)
FIFA World Cup 2026, Brazil National Football Team : பிபா கால்பந்து உலகக் கோப்பை 2026 தொடங்கி முதல் மூன்று நாள் போட்டிகள் நிறைவடைந்துள்ளன. முதல் மூன்று நாளில் முன்னணி வீரர்கள் அடங்கிய அணிகள் பெரியளவில் விளையாடவில்லை. அப்படியிருக்க, இந்திய நேரப்படி இன்று அதிகாலை 3.30 மணிக்கு பிரேசில் - மொராக்கோ அணிகள் மோதின.
இப்போட்டியைதான் பெரியளவில் ரசிகர்கள் எதிர்பார்த்தனர். இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பிரேசில் அணிக்கு பெரியளவில் ரசிகர் கூட்டம் உள்ளது. மொராக்கோ அணி கடந்த சில ஆண்டுகளாகவே பெரிய அணிகளை வீழ்த்தும் வல்லமையை பெற்றிருக்கிறது. 2022 உலகக் கோப்பையில் அரையிறுதி வரை வந்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியது. இதனாலேயே இரு அணிகள் மோதும் போட்டி மீது பெரிதும் எதிர்பார்ப்பு இருந்தது.
இப்போட்டியில் பிரேசில் வெற்றிபெற அதிக வாய்ப்பு இருப்பதாக கணிப்புகள் வெளியான நிலையில், பலருக்கும் அதிர்ச்சி அடையும் வகையில் 1-1 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது. அமெரிக்காவின் நியூ ஜெர்சி நகரில் உள்ள மெட்லைஃப் மைதானத்தில் சுமார் 80 ஆயிரத்திற்கும் அதிகமான ரசிகர்கள் பிரேசிலின் 'சாம்பா மேஜிக்'-ஐ காண வருகை தந்தனர். ஆனால் களத்தில் பிரேசில் அணியை, மொராக்கோ வீரர்கள் சம்பவம் செய்துவிட்டனர். தொடக்கம் முதலே பிரேசில் மீது அழுத்தம் கொடுக்கத் தொடங்கியது...
மொராக்கோ அணியின் இஸ்மாயில் சைபாரி 21வது நிமிடத்தில் கோல் அடிக்க, ஆப்பிரிக்க ரசிகர்கள் கொண்டாட்டத்தில் குதூகலித்தனர்; மைதானமே மயான அமைதியடைந்தது. அடுத்து 32வது நிமிடத்தில் பிரேசிலின் நட்சத்திர வீரர் வினிசியஸ் ஜூனியர் கோல் அடிக்க அரங்கமே அதிர்ந்தது.
இது வினிசியஸ் ஜூனியரின் 10வது சர்வதேச கோல். இந்த கோல் மூலம் ஆட்டம் சமனடைந்தது. இதன்பின் இரு அணிகளும் பல கோல் வாய்ப்புகளை நழுவவிட்டன. இதனால், போட்டி முடியும் வரை ஸ்கோர் 1-1 ஆகவே நீடித்தது. போட்டி டிராவில் முடிந்தது...
பிரேசில் தனது அடுத்த போட்டியில் வரும் வெள்ளிக்கிழமை (ஜூன் 19) பிலடெல்பியா நகரில் ஹெய்ட்டி அணிக்கு எதிராக விளையாடுகிறது. அதன்பின் பிரேசிலின் கடைசி லீக் ஆட்டம் ஸ்காட்லாந்துக்கு எதிராக உடன் இருக்கிறது.
மறுபுறம் மொராக்கோவின் அடுத்த போட்டி வெள்ளிக்கிழமை (ஜூன் 19) ஸ்காட்லாந்துக்கு எதிராகவும், மொராக்கோவின் கடைசி ஆட்டம் ஜூன் 25ஆம் தேதி ஹெய்ட்டி அணிக்கு எதிராக நடைபெறும்...
இந்தப் போட்டியில் வினிசியஸ் ஜூனியர் கோல் அடித்திருந்தாலும், ஆட்டம் முழுவதும் களத்தில் ரசிகர்கள் தேடிய ஒரே பெயர் நெய்மர் ஜூனியர்தான். அவருக்கு வலது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக நெய்மர் இந்தப் போட்டியில் விளையாட முடியவில்லை. அவர் லீக் சுற்றில் விளையாடுவதற்கான வாய்ப்பு குறைவு என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மைதானத்தில் இருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் நெய்மரின் 10ஆம் எண் ஜெர்சியை அணிந்து வந்திருந்தனர். இருப்பினும் அணி நிர்வாகம் நெய்மர் விரைவில் குணமடைந்து அடுத்த லீக் ஆட்டங்களில் களமிறங்குவார் என நம்பிக்கை தெரிவித்துள்ளது.
பிரேசில் அணி ஐந்து முறை உலகக் கோப்பையை வென்றிருந்தாலும், கடைசியாக சாம்பியன் பட்டத்தை 2002ஆம் ஆண்டில்தான் வென்றிருக்கிறது. சுமார் 24 ஆண்டுகளாக உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற வேட்கை பிரேசில் அணியிடம் உள்ளது. தற்போது அதே வேட்கை பற்றி எரிகிறது.
எனவே, மீண்டும் சாம்பியன் பட்டம் வெல்ல வேண்டுமெனில், நெய்மர் களத்தில் இருப்பது மிகவும் அவசியமான ஒன்றாக கருதப்படுகிறது. பிரேசில் அணி இதுவரை இல்லாத அளவிற்கு குறைந்த அனுபவம் கொண்ட இளம் அணியாக தென்படுகிறது.
அப்பிடியிருக்க அணியின் முதுகெலும்பாக இருக்கும் நெய்மர் களமிறங்க வேண்டியது அவசியமாகும். அவர் இல்லாததால் களத்தில் முக்கிய முடிவுகளை எடுப்பதற்கும், வீரர்களை உத்வேகப்படுத்துவதற்கும் ஆள் இல்லாமல் போய்விடுவதும் கவனிக்க வேண்டும்.
எனவே, லீக் சுற்றின் முதல் போட்டியே டிராவில் முடிந்திருப்பது, பிரேசிலின் அடுத்த கட்டப் பயணத்தை சற்று சவாலானதாக மாறியுள்ளது. இன்னும் நெய்மர் தவிர்த்து பிரேசில் அணியிடம் பல ஓட்டைகள் இருக்கின்றன. மொராக்கோ நேற்று பிரேசிலின் மிட்பீல்டர்களுக்கு தண்ணி காட்டியது, பிரேசிலின் பல பலவீனங்களை வெளிச்சமிட்டுக் காட்டியது.
அவை அனைத்தையும் சீராக்கி, வரும் வெள்ளிக்கிழமை ஹெய்ட்டி அணிக்கு எதிரான போட்டியில் பிரேசில் கடும் முயற்சி எடுத்து 3 புள்ளிகளைப் பெற விரும்பும். ஆனால் அடுத்த போட்டியில் நெய்மரின் மாயாஜாலத்தை களத்தில் காணமுடியுமா? என்பதே கால்பந்து உலகத்தின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது