)
Puducehrry School Reopening: கோடை விடுமுறை முடியும் நேரம் வந்துவிட்டது. மீண்டும் பள்ளிக்கு செல்லும் ஆர்வத்துடன் காத்திருக்கும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாணவர்களுக்கு ஒரு முக்கியமான செய்தி வெளியாகியுள்ளது. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் ஜூன் 1-ம் தேதிக்கு பதிலாக, ஜூன் 4-ம் தேதி (04.06.2026) திறக்கப்படும் என்று முதல்வர் என். ரங்கசாமி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இனிமையான விடுமுறை நாட்களைக் கழித்துவிட்டு வகுப்பறைக்குத் திரும்பத் தயாரான மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் இந்த அறிவிப்பு தற்காலிகமாக ஒரு நிம்மதியைத் தந்துள்ளது. பள்ளிக்கு செல்லும் ஆர்வம் அனைவருக்கும் உள்ள போதிலும், கோடை வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருப்பதால், பள்ளிகள் திறப்பதில் ஏற்பட்டுள்ள இந்த தாமதம் சற்று நிவாரணத்தையே அளித்துள்ளது.
புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகள் புவியியல் ரீதியாகத் தமிழகத்துடன் இணைந்து காணப்படுவதால், கல்வித்துறை முடிவுகளிலும் பெரும்பாலும் ஒரு ஒற்றுமை இருக்கும். தமிழகத்தில் வெயிலின் கொடுமை காரணமாகப் பள்ளிகள் திறப்பு ஜூன் 4-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. இதன் பிறகு புதுச்சேரியிலும் இந்த அறிவிப்பு வரக்கூடும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. புதுச்சேரியிலும் காரைக்காலிலும் என்ன முடிவு எடுக்கப்படும் என்ற கேள்வி பரவலாக எழுந்தது.
இந்த நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் ரங்கசாமியிடம் இது குறித்துக் கேட்கப்பட்டது. அப்போது அவர், "வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருப்பதால், மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அரசுப் பள்ளிகள் ஜூன் 4-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது" என்று தெளிவாகத் தெரிவித்தார்.
முன்னதாக, அரசுப் பள்ளிகள் ஜூன் 1-ம் தேதியும், தனியார் பள்ளிகள் ஜூன் 4 மற்றும் 5-ம் தேதிகளிலும் திறக்கப்படும் என்று மாறுபட்ட அறிவிப்புகள் இருந்தன. எனினும், அரசின் தற்போதைய அதிரடி உத்தரவால், புதுச்சேரியில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் என அனைத்துமே ஜூன் 4-ம் தேதி முதல் ஒன்றாகத் திறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதுச்சேரியில் பள்ளி திறப்பு 3 நாட்கள் தள்ளிப் போயிருக்கலாம். ஆனால், வெயிலின் தாக்கம் இன்னும் சில நாட்களுக்கு நீடிக்க வாய்ப்புள்ளது. ஆகையால், பள்ளிகள் திறந்த பிறகும் குழந்தைகள் சில முக்கிய விஷயங்களை கடைபிடிப்பதை பெற்றோர்கள் உறுதி செய்ய வேண்டியது அவசியமாகும்.