அகமதாபாத் விமான விபத்து: படிக்க லண்டன் சென்ற ஆட்டோ ஓட்டுநர் மகள், மனதை பிசையும் தந்தையின் வீடியோ

Ahmedabad Air India Plane Crash: அன்று காலை சுமார் 10 மணிக்கு, பாயலுக்கு பிரியாவிடை அளித்துவிட்டு, அவர் லண்டனின் கேட்விக் விமான நிலையத்தை பாதுகாப்பாக அடைந்து, படிப்பில் சேர்ந்து, சிறந்த மாணவியாக பரிமளிக்கவுள்ளார் என்ற இன்ப கனவுகளுடன் அவரது குடும்பத்தினர் வீடு திரும்பினர்

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 14, 2025, 05:02 PM IST
  • அகமதாபாத் விமான விபத்து.
  • காற்றில் கரைந்த கனவுகள்.
  • கவலையில் மூழ்கிய குடும்பம்.
அகமதாபாத் விமான விபத்து: படிக்க லண்டன் சென்ற ஆட்டோ ஓட்டுநர் மகள், மனதை பிசையும் தந்தையின் வீடியோ

Ahmedabad Air India Plane Crash: இரண்டு நாட்களுக்கு முன்னர் குஜராத்தின் அகமதாபாத்தில் நடந்த விமான விபத்து நாட்டையே உலுக்கிப்போட்டுள்ளது. இதில் உயிர் இழந்தவர்களின் கதைகளை கேட்கும்போது வாழ்க்கை என்பது நிச்சயமற்ற ஒன்று என்ற உண்மை மீண்டும் ஒரு முறை நம் காதுகளில் உரக்க ஒலிக்கிறது. இந்த கோர விபத்தில் உயிர் நீத்தவர்களுக்காக கவலைப்படுவதா அல்லது அவர்களை இழந்து தவிக்கும் குடும்பங்களுக்காக வருத்தபடுவதா என தெரியவில்லை.

விமான விபத்தில் உயிர் இழந்தவர்களில் ஒரு பெண்தான் பாயல் காதிக். ககுஜராத்தின் ஹிமாத்நகரைச் சேர்ந்த இந்த இளம் பெண்ணிலன் தந்தை லோடிங் ஆட்டோ ஓட்டுகிறார். வியாழக்கிழமை காலை நாட்டை விட்டு முதல் முறையாக, அதுவும் மேல் படிப்பு படிக்க செல்லும் மகிழ்சியோடு அவர் விமானத்தில் ஏறினார். அவர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் முதுகலைப் பட்டம் படிக்க இங்கிலாந்துக்குச் சென்று கொண்டிருந்தார். அவரது குடும்பத்தில் இந்த அளவிற்கு படித்த முதல் பெண் அவர் என அவரது உறவினர்கள் கூறுகிறார்கள். 

அன்று காலை சுமார் 10 மணிக்கு, பாயலுக்கு பிரியாவிடை அளித்துவிட்டு, அவர் லண்டனின் கேட்விக் விமான நிலையத்தை பாதுகாப்பாக அடைந்து, படிப்பில் சேர்ந்து, சிறந்த மாணவியாக பரிமளிக்கவுள்ளார் என்ற இன்ப கனவுகளுடன் அவரது குடும்பத்தினர் வீடு திரும்பினர். ஆனால், சில நிமிடங்களுக்கு பிறகு மிகப்பெரிய விமானப் பேரழிவு நடந்தது. போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானமான ஏர் இந்தியா விமானம் AI-171, அகமதாபாத்தில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானது.

விமானம் மாணவர்கள் விடுதியில் விழுந்தது. பாயல் உட்பட இருநூற்று எழுபத்து நான்கு பேர் கொல்லப்பட்டனர். 11A இருக்கையில் இருந்த ஒரு பயணி மட்டுமே உயிர் தப்பினார்.

பாயல் குடும்பத்தினர் ஸ்தம்பித்தனர். அவருடைய மரணம் டிஎன்ஏ பகுப்பாய்வு மூலம் உறுதிப்படுத்தப்பட்டது. விமான விபத்து எப்படி நடந்தது? ஏன் நடந்தது. இந்த கேள்விகள் எதுவும் அவர்களுக்கு இல்லை. எதையும் கேட்க அவர்களுக்கு தோன்றவில்ல. பாயல் இறந்துவிட்டாள்!! வேறு எதை தெரிந்துகொண்டு என்ன செய்வது?

"கல்லூரி படிப்பை முடித்த பிறகு, அவள் எங்களுடன் தங்கினாள். அவள் லண்டனில் மேலும் படிக்க விரும்பினாள். அதனால் அவளுடைய கல்விக்கு உதவ நாங்கள் கடன் வாங்கி அவளை அங்கு அனுப்பினோம்" என்று அவரது தந்தை சுரேஷ் காதிக் ANI இடம் கூறினார்.

பாயல் நன்றாக படித்து, நல்ல வேலையில் சேர்ந்து குடும்பத்தை ஏழ்மையிலிருந்து மீட்பார் என்ற கனவில் பாயலின் தந்தை இருந்தார். இந்த நம்பிக்கையில் கடன் வாங்கினார். இப்போது கடன் மட்டுமே மிஞ்சியுள்ளது, பாயல் போய்விட்டார்!!

"எங்கள் குடும்பத்தில் இருந்து வெளிநாடு சென்ற முதல் உறுப்பினர் அவள். அவள் லண்டனுக்குச் சென்று கொண்டிருந்தாள். அவள் உதய்பூரில் இருந்து பிடெக் முடித்து எம்டெக் படிக்கச் சென்றாள். ஆனால் இப்போது நடந்துள்ள இந்த துயர சம்பவத்தால் எங்கள் குடும்பம் மிகவும் வருத்தத்தில் உள்ளது..." என்று அவரது உறவினர் பாரத் சவுகான் செய்தி நிறுவனமான IANS இடம் கூறினார்.

ராஜஸ்தானின் உதய்பூரைச் சேர்ந்த பாயலை பலரும் "மிகவும் நல்ல பெண்" என்று பாராட்டுகிறார்கள். 6 ஆண்டுகளாக பாயல் தன் மகனுக்கு ட்யூஷன் எடுத்து வருவதாக கூறும் சுஷிலா பதக், அவர் புத்திசாலியாக இருப்பதோடு அனவரிடமும் பாசத்துடன் பழகும் தன்மை கொண்டவர் என கூறுகிறார். ஹிமத்நகரில் உள்ள ஆதர்ஷ் பள்ளியில் முதலாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை படித்த பாயல், ஹிமத் உயர்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பை முடித்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன.

"பாயல் அறிவாளி. அவளுக்கு உடன் பிறந்தவர்கள் இருக்கின்றனர். அவளுடைய தந்தை ஒரு ஓட்டுநர். ஆனால் அவளுடைய குடும்பத்தின் நிதி நிலைமை நன்றாக இல்லை," என்று சுஷிலா பதக் கூறினார். 30 நாட்களுக்கு முன்பு, இங்கிலாந்துக்குச் செல்வதற்கு முன்பு தனது மகனுக்கு கடைசியாக பாயல் பாடம் நடத்தியதாகவும் அப்போதுதான் அவர் பாயலை கடைசியாக சந்தித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

பாயல் மாணவர்களுக்கு ட்யூஷன் எடுத்து தன் குடும்பத்திற்கு பொருளாதார ரீதியாக உதவியதாகவும், அவர் இல்லாதது ஏற்கனவே நிதி நெருக்கடியில் இருக்கும் அந்த குடும்பத்தை வெகுவாக பாதிக்கும் என்றும் நெருங்கிய நண்பர்கள் தெரிவித்தனர். 

மேலும் படிக்க | அகமதாபாத் விமான விபத்து: நடந்தது என்ன?; அடுத்தது என்ன? - மத்திய அமைச்சர் முழு விளக்கம்

மேலும் படிக்க | மொட்டை மாடியில் கிடந்த பிளாக் பாக்ஸ்... அகமதாபாத் விமான விபத்து விசாரணையில் அடுத்தது என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News