)
Asia Cup 2025, Team India Squad: ஆசிய கோப்பை தொடரைதான் அடுத்து இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்திய அணிக்கு இந்த ஆகஸ்டில் எந்த சர்வதேச போட்டியும் இல்லை என்பதால் மட்டுமில்லை, கிரிக்கெட் உலகமே உற்றுநோக்கும் இந்தியா - பாகிஸ்தான் போட்டியும் ஆசிய கோப்பை தொடரில் நடைபெற இருப்பதால்தான் இந்தளவிற்கு எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி மற்றும் துபாயில் நடைபெறும் ஆசிய கோப்பை 2025 தொடர் டி20 வடிவில் நடைபெற இருக்கிறது. அடுத்தாண்டு இந்தியாவில் நடைபெற இருக்கும் 2026 டி20 உலகக் கோப்பைக்கு இந்த தொடர் முன்னோட்டமாக அமையும். செப். 9ஆம் தேதி தொடங்கி செப். 28ஆம் தேதி நிறைவடைகிறது. செப். 14ஆம் தேதி இந்தியா - பாகிஸ்தான் போட்டி துபாயில் நடைபெற இருக்கிறது.
இந்த தொடரில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் அணிகள் இடம்பெற்றுள்ளன. குரூப் பி பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங் காங் உள்ளிட்ட அணிகள் இடம்பெற்றுள்ளன. ஒரு அணி தனது பிரிவில் இருக்கும் மற்ற 3 அணிகளுடன் தலா 1 போட்டியில் மோதும். முதல் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த 'சூப்பர் 4' சுற்றுக்கு செல்லும்.
அதாவது இந்த சுற்றுக்கு தகுதிபெற்ற அணி, தகுதிபெற்ற மற்ற 3 அணிகளுடன் தலா 1 முறை மோதும். அதன்பின் இதில் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகளே செப். 28ஆம் தேதி இறுதிப்போட்டியில் மோதுவார்கள்.
மற்ற அணிகளை ஒப்பிடுகையில் இந்திய அணி பலம் வாய்ந்த அணியாக திகழ்கிறது. எனவே, இந்த முறையும் கோப்பையை தட்டித்தூக்க வேண்டும் என கம்பீர் திட்டம் தீட்டி வருவார் எனலாம். கம்பீரின் வெற்றி பார்முலாவில் முக்கியமான ஒன்று, ஆல்-ரவுண்டர்களில் அவர் வைத்திருக்கும் அபரிமிதமான நம்பிக்கை எனலாம். நிச்சயம் நம்பர் 8, 9 வரை பேட்டிங் செய்யக்கூடியவர்களை வைத்தே பிளேயிங் லெவனை அமைக்க திட்டமிடுவார் என்பதில் சந்தேகம் இல்லை. எனவே ஸ்குவாடில் ஆல்-ரவுண்டர்களுக்கு பஞ்சம் இருக்காது.
அந்த வகையில், கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் நிதிஷ் குமார் ரெட்டி இடம்பிடித்தார். ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்து அவர் மீது கம்பீர் பெரியளவில் நம்பிக்கை வைத்திருக்கிறார். ஆனால், இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவரும் காயம் காரணமாக விலகிவிட்டார். அவர் இன்னும் காயத்தில் இருந்து மீண்டு வரவில்லை. இன்னும் ஒரு மாத காலத்தில் உடற்தகுதியை பெறுவதும் கடினம்தான்.
நிச்சயம் ஸ்குவாடில் ஹர்திக் பாண்டியா இருப்பார் என்றாலும் அவருக்கு பேக் அப்பாக ஒரு வேகப்பந்துவீச்சு ஆல்-ரவுண்டரை எடுக்க வேண்டும். வேகப்பந்துவீச்சு ஆல்-ரவுண்டர் எனும்போது நிச்சயம் இரண்டு ஓவர்களாவது பந்துவீச வேண்டி வரும். அப்படிதான் நிச்சயம் சிவம் தூபேவுக்கு கௌதம் கம்பீர் வாய்ப்பளிக்கலாம். கடந்த பிப்ரவரி மாதம் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் அவரும் சிறப்பாக விளையாடியிருந்தார். ஐபிஎல் தொடரில் பெரியளவில் சொதப்பினாலும் கூட அவரின் சிக்ஸ் ஹிட்டிங் திறன் மீது யாருக்கும் சந்தேகம் இருக்காது.
மறுபுறம், ரமன்தீப் சிங் என ஒருவர் இருந்தாலும் அவரது பந்துவீச்சை நம்ப முடியாது, சிவம் தூபேவால் கட்டுக்கோப்பாக 2-3 ஓவர்கள் வீச முடியும், சர்வதேச போட்டிகளில் விளையாடி அனுபவமும் உள்ளது. எனவே 2026 டி20 உலகக்கோப்பையை மனதில் வைத்து சிவம் தூபேவை ஸ்குவாடில் சேர்க்க வாய்ப்புள்ளது. ஆசிய கோப்பைக்கு பின் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் (5 டி20), உள்நாட்டில் தென்னாப்பிரிக்கா உடனான தொடர் (3 டி20) ஆகியவற்றிலும் தூபேவுக்கு வாய்ப்புகள் கிடைக்கலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ