)
India A vs South Africa A: இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் நவம்பர் 14ஆம் தேதி தொடங்குகிறது. டெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்கா அணி, சுப்மான் கில் தலைமையிலான இந்திய அணியுடன் மோத இருக்கிறது. டெஸ்ட் தொடர் மட்டுமின்றி 3 போட்டிகள் கொண்ட ஓடிஐ தொடர், 5 போட்டிகள் கொண்ட டி20ஐ தொடரையும் இரு அணிகள் விளையாட இருக்கின்றன.
நவம்பர் 14 முதல் நவம்பர் 18 வரை நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. நவம்பர் 22 முதல் நவம்பர் 26 வரை நடைபெறும் டெஸ்ட் போட்டி கௌகாத்தியில் உள்ள பரஸ்பரா மைதானத்தில் நடைபெற இருக்கிறது. தென்னாப்பிரிக்கா ஸ்குவாட் அறிவிக்கப்பட்ட நிலையில், இந்திய அணியின் ஸ்குவாட் இன்னும் ஓரிரு நாள்களில் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.
இந்தியா - தென்னாப்பிரிக்காவை டெஸ்ட் தொடரை முன்னிட்டு, தற்போது இந்தியா ஏ - தென்னாப்பிரிக்கா ஏ அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டிகள் நடைபெறுகின்றன. முதல் அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டி கடந்த அக். 30ஆம் தேதி பெங்களூருவில் தொடங்கியது. இந்திய ஏ அணி ரிஷப் பண்ட் தலைமையில் களமிறங்கியது. டாஸ் வென்ற ரிஷப் பண்ட் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
தென்னாப்பிரிக்கா ஏ அணி முதல் இன்னிங்ஸில் 309 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. தென்னாப்பிரிக்கா ஏ அணி சார்பில் ஜார்டன் ஹெர்மான் 71, சுபைர் ஹம்சா 66, ருபின் ஹெர்மான் 54 ரன்களை குவித்தனர். இந்திய ஏ அணி தரப்பில் தனுஷ் கோட்டியான் 4 விக்கெட்டை சரித்தார். இந்திய ஏ அணி பேட்டிங்கில் ஓபனர் ஆயுஷ் மாத்ரே அதிரடியாக விளையாடி 65 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். ஆனால் மற்ற அனைத்து வீரர்கள் சொதப்பினர், பதோனி மட்டும் 38 ரன்களை அடித்து ஆறுதல் அளித்தார். இதன்மூலம், இந்தியா ஏ 234 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா ஏ அணிக்கு 75 ரன்கள் முன்னிலை கிடைத்தது. இரண்டாவது நாளிலேயே (அக். 31) ஆல்-அவுட்டாக, தென்னாப்பிரிக்கா அணி அன்றே தனது பேட்டிங்கை தொடங்கியது.
இரண்டாவது இன்னிங்ஸை பொருத்தவரை தென்னாப்பிரிக்கா ஏ அணி 199 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. இதில் தென்னாப்பிரிக்கா ஏ அணியின் லெசெகோ செனோக்வானே மற்றும் சுபைர் ஹம்சா ஆகியோர் தலா 37 ரன்களை அடித்தனர். இதிலும் இந்தியா ஏ அணி சார்பாக் கோட்டியான் 4 விக்கெட்டுகளை எடுத்தார். இந்திய அணிக்கு 275 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்திய அணி நேற்றே (நவ. 1) 39 ஓவர்கள் பேட்டிங் செய்தது. சாய் ஆயுஷ் மாத்ரே 6, தேவ்தத் படிக்கல் 5, சுதர்சன் 12 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ரிஷப் பண்ட் - ரஜத் பட்டிதார் ஜோடி 87 ரன்களை குவித்தது. பண்ட் அதிரடி காட்ட, பட்டிதார் பொருமை காட்டினார். பட்டிதார் 28 ரன்களில் ஆட்டமிழந்தார். நேற்றைய 3வது நாள் ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி 119 ரன்களை அடித்திருந்தது. ரிஷப் பண்ட் 64 ரன்களுடன் களத்தில் இருந்தார். ஆயுஷ் பதோனி ரன் ஏதும் அடித்திருக்கவில்லை. கடைசி நாளில் 156 ரன்கள் அடிக்க வேண்டும், கையில் 6 விக்கெட்டுகள் இந்திய ஏ ணிக்கு இருந்தது.
இன்று நான்காவது நாள் ஆட்டத்தை ரிஷப் பண்ட் அதிரடியாக தொடங்கினார். மறுமுனையில் ஆயுஷ் பதோனியும் சற்று வேகமாக ரன்களை அடிக்க முயற்சித்தார். இதற்கு பலனும் கிடைத்தது. துரதிருஷ்டவசமாக ரிஷப் பண்ட் 90 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர் 113 பந்துகளில் 11 பவுண்டரி, 4 சிக்ஸர்களையும் பறக்கவிட்டிருந்தார். இன்று மட்டும் 36 ரன்களை பண்ட் அடித்தார். பதோனி 34 ரன்களுக்கும், தனுஷ் கோட்டியான் 23 ரன்களுக்கும் ஆட்டமிழக்க இந்திய ஏ அணியின் வெற்றி வாய்ப்பு கேள்விக்குள்ளானது. தனுஷ் கோட்டியான் ஆட்டமிழந்தபோது, இந்தியா ஏ அணியின் வெற்றிக்கு 60 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. கையில் 3 விக்கெட் மட்டுமே இருந்தது.
ஆனால், 8வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த மாதவ் சுதார் - அன்ஷுல் கம்போஜ் சிறப்பாக விளையாடி இந்தியா ஏ அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். குறிப்பாக அன்ஷுல் கம்போஜ் 46 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்ஸர் அடித்து 37 ரன்களை குவித்து வெற்றிக்கு சிறப்பான பங்களிப்பை அளித்தார். இந்தியா ஏ அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் தனுஷ் கோட்டியான் 8 விக்கெட்டை வீழ்த்தி, 36 ரன்களை அடித்ததன் காரணமாக ஆட்டநாயகன் விருதை வென்றார். அந்த வகையில், தனுஷ் கோட்டியானை தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் எடுப்பார்களா என தெரியவில்லை. காரணம், வாஷிங்டன் சுந்தர் ஆஃப் ஸ்பின்னராக மட்டுமின்றி பேட்டராகவும் கௌதம் கம்பீரின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குகிறார். இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் சிறப்பாகவும் செயல்பட்டிருந்தார். இந்தச் சூழலில், வாஷிங்டன் இடத்தில் கோட்டியானுக்கு இடம் கிடைக்க வாய்ப்பில்லை.
ஆனால், தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் இந்தியா ஸ்குவாடில் அன்ஷுல் கம்போஜ்ஜை சேர்க்க அதிக வாய்ப்புள்ளது. இந்த போட்டியில் அன்ஷுல் கம்போஜ் 4 விக்கெட்டை வீழ்த்தியிருந்தார். பந்துவீச்சில் இரு பக்கங்களிலும் பந்தை ஸ்விங் செய்கிறார். புதிய பந்தில் மட்டுமின்றி பந்து பழையதான பின்னரும் ரிவர்ஸ் செய்வதிலும் திறன் பெற்றிருக்கிறார். மேலும் கடைசி இன்னிங்ஸில் அழுத்தம் நிறைந்த கட்டத்தில் தோல்விப் பாதையில் இருந்து அணியை மீட்டெடுத்து வெற்றிப் பெறச் செய்திருக்கிறார்.
டெஸ்ட் அணியை பொருத்தவரை ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்படும். இதில் பிரசித் கிருஷ்ணா இடத்தில் அன்ஷுல் கம்போஜ்ஜை சேர்க்கலாம். இவருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைப்பது குறைவு என்றாலும் ஸ்குவாடில் வைத்துக்கொண்டால் அவரால் இன்னும் தனது பந்துவீச்சை மேருகேற்றிக்கொள்ள இயலும். இவரின் வேகம் மட்டுமே தற்போது பிரச்னையாக இருந்து வருகிறது. கடந்த ஜூலையில் மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியில் அன்ஷுல் அறிமுகமான நிலையில், அந்த போட்டியில் அவர் 1 விக்கெட்டை மட்டுமே எடுத்தார். அதற்கு பின் அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. முகமது ஷமி, ஆகாஷ் தீப் ஆகியோருக்கு வாய்ப்பில்லாதபோது, 24 வயதான அன்ஷுல் கம்போஜை தற்போதே முயற்சித்து பார்க்கலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ