NPS Calculator: தேசிய ஓய்வூதிய திட்டத்தில் இந்த முறையில் நீங்கள் முதலீடு செய்தால், மாதாமாதம் ரூ.88,915 பென்ஷனாக பெறலாம். இதன் முழு கணக்கீட்டையும் இங்கு காணலாம்.
தேசிய ஓய்வூதிய திட்டம் என்பது நீங்கள் ஓய்வுபெறும் போது பெரியளவில் தொகையை கையில் வைத்திருக்க வழிவகை செய்யும் திட்டமாகும். இதில் உங்களின் இளமை காலத்தில் இருந்தே முதலீடு செய்து வந்தால், நீங்கள் ஓய்வுபெறும் காலத்தில் கோடிக்கணக்கில் பணத்தை திரட்டலாம்.
தேசிய ஓய்வூதிய திட்டம் என்பது அனைவருக்கும் எளிமையாக கட்டுப்பிடியாகும் முதலீட்டுத் திட்டமாகும். பாதுகாப்பான திட்டமும் கூட... நீங்கள் குறைந்த தொகையை முதலீடு செய்வதன் மூலமும் கோடிக்கணக்கில் நிதியை சேமிக்கலாம்.
இந்த முதலீட்டுத் திட்டத்தில் தனியார் துறை பணியாளர்களுக்கும் உத்தரவாதமான ஓய்வூதியம் கிடைக்கும். மேலும் இதில் இவர்களுக்கு வரி சலுகையையும் பெற்றுத் தரும். ஓய்வுக்கு பின்னர் உங்களுக்கு நிதி பாதுகாப்பு அளிக்கும் திட்டமாக இது உள்ளது.
உங்களின் எதிர்காலம் சிறப்பானதாக இருக்க வேண்டும் என நினைத்தால் இப்போதே NPS திட்டத்தில் முதலீடு செய்யத் தொடங்கலாம். அதே நேரத்தில் முதலீடு செய்வதற்கு முன்பு இதன் கணக்கீடுகளையும் முழுமையாக தெரிந்துகொள்ள வேண்டும்.
ஓய்வுக்கு பின் உங்களது கைகளில் ரூ.2 கோடிக்கு மேல் நிதி இருக்க வேண்டும் என்றால், மாதம் பெரிய தொகையை பென்ஷனாக பெற வேண்டும் என்றால் எப்போது இருந்து, எவ்வளவு தொகையை இந்த திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்பது குறித்து இங்கு விரிவாக காணலாம்.
இந்த திட்டத்தில் 25 வயதில் இருந்து முதலீடு செய்து வருவது பெரிய பலனை கொடுக்கும். 25 வயதில் இருந்து 60 வயதுவரை, அதாவது ஓய்வு பெறும் வரை மாதாமாதம் ரூ.10 ஆயிரத்தை முதலீடு செய்து வந்தால், கூட்டு வட்டியின் மூலம் கோடிக்கணக்கில் உங்கள் கணக்கில் தொகை சேர்ந்துவிடும். ஓய்வு காலம் குறித்தோ, உங்களின் வருங்கால தலைமுறையினரின் நிலை குறித்தோ கவலைப்பட வேண்டாம்.
உங்களின் 35 ஆண்டுகால முதலீட்டில் சுமார் ரூ.42 லட்சத்தை சேர்த்திருப்பீர்கள். உங்களுக்கு ஆண்டுக்கு 9% வட்டி வருவாய் கிடைக்கும். இதன்மூலம், உங்களது 60 வயதில் உங்களின் கணக்கில் ரூ.2.96 கோடி சேர்ந்திருக்கும்.
இந்த ரூ.2.96 கோடியில் 40% தொகையை, அதாவது ரூ.1.18 கோடியை நீங்கள் கையில் எடுத்துக்கொள்ளலாம். மீதமுள்ள ரூ.1.78 கோடி உங்கள் கணக்கிலேயே ஆண்டுத்தொகையாக இருக்கும். இதன்மூலம், மாதாமாதம் ரூ.88,915 பென்ஷனாக பெறுவீர்கள்.
உங்களின் கணக்கில் எவ்வளவு அதிகமாக ஆண்டுத்தொகை இருக்கிறதோ, அவ்வளவு அதிகமாக பென்ஷன் வரும். 40% ஆண்டுத்தொகையை கணக்கில் வைத்திருக்க வேண்டியது கட்டாயம் ஆகும். நீங்கள் 60% தொகையை வெளியில் எடுக்கும்போது, அதற்கும் வரி செலுத்த வேண்டும். எனவே, 40% தொகையை எடுத்துக்கொண்டு, 60% தொகையை கணக்கிலேயே வைத்திருப்பதால் பென்ஷனும் அதிகரிக்கும், வரியும் குறையும்.
பொறுப்பு துறப்பு: இவை வாசகர்களின் தகவலுக்காக எழுதப்பட்டவை. இதில் முதலீடு செய்வதற்கு முன் உங்களின்நிதி சார்ந்த ஆலோசகருடன் ஆலோசனை மேற்கொள்ள வேண்டும். இவை எதற்கும் ஜீ நியூஸ் (Zee Tamil News) பொறுப்பேற்காது.