)
IPL 2026 5 Star Players retirement : ஐபிஎல் 19வது சீசன் தற்போது அதன் உச்சக்கட்ட விறுவிறுப்பை எட்டியுள்ளது. குரூப் ஸ்டேஜ் போட்டிகள் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள வேளையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கான தனது இடத்தை முதல் அணியாக உறுதி செய்துவிட்டது. மீதமுள்ள 3 இடங்களுக்காக 7 அணிகளுக்கு இடையே இன்னும் கடுமையான போட்டி நிலவி வருகிறது. இந்தச் சூழ்நிலையில், வயது மற்றும் பார்ம் காரணமாக அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாட வாய்ப்பில்லாத, இந்த சீசனுடன் ஓய்வு பெறக்கூடிய 5 முன்னணி கிரிக்கெட் பிளேயர்கள் யார் யார் என்பதை இங்கே விரிவாக பார்க்கலாம்...
மகேந்திர சிங் தோனி
துரதிர்ஷ்டவசமாக இந்த பட்டியலில் முதலாவதாக இருக்கும் பெயர் எம்.எஸ்.தோனி. கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயத் துடிப்பாக இருக்கும் தல தோனியின் தலைமையின் கீழ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 முறை ஐபிஎல் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. இந்த சீசனில் தோனி சிஎஸ்கே அணியில் இடம் பெற்றிருந்தாலும், முழங்கால் காயம் காரணமாக அவர் இதுவரை ஒரு போட்டியில் கூட களம் இறங்கவில்லை. மே 18 ஆம் தேதியான இன்று, திங்கட்கிழமை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக நடக்கும் போட்டியில் தோனி தனது கடைசி ஐபிஎல் போட்டியை விளையாடலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முழு உடல் தகுதியை எட்டாத காரணத்தால் அவர் இப்போட்டியில் விளையாடவில்லை. இருப்பினும், 44 வயதான தோனி இந்த சீசனுக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகளில் இருந்து முழுமையாக ஓய்வு பெறவே அதிக வாய்ப்புகள் உள்ளன
அஜிங்க்யா ரஹானே
இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பவர் அஜிங்க்யா ரஹானே. 37 வயதான இந்த நட்சத்திர வீரருக்கு இந்த சீசன் அவ்வளவாக சிறப்பாக அமையவில்லை. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ள போதிலும், அவரது பேட்டிங் ஃபார்ம் மிகவும் மோசமாக உள்ளது. ரஹானே ஐபிஎல் 2026ல் இதுவரை 12 போட்டிகளில் விளையாடி 22.82 என்ற சாதாரண சராசரியுடன் 251 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அவரது இந்த செயல்பாட்டைக் கருத்தில் கொண்டு, அடுத்த ஆண்டு கேகேஆர் அணி அவரை தக்கவைத்துக் கொள்ளாது என்றே தெரிகிறது. இதனால் ரஹானேவும் இந்த ஐபிஎல் முடிந்ததும் தனது ஓய்வை அறிவிக்கலாம்.
இஷாந்த் சர்மா
இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் 311 விக்கெட்டுகளை வீழ்த்திய சீனியர் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார். இந்த சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் அங்கமாக இருக்கும் இவருக்கு, இதுவரை ஒரு போட்டியில் கூட விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. குஜராத் அணி தற்போது இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பளிக்க விரும்புவதால், 37 வயதான இஷாந்த் ஷர்மா ஐபிஎல் வாழ்க்கைக்கு இந்த சீசனுடன் விடை கொடுக்க வாய்ப்புகள் உள்ளன.
டிரெண்ட் போல்ட்
ஓய்வு பெறப்போகும் வீரர்களின் பட்டியலில் நான்காவது இடத்தில் இருப்பவர் நியூசிலாந்தின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் டிரெண்ட் போல்ட். ஒரு காலத்தில் போல்ட்டின் வேகம் மற்றும் ஸ்விங் பந்துகளுக்கு முன்னால் உலகின் சிறந்த பேட்ஸ்மேன்களே திணறினர். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக போல்ட் அந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய அவரது செயல்பாடு ஏமாற்றமளிக்கும் வகையில் இருந்ததால், அவர் அணியில் இருந்தும் நீக்கப்பட்டார். எனவே, 2026 சீசனுக்குப் பிறகு போல்ட்டின் ஐபிஎல் பயணமும் முடிவுக்கு வரலாம்.
சுனில் நரைன்
இந்த பட்டியலில் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் ஒரு பெயர் வெஸ்ட் இண்டீஸின் டி20 ஸ்பின்னரான சுனில் நரைன் ஆகும். இந்த சீசனில்தான் அவர் ஐபிஎல் தொடரில் தனது 200 விக்கெட்டுகளை நிறைவு செய்தார். மேலும் ஐபிஎல் வரலாற்றில் 200 போட்டிகளில் விளையாடிய முதல் வெளிநாட்டு வீரர் என்ற பெருமையையும் பெற்றார். 37 வயதிலும் சுனில் நரைன் தனது சுழற்பந்து வீச்சால் மாயாஜாலம் காட்டி வந்தாலும், இந்த சீசனுக்குப் பிறகு அவர் ஐபிஎல் தொடருக்கு குட்-பை சொல்ல வாய்ப்புள்ளது.