ஐபிஎல் 2026 போட்டிகள் கடந்த மாதம் முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த சீசனில் வெற்றி பெற முடியாமல், புள்ளிப்பட்டியலில் 10-வது இடத்தில் முடித்த சென்னை அணி, இந்த முறை இளம் வீரர்களின் படையுடன் களமிறங்கியுள்ளது. இதனால், இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் என்ன செய்ய போகிறது என்ற எதிர்பார்ப்பில் பல ரசிகர்கள் ஆவலுடன் இருந்தனர். ஆனால், இந்த சீசன் தொடங்குவதற்குமே முன்பு, அணியின் பல முக்கிய வீரர்கள் காயம் காரணமாக விளையாட முடியாத சூழ்நிலை உருவானது. நாதன் எலிஸ் இந்த சீசனிலிருந்து முற்றிலும் விலகியிருந்தார். அதேபோல் டிவால்ட் பிரேவிஸ் மற்றும் தோனி போன்ற வீரர்கள் காயம் காரணமாக முதல் சில போட்டிகளில் களமிறங்க முடியவில்லை. இதனால் சென்னை அணியின் சக்தி குறைந்து, அதன் வெற்றி கனவுகளும் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, தரமான பந்துவீச்சாளர்கள் இல்லாததால், சென்னை அணி ஒவ்வொரு போட்டியிலும் தோல்வியை சந்தித்து வருகிறது. இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளிலும் தொடர் தோல்விகளை மட்டுமே சந்தித்த அவர்கள், புள்ளிப்பட்டியலில் மீண்டும் 10-வது இடத்திலேயே உள்ளனர்.

டாப் ஆர்டர் சொதப்பல்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக இருந்த சஞ்சு சாம்சன், இந்த சீசனுக்காக டிரேடு மூலம் சென்னை அணிக்கு வந்தார். சமீபத்தில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய பங்கு வகித்தவர் என்பதால், அதே பாணியில் சென்னை அணிக்காகவும் ரன்கள் குவிப்பார் என்ற பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இதுவரை நடந்த 3 போட்டிகளிலும் சஞ்சு சாம்சன் குறைந்த ரன்களிலேயே அவுட் ஆகி வருகிறார். அதே சமயம், அணியின் கேப்டனும் மூன்று போட்டிகளிலும் பெரிதாக ரன்கள் சேர்க்கவில்லை. கேப்டன்சியிலும் பல தவறுகளை செய்து வருகிறார் என்ற குற்றச்சாட்டுகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளன. அவரை கேப்டன் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு சமூக வலைதளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
பிளேயிங் இலெவனில் மாற்றம் தேவை
சென்னை அணியின் தோல்விக்கு பேட்டிங்கை விட பௌலிங்தான் முக்கிய காரணமாக இருக்கிறது. சென்னை அணியில் உள்ள பெரும்பாலான பந்துவீச்சாளர்கள் ரன்களை வாரி வழங்கி வருகின்றனர். நூர் அகமது போன்ற பௌலர்கள் அணிக்கு பக்கபலமாக இருப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரும் அதிக ரன்கள் கொடுத்து வருகிறார். இதனால் பந்துவீச்சு துறையில் பெரிய மாற்றங்கள் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இளம் பந்துவீச்சாளரான குருபஜித் சிங்கிற்கு வாய்ப்பு கிடைக்குமா என்று பலரும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். அதேபோல் ஷ்ரேயாஸ் கோபால் போன்ற அனுபவமுள்ள ஸ்பின்னருக்கும் ஆட்ட வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளன.
புதிய ஓப்பனிங் ஜோடி தேவை
தற்போது சென்னை அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன்களாக ருதுராஜ் மற்றும் சஞ்சு சாம்சன் களமிறங்கி வருகின்றனர். கடந்த சில சீசனில் ருதுராஜ் ஓபனிங்கில் மிக சிறப்பாக ஆடியிருந்தாலும், இந்த முறை அவரிடமிருந்து அந்த அளவிலான தொடக்கத்தை அணிக்கு கிடைக்கவில்லை. மிடில் ஆர்டரில் விளையாடும் சில முக்கிய வீரர்கள் எதிர்பார்த்த ரன்களை குவிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். புதிதாக அணியில் இணைந்த சர்பராஸ் கான் மட்டும் தான் தொடர்ந்து சற்றே நம்பிக்கை அளிக்கும் அளவில் விளையாடி வருகிறார்; முதல் பந்திலிருந்தே ஆட்டத்தை கட்டுப்படுத்த முயற்சி செய்து வருகிறார். அதேபோல் ஜேமி ஓவர்டன் பேட்டிங் மற்றும் பௌலிங் இரண்டிலும் தன்னால் முடிந்த அளவு பங்களித்து வருகிறார். இருப்பினும், சிலர் மட்டுமே நன்றாக விளையாடுவதால் அணிக்கு வெற்றி கிடைக்கவில்லை.
முன்னிலை பெற மாற்றங்கள் அவசியம்
இனி வரும் போட்டிகளில் வெற்றி பெற, அணி தேர்வு மற்றும் தந்திரங்களில் பெரிய மாற்றங்கள் அவசியம் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். ருதுராஜ் மற்றும் சஞ்சு சாம்சன் இருவரும் இயல்பில் நிதானமாக ஆடும் வீரர்கள் என்பதால், பவர் ப்ளே ஓவர்களில் அதிரடி காட்டக்கூடிய ஓபனர்கள் தேவை எனும் கருத்தும் முன்வைக்கப்படுகிறது. உருவில் படேல் மற்றும் சர்பராஸ் கான் ஓப்பனிங் இறங்கலாம் என்ற குரல்களும் இருந்து வருகிறது. அதேபோல், 14 கோடிக்கு வாங்கப்பட்ட கார்த்திக் சர்மா மற்றும் பிரசாந்த் வீர் ஆகியோருக்கு இடம் வழங்கப்படுவதில் ரசிகர்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர். கடந்த சில போட்டிகளில் இருவருக்கும் வாய்ப்பு கிடைத்திருந்தாலும், அவர்கள் எதிர்பார்த்த அளவுக்கு தாக்கம் செலுத்த முடியவில்லை. அடுத்த கட்டத்தில் இவர்களில் ஒருவரை பெஞ்சில் அமர்த்தி, மாற்று வீரருக்கு வாய்ப்பு அளிக்கலாம் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
சென்னை அணிக்கு இன்னும் 11 லீக் போட்டிகள் மீதமுள்ளது. அதில் குறைந்தது 7 முதல் 8 போட்டிகளில் வெற்றி பெற்றால் தான் பிளேஆஃப் கனவை உயிரோடு வைத்துக் கொள்ள முடியும். இல்லையெனில், இந்த ஆண்டும் பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவது மிகவும் கடினமாகிவிடும் என்ற அச்சம் ரசிகர்களிடையே நிலவுகிறது.
மேலும் படிக்க: ஐபிஎல்லால் பணக்காரர்கள் ஆகிய 7 வீரர்கள்.. லிஸ்ட்டில் 3 சிஎக்ஸ் வீரர்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









