)
Asia Cup 2025, Team India Squad: ஆசிய கோப்பை 2025 தொடருக்கான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. கேப்டனாக சூர்யகுமார் யாதவ் தொடர்கிறார். சுப்மான் கில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
மும்பையில் பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியா தலைமையிலான தேர்வுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் உள்பட பிற தேர்வுக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டார். இந்த கூட்டத்திற்கு பிறகே இந்திய அறிவிக்கப்பட்டது.
சுப்மான் கில் இடம்பெற்றுள்ளதால் அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் என ஓபனிங் ஸ்பாட்டில் மட்டும் மூன்று வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். பிளேயிங் லெவனில் மூன்று பேரும் இடம்பெற அதிக வாய்ப்புள்ளது. மிடில் ஆர்டரில் சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, அக்சர் பட்டேல், ரின்கு சிங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
சஞ்சு சாம்சனுக்கு பேக்அப் வீரராக ஜித்தேஷ் சர்மா எடுக்கப்பட்டுள்ளார். ஹர்திக் பாண்டியாவுக்கு பேக்அப் வீரராக சிவம் தூபே இடம்பிடித்துள்ளார். வேகப்பந்துவீச்சை பொருத்தவரை ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங் ஆகியோரும் இவர்களுக்கு பேக்அப்பாக ஹர்ஷித் ராணாவும் தேர்வாகி உள்ளனர். சுழற்பந்துவீச்சை பொருத்தவரை வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ் ஆகியோர் உள்ளனர்.
பிரசித் கிருஷ்ணா, வாஷிங்டன் சுந்தர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரியான் பராக், துருவ் ஜூரேல் ஆகியோர் மாற்று வீரர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதாவது, யாருக்காவது காயமடைந்தால் இவர்கள் அவர்களுக்கு பதில் ஸ்குவாடில் இணைவார்கள்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஷ்ரேயாஸ் ஐயருக்கு இந்த 20 இடங்களில் கூட வாய்ப்பு கிடைக்கவில்லை. வாஷிங்டன் சுந்தருக்கும், ஜெய்ஸ்வாலுக்கும் ஸ்குவாடில் வாய்ப்பில்லை என்பது பெரிய ஏமாற்றம் அளிக்கிறது. இருப்பினும் இந்திய அணியில் தற்போதைய வீரர்கள் நல்ல பார்மில் இருப்பதால் இந்த அணித் தேர்வு நியாயமானதாகவே கருதப்படுகிறது. இன்னும் டி20 உலகக் கோப்பைக்கு முன் பல டி20ஐ போட்டிகளை இந்தியா விளையாட உள்ளதால் இந்த ஸ்குவாடிலும் அடுத்தடுத்து பல மாற்றங்கள் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அபிஷேக் சர்மா சற்று பந்துவீசுவார் என்ற காரணத்தினாலும், கடந்த ஓராண்டுக்கு மேலாக டி20ஐ அணியில் விளையாடி வருவதாலும் ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை என அகர்கர் விளக்கம் அளித்துள்ளார். ஜெய்ஸ்வாலும், ஷ்ரேயாஸ் ஐயரும் அவர்களின் வாய்ப்புக்கு காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளதாக கூறினார்.
கடந்த பிப்ரவரி மாதத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடிய இந்திய அணி ஸ்குவாடில் இடம்பெற்றிருந்த நிதிஷ்குமார் ரெட்டி, ரமன்தீப் சிங், வாஷிங்டன் சுந்தர், துருவ் ஜூரேல், முகமது ஷமி, ரவி பிஷ்னோய் உள்ளிட்ட வீரர்களுக்கு தற்போதைய ஸ்குவாடில் இடமில்லை. இதில் நிதிஷ்குமார் ரெட்டி மட்டுமே காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். இதில், வாஷிங்டன் சுந்தர், துருவ் ஜூரேல் ஆகியோர் மாற்று வீரர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.
#TeamIndia's squad for the #AsiaCup 2025
— BCCI (@BCCI) August 19, 2025
Surya Kumar Yadav (C), Shubman Gill (VC), Abhishek Sharma, Tilak Varma, Hardik Pandya, Shivam Dube, Axar Patel, Jitesh Sharma (WK), Jasprit Bumrah, Arshdeep Singh, Varun Chakaravarthy, Kuldeep Yadav, Sanju Samson (WK), Harshit Rana,…
Asia Cup 2025: இந்திய அணி அறிவிப்பு
சூர்ய குமார் யாதவ் (கேப்டன்), சுப்மான் கில் (துணை கேப்டன்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, அக்சர் படேல், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், ரின்கு சிங், வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஹர்ஷித் ராணா.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ