இந்தியா ஆசியா கோப்பையை எத்தனை முறை வென்றுள்ளது :ஒரு பார்வை
ஆசியா கோப்பை எப்பொழுது எங்கு முதன் முதலில் ஆரம்பமானது.
14-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. கடந்த 15 ஆம் தேதி தொடங்கிய ஆசிய தொடர் இன்று (தேதி 28) இருதிபோட்டியுடன் முடிவடைகிறது.
முதல் ஆசியா கோப்பை 1984 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் ஷார்ஜாவில் நடைபெற்றது. முதல் ஆசிய கோப்பையை இந்தியா வென்றது. இரண்டாவது ஆசியா கோப்பை 1984 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்றது. இதில் இலங்கை அணி கோப்பையை வென்றது. பின்னர் நடைபெற்ற 1986, 1990-91, 1995 ஆம் ஆண்டுக்கான கோப்பையை மூன்று முறை தொடர்ந்து இந்தியா வென்றது. இடையில் 1993 ஆம் ஆண்டுக்கான தொடர்ர் இந்தியா மற்றும் பாக்கிஸ்தானுக்கும் இடையேயான அரசியல் உறவுகளின் காரணமாக ரத்து செய்யப்பட்டது.
இதுவரை 13 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்து முடிந்துள்ளது. அதில் அதிகபட்சமாக இந்தியா ஆறு முறை வென்றுள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் இலங்கை ஐந்து முறை வென்றுள்ளது. பாகிஸ்தான் இரண்டு முறை வென்றுள்ளது.
இந்தியா 1997, 2004, 2008 ஆம் ஆண்டுகளில் இரண்டாவது இடத்தை பெற்றது. இந்திய அணியை பொருத்த வரை மொத்தம் ஒன்பது முறை இறுதிபோட்டிக்கு தகுதி பெற்றது. அதில் 6 முறை வெற்றியும், 3 முறை தோல்வியும் பெற்றுள்ளது.
ஆசியா கோப்பையை தொடர் இந்தியாவில் ஒரே ஒரு முறை (1990-91) நடத்தப்பட்டது. ஆனால் வங்காளதேசத்தில் 1988, 2000, 2012, 2014, 2016 என ஐந்து முறை நடத்தப்பட்டு உள்ளது.
தற்போது 14-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இங்கு மூன்றாவது முறையாக ஆசியா தொடர் நடக்கிறது.
இந்தியாவை பொருத்த வரை பத்தாவது முறையாக இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. அதேவேளையில் வங்காளதேசம் அணி மூன்றாவது முறையாக நுழைந்துள்ளது. 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசியா தொடர் டி-20 போட்டியாக நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று நடைபெறும் ஆசியா கோப்பை பைனலில் இந்தியா வெற்றி பெற்றால், 7வது முறையாக கோப்பையை தட்டிச்செல்லும். வங்களாதேஷ் அணி வெற்றி பெற்றால், முதல் முறையாக கோப்பை கைப்பற்றி சாதனை படைக்கும்.