)
Indian Premier League 2025: ஐபிஎல் 2025ஆம் ஆண்டு சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சரியாக போகவில்லை. ஐபிஎல் வரலாற்றிலேயே முதல்முறையாக சிஎஸ்கே அணி கடைசி இடத்தில் நிறைவு செய்தது. ருதுராஜ் கெய்க்வாட் காயமடைந்ததால் எம்எஸ் தோனி கேப்டன்ஸியை கவனித்துக்கொண்டார்.
இருப்பினும் தோனியால் கூட அணியை காப்பாற்ற முடியவில்லை எனலாம். கடைசி கட்டத்தில் சில வீரர்கள் காயத்தால் வெளியேற டிவால்ட் பிரேவிஸ், ஆயுஷ் மாத்ரே, அன்ஷுல் கம்போஜ், உர்வில் பட்டேல் உள்ளிட்ட இளம் வீரர்கள் அணிக்குள் வந்த பிறகு அணி பலமடைந்தது. மினி ஏலத்திற்கு போகாமலேயே சிஎஸ்கே அணி ஓரளவு பலமான அணியாக அமைந்துவிட்டது எனலாம்.
அடுத்த சீசனில் ருதுராஜ் கெய்க்வாட் மீண்டும் கேப்டனாக பொறுப்பேற்பார். ஆனால் தோனி விளையாடுவாரா இல்லையா என்பது இன்னும் உறுதியாகவில்லை. இருப்பினும் அவர் விளையாடுவதற்கே அதிக வாய்ப்புள்ளது எனலாம். ரவிசந்திரன் அஸ்வின் அணியில் இருந்து தன்னை விடுவிக்கும்படி சிஎஸ்கே நிர்வாகத்திடம் இருந்து கேட்டுக்கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது, மினி ஏலத்திற்கு விடுவிக்கப்படுவாரா அல்லது டிரேட் செய்யப்படுவாரா அல்லது ஓய்வை அறிவிக்க இருக்கிறாரா என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை
38 வயதான சுழற்பந்துவீச்சு ஆல்-ரவுண்டரை அஸ்வின் சிஎஸ்கே அணி சுமார் ரூ.9.75 கோடிக்கு மெகா ஏலத்தில் எடுத்தது. அப்போது பலரும் அஸ்வின் சிஎஸ்கேவுக்கு வந்ததை வரவேற்றனர். ஆனால், தொடரில் அஸ்வினின் ஆட்டம் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. பவர்பிளே பந்துவீச்சில் அஸ்வின் அதிகளவில் ரன்களை வாரி வழங்கினார். பேட்டிங்கிலும் சொதப்பினார். ஒரு சில போட்டிகளில் மிடில் ஆர்டரில் பிரமோஷன் கொடுத்தும் பெரியளவில் நிரூபிக்கவில்லை. இதனால் ஒரு சில போட்டிகளில் அவரை பிளேயிங் லெவனில் சேர்க்கவில்லை.
அந்த வகையில், ஒருவேளை ரவிசந்திரன் அஸ்வின் விலகினால் சிஎஸ்கேவுக்கு இந்த மூன்று விஷயங்களில் நன்மைகள் எனலாம். அவற்றை இங்கு காணலாம்.
அஸ்வின் ஒருவேளை சிஎஸ்கேவில் இருந்து விலகினால், அதன் பர்ஸில் ரூ.9.75 கோடி சேர்ந்துவிடும். இது சிஎஸ்கேவுக்கு மினி ஏலத்தில் பெரியளவில் உதவியாக இருக்கும். ஏற்கெனவே ஜடேஜா, நூர் அகமது ஆகியோர் சுழற்பந்துவீச்சுக்கு இருப்பதாலும், ஷ்ரேயாஸ் கோபால் பேக்-அப் ஸ்பின்னராக இருப்பதாலும் ஒரு இந்திய வேகப்பந்துவீச்சு ஆல்-ரவுண்டரை ஏலத்தில் எடுக்கலாம். நிச்சயம் கடும் போட்டி நிலவும் என்றாலும் பெரிய தொகை சிஎஸ்கேவின் கையில் இருக்கும் என்பதால் துணிந்து இறங்கலாம். புதிய வெளிநாட்டு ஆல்-ரவுண்டரை கூட சிஎஸ்கே எடுக்க நல்ல வாய்ப்பு கிடைக்கும்.
அஸ்வின் ஆல்-ரவுண்டர் என குறிப்பிடப்பட்டாலும் அவர் சமீபத்தில் பேட்டிங்கில் சோபிக்கவில்லை. அவரை பிளேயிங் லெவனில் வைத்து நம்பர் 7 வீரரோடு பேட்டிங் ஆப்ஷன் முடிந்துவிடுவது போல் ஆகிவிடுகிறது. எனவே, அஸ்வினுக்கு பதில் அந்த இடத்தில் நல்ல பேட்டிங் ஆல்ரவுண்டரை சிஎஸ்கே எடுக்கலாம். அதாவது முன்பு ஷர்துல் தாக்கூர் செய்த வேலையை செய்வதற்கு ஒரு வீரரை எடுக்கலாம். இதன்மூலம் இம்பாக்ட் வீரர் இல்லாமலேயே நம்பர் 8 வரை சிஎஸ்கேவுக்கு பேட்டிங் இருக்கும்.
சிஎஸ்கே சஞ்சு சாம்சனை டிரேட் மூலம் பெற விரும்புகிறது. ஆனால் கடைசி வரை சிஎஸ்கே - ராஜஸ்தான் தரப்புக்கு ஒப்பந்தம் கைக்கூடவில்லை. சிஎஸ்கே வேறு வீரரை வெளியிட மறுக்கிறது. ஆனால் தற்போது அஸ்வினே வெளியேறுகிறேன் என சொல்லும்பட்சத்தில் அவரை ராஜஸ்தான் உடன் டிரேட் செய்ய முயற்சிக்கலாம். ஏனென்றால் ராஜஸ்தானுக்கு இந்திய சுழற்பந்துவீச்சாளரின் தேவை அதிகம் உள்ளது. ஹசரங்கா மற்றும் தீக்ஷனா ஆகிய இரண்டு பேரை சுழற்பந்துவீச்சில் நம்ப வேண்டியதுள்ளது. மேலும், ராஜஸ்தான் அணியுடன் தனக்கு நல்லுறவு இருப்பதாக அஸ்வின் பல சந்தர்பங்களில் தெரிவித்துள்ளார். ராஜஸ்தானிடம் இருந்து சஞ்சு சாம்சனை பெற சிஎஸ்கே அஸ்வினை ஒரு துருப்புச் சீட்டாக பயன்படுத்தலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ