)
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று (மே 08) நடைபெற்ற விறுவிறுப்பான ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் (DC) அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணி அபார வெற்றி பெற்றது.
டெல்லி அருன் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் தொடக்க வீரர் பதும் நிசங்கா அதிரடியாக விளையாடி 5 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் உட்பட 29 பந்துகளில் 50 ரன்கள் குவித்தார். அவருக்கு ஓரளவிற்கு ஒத்துழைப்பு கொடுத்த விக்கெட் கீப்பர் கே.எல். ராகுல் 23 ரன்களும், ஆசுதோஷ் சர்மா 39 ரன்களும் எடுத்தனர்.
மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். நிதீஷ் ரானா 8, சமீர் ரிஷ்வி 3, ஸ்டப்ஸ் 2, அக்சர் படேல் 11, விராஜ் நிகாம் 3 என அடுத்தடுத்து வெளியேறி ஏமாற்றம் அளித்தனர். கொல்கத்தா அணி தரப்பில் கார்த்திக் தியாகி மற்றும் அனுகுல் ராய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதையடுத்து 143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு தொடக்கமே அதிரடியாக அமைந்தது. தொடக்க வீரர் ஃபின் ஆலன் ஆரம்பம் முதலே டெல்லி பந்துவீச்சை துவம்சம் செய்தார். வெறும் 47 பந்துகளில் சதம் விளாசிய அவர், 5 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்ஸர்களுடன் 100 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
கேப்டன் அஜிங்க்யா ரஹானே 13 ரன்களில் ஆட்டமிழந்தாலும், பின்னர் வந்த கேமரூன் கிரீன் 33 ரன்கள் நிதானமாக விளையாடி ஃபின் ஆலனுக்கு ஒத்துழைப்பு கொடுத்தார். இதன் மூலம் கொல்கத்தா அணி 14.2 ஓவர்களிலேயே 2 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்து எளிதாக வெற்றி பெற்றது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இத்தொடரின் முதல் பாதியில் கடுமையாக சொதப்பியது. முதல் 6 போட்டிகளில் 5ல் தோவியடைந்தது. ஒரு போட்டி மழையால் ரத்தானது. இந்த சூழலில், அடுத்த 4 போட்டியில் வென்று தறமான கம்பேக்கை கொடுத்திருக்கிறது. இதன் மூலம் தனது பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்துக்கொண்டுள்ளது. கேகேஆர் அணி தற்போது வரை 10 போட்டிகளில் விளையாடி 6ல் வெற்றி பெற்று 9 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலின் 6வது இடத்திற்கு முன்னேறி இருக்கின்றனர். இன்னும் 4 போட்டிகள் மீதமுள்ள நிலையில், அதில் அனைத்திலும் வெற்றி பெற்றால், பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு இருக்கிறது.
மறுபக்கம் டெல்லி கேப்டல்ஸ் அணியை பொருத்தவரையில், இத்தொடரின் தொடக்கத்தில் சிறப்பாக விளையாடினாலும் அதன்பின் அடுத்தடுத்த போட்டிகளில் தொடர் தோல்விகளை பெற்று பின்னடைவை சந்தித்திருக்கிறது. 11 போட்டிகளில் விளையாடி உள்ள அந்த அணி வெறும் 4ல் மட்டும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 8வது இடத்திற்கு சரிந்துள்ளது. இதனால் அவர்கள் தங்களின் பிளே ஆஃப் வாய்ப்பை இழந்திருக்கின்றனர். ஒருவேளை கொல்கத்தாவிற்கு எதிரான இப்போட்டியில் வென்றிருந்தால் பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்திருக்கலாம். ஆனால் அவர்கள் அதை தவறவிட்டனர்.