)
Minister Sengottaiyan Photo Controversy: சேலத்தில் சுமார் 300 கோடி ரூபாய் நிதி மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் குற்றவாளி ஒருவர், தமிழக அரசின் நிதியமைச்சர் செங்கோட்டையனைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றதாகக் கூறப்படும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், இதற்கு நிதியமைச்சர் செங்கோட்டையன் அதிகாரப்பூர்வமாக விளக்கமளித்துள்ளார்.
சேலத்தில் 'வின் ஸ்டார் இந்தியா சிட்டி டெவலப்பர்ஸ்' என்ற ரியல் எஸ்டேட் மற்றும் பல்வேறு தொழில் நிறுவனங்களை நடத்தி வந்தவர் சிவக்குமார். தன்னிடம் முதலீடு செய்பவர்களுக்குப் பணத்தை இரட்டிப்பாகத் தருவதாகக் கூறி, ஆயிரக்கணக்கான மக்களிடம் சுமார் 300 கோடி ரூபாய் வரை சுருட்டிக்கொண்டு திடீரென தலைமறைவானார்.
இதுகுறித்து சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சிவக்குமார் உட்பட 30 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தீவிரமாகத் தேடி வந்தனர். இதற்கிடையில் சிவக்குமார் வாங்கிய முன்ஜாமீனையும் சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததால், போலீசார் அவரைத் தீவிரமாகக் கண்காணித்து வந்தனர்.
பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுக்குப் பணம் கிடைக்காததால், சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் கழுத்தில் மனுக்களைத் தொங்கவிட்டபடி திரண்டனர். அப்போது அவர்கள் ஒரு அதிரடிப் புகாரை முன்வைத்தனர்.
போலீசாரால் தேடப்பட்டு வரும் குற்றவாளி சிவக்குமார், தற்போதைய நிதியமைச்சர் செங்கோட்டையனைச் சந்தித்து, அவருக்குப் பொன்னாடை போர்த்தி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். மேலும் அவர் ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்துவிட்டதாகத் தனது சமூக வலைதள பக்கங்களிலும் வீடியோக்கள் வெளியாகி வைரலானது. போலீசாரால் தேடப்படும் ஒரு குற்றவாளிக்கு அமைச்சர் பொன்னாடை போர்த்தி வரவேற்பதா? என்று பாதிக்கப்பட்ட மக்கள் கொந்தளித்தனர்.
இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்திலும், சமூக ஊடகங்களிலும் காட்டுத்தீயாய் பரவியதை அடுத்து, நிதியமைச்சர் செங்கோட்டையன் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தனது தரப்பு விளக்கத்தை வன்மையாகப் பதிவு செய்துள்ளார்.
இதுகுறித்து செங்கோட்டையன் வெளியிட்டுள்ள விளக்கத்தில்,
"நான் தமிழ்நாடு அரசின் அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டதற்காக, ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் என்னை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அந்தக் கூட்டத்தோடு கூட்டமாகத்தான் குறிப்பிட்ட நபர் (சிவக்குமார்) வருகை தந்துவிட்டுச் சென்றிருக்கிறார்.
இந்த நபருடன் எனக்கு முன்பின் எந்தவிதமான அறிமுகமும் இல்லை. கூட்டத்தில் ஒருவராக வந்த ஒருவரை, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்ததாக முற்றிலும் பொய்யான தகவல் பரப்பப்பட்டு வருகிறது. வதந்திகளைப் பரப்பும் இந்தச் செயலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
நான் தமிழ்நாடு அரசின் அமைச்சராக பொறுப்பேற்றமைக்காக, ஆயிரக்கணக்கானோர் என்னை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அந்தக் கூட்டத்தோடு கூட்டமாக மேலே குறிப்பிட்ட நபர் வருகை தந்து சென்றிருக்கிறார். இந்த நபருடன் எனக்கு முன்பு எந்த அறிமுகமும் இல்லை. கூட்டத்தில் ஒருவராக வருகை தந்த ஒருவரை…
— K.A Sengottaiyan (@KASengottaiyan) May 20, 2026
அமைச்சரின் இந்த அதிரடி விளக்கத்தின் மூலம், இந்த விவகாரத்தில் அரசியல் ரீதியாகப் பரப்பப்பட்ட வதந்திகளுக்குத் தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் பொதுமக்களின் கோடிக்கணக்கான பணத்தைச் சுருட்டிய அந்த மோசடிப் பேர்வழியை போலீசார் எப்போது கைது செய்யப் போகிறார்கள்? பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது. மேலும் புதிதாக பொறுப்பேற்றுள்ள விஜய் தலைமையிலான தவெக அரசு அடுத்து என்ன செய்யப்போகிறது என்ற கேள்வியும் முன்வைத்து வருகின்றனர்.