)
Vaibhav Suryavanshi : தென்னாப்பிரிக்காவில், 19 வயதுக்குட்பட்டோருக்கான யூத் ஓடிஐ தொடர் நடக்கிறது. இதில், தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் ருத்ரதாண்டவம் ஆடினார் வைபவ் சூர்யவன்ஷி. சதமடித்ததும் மட்டுமல்லாமல் பல உலக சாதனைகளையும் அவர் படைத்தார். அடுத்த வாரம் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைத் தொடர் தொடங்கவுள்ள நிலையில், வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இந்திய அணி முதல் பேட்டிங்
பெனோனியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. ஆனால் அந்த முடிவு பேரிடியாக அமையும் என்று தென்னாப்பிரிக்கா அணி நினைத்துக்கூட பார்த்திருக்காது. இந்திய அணியின் வழக்கமான கேப்டன் ஆயுஷ் மத்ரே இல்லாததால், இந்தப் போட்டியில் கேப்டன் பொறுப்பை ஏற்றார் வைபவ் சூர்யவன்ஷி. தொடக்க வீரராகக் களம் இறங்கியது முதலே வைபவ் மற்றும் ஆரோன் ஜார்ஜ் ஆகிய இருவரும் தென் ஆப்பிரிக்க பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர்.
வைபவ் சூர்யவன்ஷி அதிரடி ஆட்டம்
குறிப்பாக வைபவ் சூர்யவன்ஷி ஆடிய ஆட்டம் அசுரத்தனமாக இருந்தது. வெறும் 63 பந்துகளில் சதம் விளாசிய அவர், ஒட்டுமொத்தமாக 73 பந்துகளில் 127 ரன்களைக் குவித்தார். இதில் 9 பவுண்டரிகளும், 10 மெகா சிக்ஸர்களும் அடங்கும். சூர்யவன்ஷி வயது இப்போது வெறும் 14 ஆண்டுகள் 9 மாதங்களே ஆகிறது. இப்போட்டியில் சதம் அடித்ததன் மூலம், யூத் ஒருநாள் போட்டி வரலாற்றில் சதம் விளாசிய மிக இளம் வயது கேப்டன் என்ற உலக சாதனையை வைபவ் சூர்யவன்ஷி படைத்துள்ளார்.
மறுபுறம் ஆரோன் ஜார்ஜூம் தனது பங்கிற்கு சதம் அடித்து அசத்தினார். இவர்கள் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 227 ரன்கள் குவித்து இமாலய சாதனை படைத்தனர். இதன் மூலம் கடந்த 2013-ஆம் ஆண்டு அங்குஷ் பெயின்ஸ் மற்றும் அகில் ஹெர்வாட்கர் ஜோடி படைத்திருந்த 218 ரன்கள் என்ற சாதனையை முறியடித்து, இந்திய யூத் ஒருநாள் போட்டிகளில் அதிகபட்ச தொடக்க பார்ட்னர்ஷிப் என்ற புதிய சரித்திரத்தை உருவாக்கினர். இந்திய அணி வெறும் 9 ஓவர்களிலேயே 100 ரன்களைக் கடந்துவிட்டது.
வைபவ் சூர்யவன்ஷி சாதனைகள்
வைபவ் சூர்யவன்ஷியின் இந்தச் சாதனைப் பயணம் இத்துடன் நின்றுவிடவில்லை. இந்தச் சதத்தின் மூலம் அவர் மற்றொரு அபூர்வ சாதனையை நிகழ்த்தியுள்ளார். இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம் (UAE), கத்தார் மற்றும் தற்போது தென் ஆப்பிரிக்கா என 6 வெவ்வேறு நாடுகளில் சதம் அடித்த வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். மேலும், 50 ஓவர் கிரிக்கெட் வடிவத்தில் 60 பந்துகளுக்கும் குறைவாக ஒன்றுக்கும் மேற்பட்ட சதங்களை விளாசிய ஒரே வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.
ரிஷப் பந்த் சாதனை முறியடிப்பு
ஏற்கனவே ஐபிஎல் ஏலத்தில் மிக இளம் வயதில் விற்கப்பட்ட வீரர் என்ற சாதனையைக் கொண்டுள்ள வைபவ், சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக வெறும் 15 பந்துகளில் அரைசதம் அடித்து ரிஷப் பண்ட்டின் சாதனையை முறியடித்தார். அதைத்தொடர்ந்து தற்போது சதம் அடித்து தனது அபார பார்மைத் தொடர்ந்து வருகிறார். உலகக் கோப்பைக்கு முன்பாக வைபவ் சூர்யவன்ஷி காட்டி வரும் இந்த அதிரடி ஆட்டம், இந்திய அணிக்கு மிகப்பெரிய பலத்தை அளிப்பதோடு எதிரணிகளுக்கு ஒரு எச்சரிக்கை மணியாகவும் அமைந்துள்ளது. விரைவில் இந்திய அணியில் சேர்க்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ