, உண்மை இருந்தால் அந்த பெண் பயனாளியின் பெயர் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் இருந்து நீக்கப்படும்.