)
Viral Story: பெங்களூருவை தளமாகக் கொண்ட ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் ஒருவர், ரெடிட்டில் உளவியல் ரீதியான துன்புறுத்தல் குறித்த ஒரு துயரமான அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். இது அவர் ராஜினாமா செய்த பிறகும் தொடர்ந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். பணியிட நச்சுத்தன்மையின் ஒரு மோசமான உதாரணமாக இந்த சம்பவம் நமக்கு அதிர்ச்சியை அளிக்கின்றது.
அவர் CEO அல்ல, சாத்தான்...
ஜூனியர் டேட்டா சயின்டிஸ்டாகப் பணிபுரிந்த ஊழியர், தனது தலைமை நிர்வாக அதிகாரி, தனக்கு ஏழு மாதங்களுக்கு இடைவிடாத உணர்வுப்பூர்வமான துன்புறுத்தலை அளித்ததாக கூறியுள்ளார். அந்த சிஇஓ -வை ஒரு "சாத்தான்" என்று அந்த ஊழியர் குறிப்பிட்டுள்ளார். தலைமை நிர்வாக அதிகாரிக்கு தொழில்நுட்ப பின்னணி இல்லை என்றாலும், அவர் தொடர்ந்து நம்பத்தகாத, சாத்தியமில்லாத காலக்கெடுவை விதித்தார் என்றும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஊழியர்களை அந்த CEO கடுமையாக திட்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்த தினசரி சித்திரவதைகள்
"தொழில்நுட்ப ரீதியாக அவருக்கு ஏதாவது புரியவில்லை என்றால் அவர் கோபத்தில் வெடிப்பார். அலறல், தனிப்பட்ட அவமானங்கள் - இவை எல்லாம தினசரி மன சித்திரவதைகளாக இருந்தன" என்று ஊழியர் எழுதியுள்ளார். வார இறுதி நாட்கள் உட்பட தினமும் 12-14 மணிநேர வேலை செய்த போதிலும், ஏழு மாதங்களில் இரண்டு நாட்கள் மட்டுமே சிக் லீவ் எடுத்த போதிலும், தனது அர்ப்பணிப்புக்கு எப்போதும் சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றும் விமர்சசங்கள் மட்டுமே கிடைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.
கூகிள் மீட் நடுவே ஏற்பட்ட மெடிகல் எமர்ஜென்சி
ஊழியர் ராஜினாமா செய்த ஒரு வாரத்திற்குப் பிறகு நடந்த ஒரு கூகிள் மீட்டின் போது நிலைமை அடுத்த நிலையை அடைந்தது. தலைமை நிர்வாக அதிகாரி, அந்த ஊழியரின் ரிபோர்டிங் மேனேஜரை காலில் இருந்து நீக்கி, ஊழியரை நேரடியாக ஆக்ரோஷமான கேள்விகளுடன் எதிர்கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக, மீட்டின் நடுவிலேயே ஊழியரின் உடல் நிலை பாதிக்கப்பட்டது. இது மெடிகல் எமர்ஜென்சிக்கு வழிவகுத்தது.
"என் நெஞ்சு இறுக்கமடைந்தது, மூச்சு விட முடியவில்லை, நான் என் நாற்காலியில் சரிந்தேன். என் அம்மா என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்," என்று அந்த ஊழியர் அந்த நாளை நினைவு கூர்ந்தார்.
நிறுவனத்தை விட்டு வெளியேறிய பிறகும் தொடர்ந்த துன்புறுத்தல்
நிறுவனத்தை விட்டு வெளியேறிய பிறகும், துன்புறுத்தல் தொடர்ந்ததாக அவர் குற்றம் சாட்டினார். HR டிபார்ட்மெண்ட் தலைவர் தனது மருத்துவ அவசரநிலையை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்றும், கடைசியாக தனக்கு கொடுக்க வேண்டிய தொகையை தொண்டு செய்வது போல கொடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். அவரது அனுபவக் கடிதம் நிறுத்தி வைக்கப்பட்டதாகவும், அவரது PF பரிமாற்றம் வேண்டுமென்றே தாமதப்படுத்தப்பட்டதாகவும், இவை எதிர்கால வேலை வாய்ப்புகளுக்கு தடையாக அமைந்ததாகவும் அவர் கூறினார்.
அந்த தலைமை நிர்வாக அதிகாரி 21 வயது இன்டர்ணையும் பலருக்கு முன்னிலையில் அசிங்கப்படுத்தி, அவரை அழவைத்ததாகவும் அந்த ஊழியர் தெரிவித்துள்ளர. அங்கு ஆழமாக வேரூன்றியுள்ள நச்சு கலாச்சாரத்தை இது பிரதிபலிக்கிறது.
கர்மா உங்களை சும்மா விடாது
"என்னை இன்னும் அந்த நினைவுகள் அச்சுறுத்துகின்றன. இது என் மன ஆரோக்கியத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது. இப்படிப்பட்டவர்கள் உளவியல் துன்புறுத்தல் செய்யும் அரக்கர்கள்" என்று அவர் எழுதியுள்ளார். இறுதியாக, "என்னை துன்புறுத்தியவர்களுக்கு சொல்கிறேன் - கர்மா என்று ஒன்று உள்ளது. அது உங்களைக் கண்டுபிடித்து உங்களிடம் வரும் என்று நம்புகிறேன்." என்றும் தெரிவித்துள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ