திக் திக் போட்டி... டெல்லி மாஸ் வெற்றி - ஆட்டத்தையே மாற்றிய 'இம்பாக்ட் பிளேயர்' அஷுடோஷ் சர்மா...

IPL 2025 DC vs LSG: ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்கு எதிரான லீக் போட்டியில் 1 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது.  

Written by - Sudharsan G | Last Updated : Mar 24, 2025, 11:56 PM IST
  • 210 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது லக்னோ
  • டெல்லி அணி 7 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது.
  • ஆனால், அஷூடோஷ் சர்மா ஆட்டத்தையே மாற்றிவிட்டார்.
திக் திக் போட்டி... டெல்லி மாஸ் வெற்றி - ஆட்டத்தையே மாற்றிய 'இம்பாக்ட் பிளேயர்' அஷுடோஷ் சர்மா...

IPL 2025 DC vs LSG: 2025ஆம் ஆண்டின் ஐபிஎல் தொடரில் 4வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் ஆந்திரா மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினத்தில் இன்றிரவு மோதின.

IPL 2025 DC vs LSG: மிரட்டிய மார்ஷ் - பூரன் ஜோடி

இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி கேப்டன் அக்சர் பட்டேல் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி அவர்களின் பேட்டிங் ஆர்டரில் மிட்செல் மார்ஷ், மார்க்ரம், பூரன், மில்லர் என 4 வெளிநாட்டவர்களுடன் களமிறங்கியது. பவர்பிளேவில் 64 ரன்களை லக்னோ குவித்தது. மார்க்ரம் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் அந்த பின் 2வது விக்கெட்டுக்கு பார்ட்னர்ஷிப் சேர்ந்த மிட்செல் மார்ஷ் - பூரன் ஜோடி அதிரடி காண்பித்தது. இந்த ஜோடி 87 ரன்கள் சேர்த்த நிலையில், மிட்செல் மார்ஷ் 72 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரிஷப் பண்ட் டக்அவுட்டானார்.

IPL 2025 DC vs LSG: ஆறுதல் அளித்த மில்லர்

தொடர்ந்து அடுத்த ஓவரிலேயே அதிரடி காண்பித்த பூரன் ஆட்டமிழந்தார். அவர் 30 பந்துகளில் 6 பவுண்டரிகள், 7 சிக்ஸர்களுடன் 75  ரன்களை குவித்திருந்தார். அதிலும் ஸ்டப்ஸ் வீசிய 13வது ஓவரில் 4 சிக்ஸர்களை பறக்கவிட்டது குறிப்பிடத்தக்கது. 

அடுத்து வந்த பதோனி 4, ஷர்துல் தாக்கூர் 0, ஷாபாஸ் அகமது 9, ரவி பிஷ்னோய் 0 எடுத்து ஆட்டமிழந்தனர். மறுமுனையில் நிலைத்து நின்ற டேவிட் மில்லர் கடைசி 2 பந்துகளில் சிக்ஸர் அடித்து ஆறுதல் அளித்தார். இதன்மூலம், லக்னோ 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் 209 ரன்களை அடித்தது. மில்லர் 19 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 1 பவுண்டரி என 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். டெல்லி அணி பந்துவீச்சில் ஸ்டார்க் 3, குல்தீப் யாதவ் 2, விப்ராஜ் நிகாம் மற்றும் முகேஷ் குமார் தலா 1 விக்கெட்டை எடுத்தனர்.

IPL 2025 DC vs LSG: சொதப்பலான தொடக்கம்

210 ரன்கள் என்ற இலக்கை நோக்கி பேட்டிங் செய்ய வந்த டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு சரியான தொடக்கம் கிடைக்கவில்லை. முதல் ஓவரிலேயே ஜேக் பிரேசர் மெக்கர்க் 1 ரன்னிலும், அபிஷேக் போரல் டக்அவுட்டாகியும் வெளியேறினர். அடுத்த ஓவரில் சமீர் ரிஸ்வி 4 ரன்களுக்கு ஆட்டமிழக்க, 1.4 ஓவர்களில் 7 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. அப்போது 4வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கேப்டன் அக்சர் பட்டேல் - துணை கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் ஜோடி 43 ரன்களை குவித்தது. அக்சர் பட்டேல் 22 ரன்கள் எடுத்து திக்வேஷ் ரத்தீ பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

IPL 2025 DC vs LSG: பந்தை மாற்றியதும் ஆட்டமிழந்த ஸ்டப்ஸ்

நிலைத்த நின்று விளையாடி வந்த பாப் டூ பிளெசிஸ் 29 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதாவது, 6.4 ஓவரில் 65 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து மேலும் தத்தளித்தது. அப்போது ஸ்டப்ஸ் உடன் இம்பாக்ட் வீரராக அஷூடோஷ் சர்மா களமிறங்கினார். இந்த ஜோடி 48 ரன்களை சேர்த்தது. மணிமாறன் சித்தார்த் வீசிய 13வது ஓவரில் முதலிரண்டு பந்துகளை சிக்ஸர்களுக்கு பறக்கவிட்டார், ஸ்டப்ஸ். இரண்டாவது சிக்ஸர் அடித்த பந்து தொலைந்துபோக, பயன்படுத்தப்பட்ட புதிய பந்து மணிமாறன் சித்தார்த்திடம் கொடுக்கப்பட்டது. அந்த 3வது பந்தை நன்றாக கிரீப் செய்து வீச, அந்த பந்தில் ஸ்டப்ஸ் போல்டாகி வெளியேறினார். அவர் 22 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 1 பவுண்டரியுடன் 34 ரன்களை அடித்திருந்தார்.

IPL 2025 DC vs LSG: அருமையாக கேமியோ ஆடிய விப்ராஜ் நிகாம் 

இதற்கு அடுத்து வந்த விப்ராஜ் நிகாம்தான் ஆட்டத்தை டெல்லியின் பக்கம் கொண்டுவந்தார் எனலாம். அப்போது அஷூடோஷ் சர்மா சற்றே அமைதியாக இருந்தார். விப்ராஜ் 15 பந்துகளில் 5 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 39 ரன்களை அடித்து விப்ராஜ் வீசிய 17வது ஓவரின் முதல் பந்தில் ஆட்டமிழந்தார்.

IPL 2025 DC vs LSG: விஸ்வரூபம் எடுத்த அஷூடோஷ் சர்மா

18வது ஓவரை ரவி பிஷ்னோய் வீசினார். அந்த ஓவரின் முதல் பந்திலும் ஸ்டார்க் ஆட்டமிழந்தார். ஆனால், அந்த ஓவரில் அஷூடோஷ் சர்மா விஸ்வரூபம் எடுத்தார். அந்த ஓவரின் கடைசி மூன்று பந்துகளில் 6,4,6 என 16 ரன்களை குவித்து மிரட்டினார். இதனால், கடைசி 12 பந்துகளில் டெல்லி அணி வெற்றிக்கு 22 ரன்களே தேவைப்பட்டது. கையில் 2 விக்கெட்டே இருந்தது. அந்த வகையில், 19வது ஓவரை பிரின்ஸ் யாதவ் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி வந்தது. 2வது பந்து டாட் ஆக, 3வது பந்தில் குல்தீப் யாதவ் ரன்அவுட்டானார். இதனால், டெல்லியிடம் கையில் 1 விக்கெட்டே இருந்தது. ஆனால், ஸ்ட்ரைக்கில் அஷூடோஷ் சர்மா வந்தார். அவர் கடைசி மூன்று பந்துகளில் 2,6,4 என 12 ரன்களை குவித்து அழுத்தத்தை லக்னோ பக்கம் திருப்பினார்.

IPL 2025 DC vs LSG: கடைசி ஓவரில் திக் திக்

கடைசி ஓவரில் 8 ரன்களே தேவைப்பட்டது. இந்த ஓவரை ஷாபாஸ் அகமது வீசினார். முதல் பந்து நன்றாக திரும்பி மோஹித் சர்மாவின் காலில்பட்டு பின்பக்கம் சென்றது. ஸ்டம்பிங் வாய்ப்பை தவறவிட்ட ரிஷப் பண்ட் எல்பிடபிள்யூவுக்கு அப்பீல் செய்தார். ஆனால் அது அவுட் இல்லை என்றாகிவிட்டது.

IPL 2025 DC vs LSG: 'இம்பாக்ட் வீரர்' அஷூடோஷ் சர்மா

2வது பந்தில் ஆப்-சைட் திசையில் பக்கத்தில் இருந்த ஆயுஷ் பதோனியிடம் அடித்துவிட்டு ஓடினார். ஆனால், பதோனி நல்ல ரன்அவுட் வாய்ப்பை தவறவிட்டார். 3வது பந்தில் சிக்ஸர் அடித்து அஷூடோஷ் சர்மா ஆட்டத்தை முடித்துவைத்தார். இதன்மூலம், 1 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி த்ரில் வெற்றி பெற்றது. லக்னோ பந்துவீச்சில் ஷர்துல் தாக்கூர், மணிமாறன் சித்தார்த், திக்வேஷ் ரத்தீ, ரவி பிஷ்னோய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். ஆட்ட நாயகனாக இம்பாக்ட் வீரர் அஷூடோஷ் சர்மா கைப்பற்றினார். அஷூடோஷ் சர்மா 31 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள் உடன் 66 ரன்களை அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | கே.எல். ராகுல் - அதியா ஷெட்டி தம்பதிக்கு பெண் குழந்தை.. குவியும் வாழ்த்துக்கள்

மேலும் படிக்க | சிஎஸ்கே ஏமாற்றி வென்றதா? சர்ச்சையில் சிக்கிய ருதுராஜ், கலில்.. பின்னணி என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News