)
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி மூன்று வாரங்களைக் கடந்தும், இன்னும் அங்கு முழுமையான அமைச்சரவை அமையாமலும், சட்டசபை கூடாமலும் இருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏப்ரல் 9-ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸின் ரங்கசாமி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) 30 இடங்களில் 18 இடங்களைக் கைப்பற்றி மகத்தான வெற்றியைப் பதிவு செய்தது.
இதனைத் தொடர்ந்து, மே 13-ஆம் தேதி முதல்வராக ரங்கசாமியும், அவருடன் நமசிவாயம் மற்றும் மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோரும் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். மேலும் அதிமுகவின் மூத்த தலைவர் ஏ. அன்பழகன் தற்காலிக சபாநாயகராக (Pro-tem Speaker) நியமிக்கப்பட்டு, புதிய எம்.எல்.ஏ-க்களுக்குப் பதவிப் பிரமாணமும் செய்து வைத்தார். ஆனால் இதோடு புதுச்சேரி அரசியல் நகர்வுகள் அப்படியே முடங்கிக் கிடக்கின்றன.
கடந்த முறை போலவே இம்முறையும் அமைச்சரவை பங்கீட்டிலும், சபாநாயகர் நாற்காலியைக் கைப்பற்றுவதிலும் என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடுமையான பனிப்போர் நடந்து வருகிறது.
கடந்த ஆட்சியில் சபாநாயகர் பதவியை வகித்த பாஜக, இந்த முறையும் அதே பதவியைத் தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று டெல்லி மேலிடம் மூலம் அழுத்தம் கொடுத்து வருகிறது. ஆனால் முதல்வர் ரங்கசாமியோ இந்த முறை சபாநாயகர் பதவியை தனது என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே வைத்திருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.
பதவியேற்ற அமைச்சர்களுக்கு இன்னும் இலாக்காக்கள் (Portfolios) ஒதுக்கப்படவில்லை. இது தவிர மீதமுள்ள 3 அமைச்சர் பதவிகளை யாருக்குக் கொடுப்பது என்பதிலும் கூட்டணிக்குள் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை. இது குறித்து பாஜவினர் கூறுகையில், "அமைச்சரவை விரிவாக்கம் மற்றும் இலாக்கா ஒதுக்கீடு தொடர்பான இறுதி முடிவை பாஜக தேசிய தலைமை, முதல்வர் ரங்கசாமியுடன் கலந்தாலோசித்து விரைவில் அறிவிக்கும்" எனத் தெரிவித்துள்ளனர்.
புதுச்சேரி தேர்தல் களம் சூடுபிடிப்பதற்கு முன்பிருந்தே என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே தொகுதிப் பங்கீட்டில் ஏகப்பட்ட முரண்பாடுகள் இருந்தன. ஒருகட்டத்தில் ரங்கசாமி பேச்சுவார்த்தையைப் புறக்கணிக்கும் அளவுக்குச் சென்றார். பின்னர் பாஜக சமரசம் பேசி கூட்டணியைத் தக்கவைத்தது.
இந்தச் சூழலில், பாஜக தனது தன்னிச்சையான முடிவால் லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டினை (Jose Charles Martin) தங்களது கூட்டணியில் இணைத்துக் கொண்டது. ஆரம்பத்தில் இந்த இணைப்பை ரங்கசாமி விரும்பவில்லை என்று கூறப்பட்டது. ஆனால் தேர்தலில் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அவர் ரங்கசாமியை நேரில் சந்தித்து வாழ்த்தும் பெற்றார்.
தேர்தலில் வெற்றி பெற்ற கையோடு, தற்போது ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தனக்கு அமைச்சரவையில் இடம் வேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பதாகத் தெரிகிறது. பாஜகவும் இவருக்கு ஆதரவாகப் பேசுவதால், ரங்கசாமி கடும் அதிருப்தியில் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் முணுமுணுக்கின்றன.
தேர்தல் முடிந்து இத்தனை நாட்களாகியும் சட்டசபை முறையாகக் கூடாமல் இருப்பதும், மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான இலாக்காக்கள் ஒதுக்கப்படாமல் இருப்பதும் புதுச்சேரி மக்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த முறையும் இதே போன்ற ஆரம்பக்கட்ட குளறுபடிகள் நீடித்தாலும், சில நாட்களிலேயே இரு கட்சிகளும் சமரசத்திற்கு வந்தன. எனவே தற்போதைய அதிகாரப் போட்டியும் இன்னும் ஓரிரு தினங்களில் முடிவுக்கு வரும் என்றும், டெல்லி தலைமையின் தலையீட்டிற்குப் பிறகு புதுச்சேரி அமைச்சரவை முழு வடிவம் பெற்று சட்டசபை கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.