)
இந்திய டி20 கிரிக்கெட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் இதுவரை மூன்று போட்டிகள் முடிவடைந்துள்ளன. ஆனால் இந்திய அணி இன்னும் ஒரு வெற்றியை கூட பதிவு செய்யவில்லை. முதல் போட்டி மழையால் பாதியிலேயே ரத்தானது. இதையடுத்து இரண்டாவது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 190 ரன்களை அடித்தது. ஆனால் இதையடுத்து விளையாடிய இங்கிலாந்து அணி 191 என்ற இலக்கை 19 ஓவர்களில் விரட்டி வெற்றியை பதிவு செய்தது.
இந்த நிலையில், நேற்று (ஜூலை 08) இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டி நாட்டிங்ஹாமில் உள்ள டிரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியிலும் இங்கிலாந்து அணியே வெற்றி பெற்றது. முதலில் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்து 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 201 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக பில் சால்ட் 70 ரன்களும் சாம் கரன் 41 ரன்களையும் எடுத்தனர்.
இதையடுத்து 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. ஆனால் தொடக்கம் முதலே விக்கெட்களை இழந்து வெறும் 76 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகினர். இதன் மூலம் இங்கிலாந்து அணி 125 ரன்கள் விட்த்தியாசத்தில் அபார வெற்றியை பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. இந்தியாவின் இந்த படுதோல்வி ரசிகர்களிடையே கோபத்தையும் அடுக்கடுக்கான கேள்விகளையும் எழுப்பி இருக்கின்றன.
இந்திய அணியின் தோல்விக்கு தலைமை பயிற்சியாளர் கெளதம் கம்பீரே காரணம் என சமூக வலைத்தளங்களில் பலரும் கடுமையாக சாடி வருகின்றனர். அதாவது ரஜத் பட்டிதார் போன்ற மிடில் ஆர்டரில் அதிரடியாக விளையாட கூடிய பேட்ஸ்மேன்களை கம்பீர் அணியில் எடுக்கவில்லை என குற்றம்சாட்டுகின்றனர். அதேபோல் கடந்த இரண்டு ஐபிஎல் சீசன்களை வென்ற ஆர்சிபி அணியில் இருந்து ஒருவரை கூட 15 பேட் கொண்ட அணியில் எடுக்காதது ஏன் என்ற கேள்வியையும் ஏழுப்புகின்றனர். குறிப்பாக அந்த அணியில் சிறப்பாக விளையாடிய தேவ்தத் படிக்கல்லை எடுக்காதது ஏன் என்ற அடுக்கடுக்கான கேள்விகளை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.
நடந்து முடிந்த 2026 ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் 501 ரன்களை குவித்து அசத்தி உள்ளார். குறிப்பாக குவாலிபையரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 33 பந்துகளில் 93 ரன்களை குவித்து அணியின் வெற்றிக்கு மிகப்பெரிய பங்காற்றினார்.
இந்திய டி20 அணியில் தற்போது புதிதாக நுழைந்திருக்கும் பிரின்ஸ் யாதவ், வைபவ் சூர்யவன்சி போன்றவர்கள் ஐபிஎல் ஆட்டத்தின் அடிப்படையிலேயே தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். அப்படி இருக்கையில், ரஜத் பட்டிதார் போன்ற வீரர்களை எடுக்காதது ஏன்? என்றும் கம்பீர் ஏன் இந்த அளவுக்கு அரசியல் செய்கிறார் என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இந்திய டி20 உலகக் கோப்பையை வெல்வதற்கு சஞ்சு சாம்சனே முதன்மை காரணம். அவர் முக்கிய போட்டிகளில் அடிக்கவில்லை என்றால், இந்திய அணியால் கோப்பையை நினைத்துக்கூட பார்க்க முடியாமல் போய் இருக்கும். இப்படி கோப்பையை கைப்பற்ற காரணமாக இருந்த சஞ்சு சாம்சனை 3 போட்டிகளில் ரன் அடிக்கவில்லை என்பதற்காக இந்திய டி20 அணியில் இருந்தே நீக்குவதா? இது எந்த வகையில் நியாயம் என்றும் ரசிகர்கள் கம்பீரை கடுமையாக சாடி வருகின்றனர். மேலும், அவருக்கு ஒரு சுகந்திரம் கொடுத்து, தனது கழுத்துக்கு பின்னால் எப்போது ஒரு கத்தி இருந்துக்கொண்டே இருக்கிறது என்ற அச்சத்தை ஏற்படுத்தாமல் இந்திய அணியின் தொடக்க வீரராக நீதான் விளையாட போகிறாய் என தனது இடத்திற்கான பயத்தை ஏற்படுத்தாமல் இருந்திருந்தால் அவர் நிச்சயம் சிறப்பாக விளையாடி இருப்பார் எனவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.