)
Australia vs Bangladesh : மஞ்சள் சட்டைக்காரர்களுக்கு இப்போது கட்டம் சரியில்லை போல... ஆஸ்திரேலியா, சிஎஸ்கே அணிகள் என்றாலே ஒரு காலத்தில் கோப்பைகளை வென்று குவித்தவை. ஆனால், 2023ஆம் ஆண்டுக்கு பின் தொடர்ந்து தோல்விகளால் துவண்டுபோய் உள்ளது.
கடைசியாக சிஎஸ்கே 2023இல் கோப்பையை வென்றது, ஆஸ்திரேலியா கடைசியாக 2023இல் ஐசிசி உலகக் கோப்பையை வென்றது. அதன் பின் தொடர் தோல்விகள்தான். சிஎஸ்கே தொடர்ச்சியாக மூன்று முறை பிளே ஆப் போகாமல் இருப்பது ஐபிஎல் வரலாற்றில் இதுவே முதன்முறை. அதுமட்டுமின்றி கடந்தாண்டு முதல்முறையாக கடைசி இடத்திலும் சிஎஸ்கே நிறைவு செய்தது. இந்த முறை சற்று ஆறுதலாக 8வது இடத்தில் நிறைவு செய்திருக்கிறது.
அதேபோல், கோப்பையையே வெல்லாத தென்னாப்பிரிக்கா முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்றதும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராகதான்... இப்படி துரதிருஷ்டம் துரத்தி வரும் நிலையில், ஆஸ்திரேலிய அணிக்கு இப்போது மீண்டும் தோல்வி பரிசாக கிடைத்திருக்கிறது.
இந்தாண்டு தொடக்கத்தில் நடந்த ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் லீக் சுற்றோடு ஆஸ்திரேலியா வெளியேறியது. ஐபிஎல் முடிந்த கையோடு, ஆஸ்திரேலியா பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அங்கு 1-2 கணக்கில் ஆஸ்திரேலியா தோல்வியை தழுவியது.
இப்போது வங்கதேசம் உடனான தொடரையும் ஆஸ்திரேலியா பின்னடைவை சந்தித்துள்ளது. ஏற்கெனவே முதல் ஓடிஐ போட்டியில் வங்கதேசம் வென்று, மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் முன்னிலை பெற்றது. தற்போது 2வது ஓடிஐ போட்டியையும் வென்று வங்கதேசம் முதல்முறையாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஓடிஐ தொடர் வென்றிருக்கிறது.
Bangladesh continue their impressive run and win their first ODI series against Australia
— ICC (@ICC) June 11, 2026
https://t.co/DEm5XJy31X pic.twitter.com/lK5yKj8Q38
2வது ஓடிஐ போட்டியின் முதல் இன்னிங்ஸில் 187 ரன்களை மட்டுமே ஆஸ்திரேலியா அடித்தது. அடுத்து வந்த வங்கதேச அணி அதையும் கடந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. ஆஸ்திரேலிய பேட்டிங்கில் மார்னஸ் 55, சேவியர் பார்லெட் 52 ரன்களை குவித்துள்ளனர். வங்கதேசத்தை பொருத்தவரை, டஸ்கின் அகமது, முஸ்தபரிஷூர் ரஹ்மான் ஆகியோர் தலா 3 விக்கெட்டை கைப்பற்றினர். தன்விர் இஸ்லாம் 1 விக்கெட்டை வீழ்த்தினார்.
வங்கேதசத்தில் சௌமியா சர்கார் 42, நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ 41, தவ்ஹித் ஹிருதோய் 40 ரன்களை சேர்த்தனர். ஆட்டநாயகன் விருதை முஸ்தபிஷூர் ரஹ்மான் வென்றார். அவர் 7 ஓவர்களை வீசி 27 ரன்களை மட்டும் கொடுத்து 3 விக்கெட்டை வீழ்த்தியிருந்தார்.
ஆஸ்திரேலியாவின் தொடர் தோல்விகள் காரணமாக, அந்த அணி ஐசிசி ஐடிஐ தரவரிசையில் ஓரிடம் இறங்கி 4வது இடத்திற்கு சென்றுள்ளது. வங்கதேசம் அதே 9வது இடத்தில் நீடிக்கிறது. தென்னாப்பிரிக்கா 3வது இடத்திற்கு முன்னேறியது. இந்தியா, நியூசிலாந்து அணிகள் முறையே முதலிரண்டு இடங்களை பிடித்துள்ளன.