IPL 2026 CSK vs KKR Highlights: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, அதன் 2வது வெற்றியை பதிவு செய்தது. சிஎஸ்கே 8வது இடத்திற்கு முன்னேறியது.

Chennai Super Kings vs Kolkata Knight Riders Highlights: சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் தமிழ் புத்தாண்டான இன்று (ஏப்ரல் 14) 2026 ஐபிஎல் சீசனின் 22வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.
புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் தத்தளித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது 2வது வெற்றிக்கும், படுகுழியில் 10வது இடத்தில் இருந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அதன் முதல் வெற்றிக்கும் இன்று பலப்பரீட்சையில் ஈடுபட்டன.
டாஸ் வென்ற கேகேஆர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது, தாங்கள் டாஸ் வென்றாலும் பந்துவீச்சையே தேர்வு செய்திருப்போம் என ருதுராஜ் கெய்க்வாட்டும் தெரிவித்தார். கேகேஆர் அணியில் நவ்தீப் சைனிக்கு பதில் வருண் சக்ரவர்த்தி சேர்க்கப்பட்டார். சிஎஸ்கே அணியில் இந்த போட்டியிலும் தோனி விளையாடவில்லை, எனவே பிளேயிங் லெவனிலும் மாற்றம் செய்யப்படவில்லை.
முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி பவர்பிளே ஓவர்களில் 72 ரன்களை எடுத்து 2 விக்கெட்டை இழந்தது. ருதுராஜ் 7, ஆயுஷ் மாத்ரே 38 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். அடுத்த 12 ஓவர்களில் சிஎஸ்கே 3 விக்கெட்டை இழந்து வெறும் 120 ரன்களையே அடித்தது. இதனால், 20 ஓவர்களில் சிஎஸ்கே 5 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்களை அடித்தது. அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 48, பிரெவிஸ் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். தூபே 13, ஓவர்டன் 7 ரன்களை எடுத்து களத்தில் இருந்தனர். கேகேஆர் அணியில் கார்த்திக் தியாகி 2, வைபவ் அரோரா, அன்குல் ராய், சுனில் நரைன் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
தொடர்ந்து, 193 ரன்களை துரத்தி கேகேஆர் அணியில் சுனில் நரைன் - பின் ஆலன் ஓபனராக களமிறங்கினர். ஆனால் சிஎஸ்கே இந்த முறை பவர்பிளே பந்துவீச்சில் மிரட்டியது. பின் ஆலன் 1 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். 2 சிக்ஸர், 2 பவுண்டரி பறக்கவிட்டு 17 பந்துகளில் 24 ரன்களை அடித்த சுனில் நரைனும் 5வது ஓவரில் ஆட்டமிழந்தார். இதனால் பவர்பிளே முடிவில் 36 ரன்களையே கேகேஆர் எடுத்தது, ஆனால் 2 விக்கெட்டை இழந்துவிட்டது. சிஎஸ்கேவை விட பவர்பிளேவில் 36 ரன்கள் குறைவாக அடித்தது, இதுவும் தோல்விக்கான முக்கிய காரணம்.
அடுத்து அகேல் ஹொசைன் - நூர் அகமது ஜோடி மிடில் ஓவர்களில் சிறப்பாக பந்துவீசி ரன்களை கட்டுப்படுத்தியது மட்டுமின்றி, தொடர்ந்து விக்கெட்டையும் வீழ்த்தினர். அகேல் ஹொசைன் பந்துவீச்சில் ரகுவன்ஷி 27 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து ரஹானே 28, கேம்ரூன் கிரீன் 0 ஆகியோர் நூர் அகமது வீசிய ஒரே ஓவரில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அவரின் அடுத்த ஓவரில் ரிங்கு சிங் 2 ரன்களில் ஆட்டமிழந்தார்.
ரோவ்மான் பாவெல் - ரமன்தீப் ஜோடி 40 பந்துகளில் 63 ரன்களை சேர்த்தாலும், அவர்களால் இலக்கை அடையமுடியவில்லை. ரமன்தீப் 23 பந்துகளில் 4 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 35 ரன்களில் கடைசி கட்டத்தில் ஆட்டமிழந்தார். 20 ஓவர்கள் முடிவில் கேகேஆர் அணி 7 விக்கெட்டை இழந்து 160 ரன்களையே அடித்தது. இதனால், 32 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே வென்று, அதன் 2வது வெற்றியை பதிவு செய்தது. பாவெல் 22 பந்துகளில் 1 பவுண்டரி, 2 சிக்ஸருடன் 31 ரன்களை அடித்திருந்தார்.
சிஎஸ்கே பந்துவீச்சில் அகேல் ஹொசைன் 4 ஓவர்களில் 1 விக்கெட்டை வீழ்த்தி 26 ரன்களையும், நூர் அகமது 4 ஓவர்களில் 3 விக்கெட்டை வீழ்த்தி 21 ரன்களை மட்டுமே கொடுத்தனர். அதாவது சிஎஸ்கே ஸ்பின்னர்கள் 8 ஓவர்களில் 47 ரன்களை கொடுத்து 5 விக்கெட்டை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. ஆட்டநாயகன் விருதை நூர் அகமது வென்றார்.
சிஎஸ்கே அணி 5 போட்டிகளில் விளையாடி 2இல் வென்று, 3இல் தோற்று 4 புள்ளிகளுடன் (நெட் ரன்ரேட்: -0.846) 8வது இடத்திற்கு முன்னேறியது. மும்பை இந்தியன்ஸ் அணி 4 போட்டிகளில் விளையாடி 1இல் வென்று, 3இல் தோற்று 2 புள்ளிகளுடன் (-1.383) 9வது இடத்திற்கு பின்தங்கியது. கேகேஆர் அணி 5 போட்டிகளில் 4இல் தோல்வி, 1 போட்டி மழையால் ரத்து என 1 புள்ளியுடன் 10வது இடத்திலேயே உள்ளது, இன்னும் ஒரே வெற்றியை கூட பதிவு செய்யவில்லை.
Help us in na
— IndianPremierLeague (@IPL) April 14, 2026
Updathttps://t.co/jWkXVCPxj5#TATAIPL | #KhelBindaas | #CSKvKKR | @ChennaiIPL | @noor_ahmad_15 | @AHosein21 pic.twitter.com/BguJF4FO4x
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!