)
Chennai Super Kings: ஐபிஎல் 2026 தொடருக்கு பல அணியின் ரசிகர்கள் காத்திருந்தாலும், சிஎஸ்கே ரசிகர்கள் அளவுக்கு யாருமே மரண வெயிட்டிங்கில் இருக்க முடியாது. இது தோனியின் கடைசி சீசன் என்பது தனிக்கதை. அதுபோக, சஞ்சு சாம்சன், பிரெவிஸ், உர்வில் பட்டேல், ஆயுஷ் மாத்ரே, பிரசாந்த் வீர், கார்த்திக் சர்மா என அதிரடி பாணி ஆட்டக்காரர்கள் நிறைந்திருப்பதும் அவர்களின் ஆர்வத்திற்கு ஒரு காரணம் எனலாம்.
மறுபுறம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2024, 2025 சீசன்களில் பிளே ஆப் சுற்றுக்கு வரவே இல்லை. 2025இல் ஐபிஎல் வரலாற்றிலேயே முதல் முறையாக கடைசி இடத்தில் நிறைவு செய்தது. இதனால், பல முன்னணி வீரர்களை காம்பினேஷனுக்காக சிஎஸ்கே ஏலத்தில் எடுத்திருக்கிறது. சஞ்சு சாம்சனை டிரேடிங்கில் எடுத்து பல பிரச்னைக்கு தீர்வு கண்டுவிட்டது என்றாலும் ஜடேஜா, அஸ்வின், பதிரானா ஆகியோர் இல்லாமல் சிஎஸ்கே என்ன செய்யும் என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.
தற்போது சிஎஸ்கேவின் சுழற்பந்துவீச்சை பொருத்தவரை, நூர் அகமது, பிரசாந்த் வீர், அகேல் ஹொசைன், ராகுல் சஹார், ஷ்ரேயாஸ் கோபால் என வெளிநாட்டு, உள்நாட்டு சுழற்பந்துவீச்சாளர்கள் நிறைந்திருக்கிறார்கள். இதில் நூர் அகமது, பிரசாந்த் வீர் ஆகியோரின் இடம் பிளேயிங் லெவனில் உறுதி எனலாம். அகேல் ஹொசைனும் பிரசாந்த் வீர் போல் இடதுகை சுழற்பந்துவீச்சாளர் ஆவார். ஜடேஜாவுக்கு மாற்று ஒரே வீரர் பிரசாந்த் வீர் என பலரும் சொல்கிறார்கள். அனுபவம் வாய்ந்த அகேல் ஹொசைனுக்கு இடமில்லை என பலரும் சொல்கிறார்கள்.
ஆனால், சிஎஸ்கேவின் முக்கிய பிரச்னையாக பவர்பிளேவில் சிறப்பாக பந்துவீசுவதற்கான சுழற்பந்துவீச்சாளர் இல்லாதது. அஸ்வினை கடந்தாண்டு அதற்காகவே சிஎஸ்கே எடுத்தது. ஆனால் அவர் பவர்பிளேவில் கடுமையாக சொதப்பினார். அந்த வகையில் தற்போது அகேல் ஹொசைன் பவர்பிளே ஓவர்களில் சிறப்பாக பந்துவீசி வருகிறார். இன்று SA20 தொடரில் டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிராக ஜோபெர்க் சூப்பர் கிங்ஸ் அணி வீரர் அகேல் ஹொசைன் பவர்பிளேவில் 2 ஓவர்கள் மட்டும் 12 ரன்களை கொடுத்து முக்கியமான கான்வே விக்கெட்டை கைப்பற்றினார். இந்த போட்டியில் மட்டுமின்றி தொடர்ச்சியாக பவர்பிளேவில் சிறப்பான பங்களிப்பை அகேல் ஹொசைன் அளித்து வருகிறார்.
இதனால், அகேல் ஹொசன் - நூர் அகமது - பிரசாந்த் வீர் என மூன்று சுழற்பந்துவீச்சாளர்களுடன் சிஎஸ்கே களமிறங்கலாம். மிடில் ஓவர்களை போல் பவர்பிளேவிலும் சிஎஸ்கே ஸ்பின்னர்கள் கொஞ்சம் அதிரடி காண்பிக்கலாம். டி20 போட்டிகளை பொருத்தவரை ஒரு ஸ்பின்னர் பவர்பிளேவில் பந்துவீச வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. அந்த குறையை அகேல் ஹொசைன் தீர்த்துவைப்பார். ஜோபெர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்காக அகேல் ஹொசைன் மட்டுமின்றி டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்காக நூர் அகமதும் சிறப்பாக பந்துவீசினார். 4 ஓவர்கள் பந்துவீசி 12 ரன்களை மட்டும் 3 விக்கெட்டை கைப்பற்றினார். இதனால் சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் பெரும் நம்பிக்கையை பெற்றிருக்கும்.
இந்தியாவில் ஐபிஎல் தொடர் போன்று, தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் நடத்தும் டி20 லீக் தொடரான SA20 லீக் கடந்த டிசம்பர் 26ஆம் தேதி தொடங்கியது. தென்னாப்பிரிக்காவின் பல்வேறு நகரங்களில் நடைபெறும் இத்தொடரில் மொத்தம் 6 அணிகள் மோதுகின்றன.
இதில் ஒவ்வொரு அணியும் மற்ற 5 அணிகளுடன் தலா 2 முறை மோதும். குரூப் சுற்றில் 10 போட்டிகளை ஒரு அணி விளையாடும். குரூப் சுற்று முடிவில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு செல்லும். ஐபிஎல் தொடரை போன்றே குவாலிபயர் 1, எலிமினேட்டர், குவாலிபயர் 2 என மூன்று பிளே ஆப் போட்டிகள் நடைபெறும். ஜனவரி 25ஆம் தேதி இறுதிப்போட்டி நடைபெறும். அந்த வகையில், இன்று ஜோபெர்க் சூப்பர் ஜெயன்ட்ஸ் - டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகளுக்கு இடையே வான்டரர்ஸில் நடைபெற்றது.
இதில் முதலில் பேட்டிங் செய்த ஜோபெர்க் அணி 205 ரன்களை 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு எடுத்தது. அதிகபட்சமாக டூ பிளசிஎஸ் 47, சுபம் ரஞ்சனே 50 மற்றும் இறுதியில் வந்த டோனவன் பெரீரா அதிரடியாக 10 பந்துகளில் 33 ரன்களை குவித்தார். டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் எவான் ஜோன்ஸ் 43, எய்டன் மார்க்ரம் 37, ஹென்ரிச் கிளொசன் 29 ஆகியோர் சிறப்பாக விளையாட ஸ்கோர் டை ஆனது. இதனால் சூப்பர் ஓவர் வீசப்பட்டது. அதில் முதலில் பேட்டிங் செய்த டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெறும் 5 ரன்களையே அடித்தது. ஜேஎஸ்கே அணி வீரர் ரிச்சர்ட் கிளீசென் சிறப்பாக பந்துவீசினார். 6 ரன்கள் என்ற இலக்கை மூன்றே பந்துகளில் அடித்து ஜேஎஸ்கே வெற்றிவாகை சூடியது. கடைசி நொடி வரை இப்போட்டியில் பரபரப்புக்கு பஞ்சமில்லை.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ