)
Vaikasi Visakam 2025: வைகாசி விசாகம் என்பது முருகக் கடவுள் அவதரித்தத் திருநாளாகும். வைகாசித் திங்களில் வரும் விசாக நாள் இதுவாகும். விசாகம் ஆறு நட்சத்திரங்கள் ஒருங்கு கூடியதொன்று. இதனால் முருகனும் ஆறு முகங்களோடு திகழ்பவர் என்பது நம்பிக்கை. இந்நாள் சோதி நாள் எனவும் அழைக்கப்படுவதுண்டு. உயிர்களுக்கு நேரும் இன்னலை நீக்கும் பொருட்டு சிவபெருமான் தனது ஐந்து முகங்கள் மற்றும் எவரும் காணாத ஆறாவது முகத்தின் நெற்றிக்கண்களிலிருந்து திருவிளையாடலாய் ஆறு குழந்தைகளை நெருப்பாக இந்நாளில் படைத்தார். அந்த ஆறுகுழந்தைகளே பின்னாளில் உமையம்மையின் அணைப்பால் ஒன்றாகி முருகன் எனப் பெயர் பெற்றது.
மக்கள், விலங்குகள், தாவரங்கள் எல்லாம் ஓருயிராகி இணைக்கப்பட்டிருக்கும் உண்மையை விளக்குதலே இந்நாளின் கருத்தாகும். இதனால் சைவர்கள் இந்நாளில் நோன்பிருத்து கோவில்களில் சிறப்பாகக் கொண்டாடுவர். காளிதாசர் இயற்றிய குமார சம்பவம் என்ற நூலில் முருகன் கார்த்திகை பெண்களுக்கு மகனாக அவதரித்தது தொடர்பான குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. வைகாசி மாத முழு நிலவு நாளன்று ஆறு குழந்தைகளாக அவதரித்த முருகன், ஆறுமுகன் என்று பெயர் பெற்றார்.
பல்வேறு பெருமைகள் பெற்ற வைகாசி மாதம் இறை வழிபாடுகளுக்கு உகந்த மாதமாக உள்ளது. சோமாஸ் கந்த தத்துவத்தில், சிவ பெருமான் தாணுவாக இருப்பதாகவும், அன்னை பராசக்தி கொடியாக இருப்பதாகவும், முருகப் பெருமான் விசாகமாக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
முருகனின் அறுபடை வீடுகளிலும், வைகாசி விசாகம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. விசாகம் குருவிற்குரிய நட்சத்திரம் என்பதால், குருவிற்கு உரிய தலமான திருச்செந்தூரில் வைகாசி விசாகம் பத்து நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
தென்திசையின் அதிபதியும், மரண தேவனுமான எம தர்மராஜனுக்கு உரிய நாள் வைகாசி விசாகம். வைகாசி விசாக நாளன்று எம தர்மராஜனை வழிபட்டால், நீள் ஆயுள் சித்திக்கும். வைகாசி விசாக நாளன்று சுவாமிமலை முருகனை வழிபட்டு ஆற்றல் பெற்றார் தேவர்களின் தலைவர் இந்திரன் என்று புராணங்கள் சொல்கின்றன. வைகாசி விசாக தினத்தில் திருச்செந்தூர் சுப்ரமண்ய திருக்கோயிலில், கர்ப்பகிரகத்தில் தண்ணீர் நிற்கும் படி வைத்து இறைவனுக்கு உஷ்ண சாந்தி உற்சவம் எனும் வெப்பம் தணிக்கும் விழா ஆண்டுதோறும் நடத்தப்படும்.
இது கோடைக்காலம் என்பதால், முருகனை குளிர்வித்தால், அவர் மனம் குளிர்ந்து உலகை குளிர்விப்பார் என்பது நம்பிக்கை.
இந்நாளில் முருகப்பெருமானை வழிபடுவதற்கு உரிய மந்திரங்கள், பதிகங்கள் முதலானவற்றை பாராயணம் செய்யலாம். திருப்புகழ், கந்தசஷ்டி கவசம் படிக்கலாம். மந்திரங்கள், பதிகங்கள் தெரியாதவர்கள் 'ஓம்' என்ற பிரணவ மந்திரத்தை ஜபிக்கலாம். முருகப்பெருமானுக்கு சர்க்கரைப் பொங்கல் அல்லது எலுமிச்சை சாதம் நைவேத்தியமாக படைத்து பிரார்த்தனை செய்யலாம். ஏழை, எளிய மக்களுக்கு எலுமிச்சை சாதம் வழங்குவது நன்மை உண்டாகும்.
(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ