)
IPL 2026 Mini Auction, David Miller: ஐபிஎல் மினி ஏலம் என்றாலே அது வீரர்களுக்கு பணமழை கொட்டும் இடம் எனலாம். மெகா ஏலத்தை விட பல வீரர்களுக்கு மினி ஏலத்தில்தான் ஜாக்பாட் அடிக்கும். ஏனென்றால் மினி ஏலத்தில் அணிகளிடம் அதிக தொகையும் அதிக டிமாண்டும் இருந்தால் கூட, வீரர்கள் குறைவாகவே இருப்பார்கள்.
இதன் காரணமாகவே, 2024 மினி ஏலத்தில் ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் ரூ.24.75 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். அப்போது கேகேஆர் அணிக்கு வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளரின் தேவை அதிகமிருந்தது, கையில் தொகையும் அதிகமிருந்தது. இதனால் பல அணிகளுடன் முட்டிமோதி அவரை எடுத்து, 2024 சீசனில் சாம்பியன் பட்டத்தையும் தூக்கிச் சென்றது.
எனவே, மினி ஏலத்தில் கையில் இருக்கும் தொகைக்கு முக்கிய வீரர்களை கொக்கிப்போட்டு தூக்கும்பட்சத்தில், காம்பினேஷனில் சிக்கல் எழாமல் இருக்கும். இது வீரர்களுக்கு சாதகமாக இருந்து அதிக தொகையும் கிடைக்கிறது. அந்த வகையில், இந்த முறை கேம்ரூன் கிரீன், ஆன்ட்ரே ரஸ்ஸல், மதீஷா பதிரானா ஆகியோருக்கு மினி ஏலத்தில் அதிக டிமாண்ட் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், பெரியளவிற்கு பேசப்படாத வீரராக டேவிட் மில்லர் இருக்கிறார் எனலாம்.
36 வயதான டேவிட் மில்லர் அதிரடி பினிஷர் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். இவரை லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ரூ.7.5 கோடிக்கு கடந்த 2025 மெகா ஏலத்தில் எடுத்தது. ஆனால் ஏற்கெனவே டாப் ஆர்டரில் மார்க்ரம், மிட்செல் மார்ஷ், நிக்கோலஸ் பூரன் ஆகிய வெளிநாட்டு வீரர்கள் இருப்பதால் மில்லருக்கு அணியில் இடமே இல்லை எனலாம். எனவே அவரை லக்னோ தற்போது விடுவித்துள்ளது. இவர் மீது அணிகள் அதிக தொகையை முதலீடு செய்யாது என பலர் கூறினாலும், நிச்சயம் இந்த 3 அணிக்கு டேவிட் மில்லரின் தேவை அதிகம் இருக்கிறது. அதை இங்கு விரிவாக காணலாம்.
சிஎஸ்கே அணிக்கு பேட்டிங் ஆர்டரில் தோனிக்கு முன்னே களமிறங்கி ஆட்டத்தை முடித்துக்கொடுக்க வேண்டிய வீரரின் தேவை அதிகமாக உள்ளது. ஒருவேளை ஆன்ட்ரே ரஸ்ஸல் கிடைக்காவிட்டால் டேவிட் மில்லரை கொண்டு அந்த இடத்தை நிரப்பலாம். லிவிங்ஸ்டன், மேக்ஸ்வெல் மேல் நம்பிக்கை இல்லாவிட்டாலும் மில்லரை எடுக்கலாம். ஆல்-ரவுண்டர்தான் வேண்டும் என அடம்பிடிப்பதற்கு பதில் அவரை நம்பர் 6இல் இறக்கினால் பேட்டிங் வரிசை நீளும்.
கூடுதலாக ஏற்கெனவே அணியில் இருக்கும், ஆல்-ரவுண்டரான ராமகிருஷ்ண கோஷை பிளேயிங் லெவனில் எடுக்கலாம். அவர் ஓரிரு ஓவர்கள் பந்தும் வீசுவார், துபேவும் ஓரிரு ஓவர்களை வீசுவார் என்பதால் அந்த வெளிநாட்டு ஆல்-ரவுண்டர் தேவையை வெளிநாட்டு வீரர்களை பொருத்தவரை டெவால்ட் பிரேவிஸ் - டேவிட் மில்லர் - நூர் அகமது - நாதன் எல்லிஸ் ஆகியோரை லெவனில் வைக்கலாம். பந்துவீச்சை பொறுத்தவரை நூர் அகமது, நாதன் எல்லிஸ், அன்சூல் கம்போஜ், கலீல் அகமது இருக்கிறார்கள். சுழற்பந்துவீச்சு தேவைப்படும் இடத்தில் ஷ்ரேயாஸ் கோபாலை இம்பாக்ட் வீரராக பயன்படுத்தலாம். ஏலத்தில் வேறு வீரர்களையும் எடுத்து நிரப்பலாம்.
குஜராத் டைட்டன்ஸ் அணியில் இந்திய வீரர்கள் எக்கச்சக்கமாக இருந்தாலும், டாப் ஆர்டரில் ஜாஸ் பட்லரை தவிர வேறு வெளிநாட்டு வீரர்களே இல்லை. அதேநேரத்தில், இந்திய பினிஷர்களால் நிரம்பியிருக்கும் அந்த அணியில் வெளிநாட்டு பினிஷராக மில்லர் வந்தால், கூடுதல் பலம் சேரும். கடந்த சீசனில் குஜராத் அணி சில முக்கிய இடங்களில் சொதப்ப அனுபவம் குறைவான வீரர்களும் ஒரு காரணமாகும். எனவே, அனுபவ வீரரான மில்லரை எடுக்கலாம். மில்லர் ஏற்கெனவே கடந்த 2022, 2023, 2024 சீசனில் குஜராத் அணிக்காக விளையாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி அணிக்கு கடந்த சீசனிலும் ஒரு பினிஷருக்கான தேவை இருந்தது. தற்போது ஃபெரராவையும் ராஜஸ்தானுக்கு கொடுத்துவிட்ட டெல்லி அணி, நிதிஷ் ராணாவை பெற்று மிடில் ஆர்டர் ஓட்டை அடைத்திருக்கிறது. கேஎல் ராகுல் ஓபனிங் செல்வது உறுதியாகும். வேறு வெளிநாட்டு ஓபனரை கூட டெல்லி எடுக்கலாம் அல்லது அபிஷேக் பொரேலையும் கூட டெல்லி விளையாட வைக்கலாம். இதனால், மிடில் ஆர்டரில் அஷூடோஷ் சர்மா உடன் மில்லரை பினிஷர் ரோலில் பயன்படுத்தலாம். அக்சர் பட்டேல் கூட மிடில் ஆர்டரில் விளையாடும் வாய்ப்பு இதனால் ஏற்படும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ