)
ICC World Cup 2027 Dates: உலகமே பிபா கால்பந்து உலகக் கோப்பைக்கு காத்திருக்கும் வேளையில், 2027 ஐசிசி உலகக் கோப்பை தொடர் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. கடந்த 2023 ஐசிசி உலகக் கோப்பை இந்திய அணிக்கு மறக்க முடியாத துயரை ஏற்படுத்தியிருக்கிறது என்பதால் பலரும் இத்தொடருக்கு ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
2023ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஐசிசி உலகக் கோப்பை தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தொடர்ச்சியாக வென்று இறுதிப்போட்டி வரை முன்னேறியது.
ஆனால், அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடந்த இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் படுதோல்வி அடைந்து கோப்பையை தவறவிட்டது.
இதன் பின் இந்திய அணி ரோஹித் சர்மா தலைமையில் 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பை மற்றும் 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி; சூர்யகுமார் யாதவ் தலைமையில் 2026 ஐசிசி டி20 உலகக் கோப்பை என அடுத்தடுத்து 3 ஐசிசி கோப்பைகளை வென்று சாதித்திருக்கிறது.
அடுத்து இந்திய அணி, ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஐசிசி உலகக் கோப்பையை வென்றால் தொடர்ச்சியாக இத்தனை ஐசிசி கோப்பைகளை வென்ற சாதனையை படைக்கலாம். இந்த இரு தொடர்களுமே 2027ஆம் ஆண்டில் நடைபெற இருப்பது கவனிக்கத்தக்கது.
இந்த இரு தொடர்களும் சமீப காலமாக இந்திய அணியின் வசம் கிடைக்கவில்லை. இந்திய அணி கடைசியாக 2011இல் ஐசிசி உலகக் கோப்பையை வென்றது. ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடங்கி மூன்று இறுதிப்போட்டிகள் முடிந்துவிட்டன.
அதில் முதலிரண்டு முறை பைனல் வரை வந்து இந்தியா தோற்றது. கடைசி முறை இந்தியா இறுதிப்போட்டிக்கே தகுதிபெறவில்லை. எனவே, இந்திய அணி தற்போதைய முழு கவனமும் டெஸ்ட் மற்றும் ஓடிஐ அணியை வெற்றிகரமாக கட்டமைப்பதே ஆகும்.
இந்நிலையில், 2027 ஐசிசி உலகக் கோப்பை குறித்த அப்டேட் தற்போது கிடைத்துள்ளது. தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியா உள்ளிட்ட நாடுகள் நடத்தும் இத்தொடர் வரும் 2027ஆம் ஆண்டு அக்டோபர் 4ஆம் தேதி முதல் நவம்பர் 21ஆம் தேதிவரை நடைபெற வாய்ப்பிருப்பதாக தற்காலிகமாக திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த மே மாதமே அகமதாபாத் நகரில் நடைபெற்ற ஐசிசி வாரியக் கூட்டத்தில் போட்டிகளின் தேதிகள் இறுதி செய்யப்ட்டதாகவும், ஜூலை மாதம் எடின்பரோவில் நடைபெற்ற இறுதி ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் இறுதி ஒப்புதல் எதிர்பார்க்கப்படுவதாக கூறப்படுகிறது.
சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு ஆப்ரிக்க கண்டத்தில் ஐசிசி உலகக் கோப்பை வரும் 2027இல் நடைபெற இருக்கிறது. 54 போட்டிகளில் 41 போட்டிகள் தென்னாப்பிரிக்காவில் நடைபெற இருக்கிறது. மொத்தம் 14 அணிகள் இத்தொடரில் பங்கேற்கின்றன. எனவே, அடுத்த 2027ஆம் ஆண்டு அக்டோபர், நவம்பர் காலத்தில் களைகட்டும்.