)
Vaibhav Suryavanshi : நடந்து முடிந்த 2026 ஆம் ஆண்டிற்கான இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் ரசிகர்களுக்குப் பல்வேறு சுவாரசியங்களையும் திருப்பங்களையும் வழங்கியுள்ளது. இந்த சீசனின் இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தங்களது சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்துக் கொண்டது. அதே நேரத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இந்த முறை இறுதிப் போட்டிக்குக்கூட தகுதி பெறவில்லை. இருப்பினும், இந்த 2026 ஐபிஎல் தொடரானது ஒட்டுமொத்த கிரிக்கெட் வரலாற்றிலும் ஒரு புதிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. அதற்குக் காரணம், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடிய 15 வயதே ஆன இளம் அதிரடி ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்ஷி நிகழ்த்திய அசாத்திய சாதனைகள் தான்.
இந்த சீசன் முழுவதும் தனது அசாத்திய பேட்டிங் திறமையால் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார் வைபவ். ஒரு முதிர்ந்த வீரரைப் போல மைதானத்தின் நாலாபுறமும் சிக்ஸர்களைப் பறக்கவிட்ட இந்த இளம் புயல், நடப்பு சீசனில் ஒட்டுமொத்தமாக 776 ரன்களைக் குவித்து புதிய சாதனை படைத்தார். இதன் மூலம், இந்த ஆண்டுக்கான மதிப்புமிக்க 'ஆரஞ்சு தொப்பியை' அவர் தனது வசப்படுத்தினார். ஐபிஎல் வரலாற்றிலேயே மிகக் குறைந்த வயதில் ஆரஞ்சு தொப்பியை வென்ற வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை வைபவ் சூர்யவன்ஷி இதன் மூலம் படைத்துள்ளார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தின் போது, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இவரை வெறும் 1.10 கோடி ரூபாய்க்கு வாங்கியது. அப்போதே இது ஒரு சிறந்த தேர்வாகப் பார்க்கப்பட்டது. நடப்பு சீசனிலும் அதே 1.10 கோடி ரூபாய் ஒப்பந்தத் தொகைக்கு அவர் தக்கவைக்கப்பட்டார். ஆனால், ஒப்பந்தத் தொகை குறைவாக இருந்தாலும், இந்த சீசனில் அவர் பேட்டிங்கில் காட்டிய அதிரடி மற்றும் வாங்கிய விருதுகள் காரணமாக, அவரது உண்மையான ஒட்டுமொத்த வருமானம் பல மடங்கு எகிறியுள்ளது.
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட இறுதிப் போட்டிக்குப் பிறகு, ஐபிஎல் 2026-ன் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் இந்த சீசனின் 'மிக மதிப்புமிக்க வீரர்' என்ற மிக உயரிய விருது வைபவ் சூர்யவன்ஷிக்கு வழங்கப்பட்டது. இது தவிர இன்னும் பல முக்கிய விருதுகளையும் அவர் தட்டிச் சென்றார்.
அவர் வென்ற தனிநபர் விருதுகள் மற்றும் அதற்கான பரிசுத்தொகையின் முழு விவரம் இதோ:
மிக மதிப்புமிக்க வீரர் விருது: இத்தொடரின் மிகச்சிறந்த ஆட்டக்காரராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக அவருக்கு ரூ. 15 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.
ஆரஞ்சு கேப்: இந்த தொடரில் அதிக ரன்கள் (776 ரன்கள்) குவித்ததற்காக ரூ. 10 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.
சூப்பர் ஸ்டிரைக்கர் ஆஃப் தி சீசன்: அதிவேகமாக ரன்களைக் குவித்ததற்காக ரூ. 10 லட்சம் ரொக்கப் பரிசோடு, ஒரு புத்தம் புதிய 'டாடா சியரா' (Tata Sierra) காரும் அவருக்குப் பரிசாக வழங்கப்பட்டது.
சூப்பர் சிக்ஸர்ஸ் ஆஃப் தி சீசன்: இந்த சீசனில் மட்டும் யாரும் எதிர்பாராத விதமாக 72 அசாத்திய சிக்ஸர்களைப் பறக்கவிட்டதற்காக அவருக்கு ரூ. 10 லட்சம் வழங்கப்பட்டது.
எமர்ஜிங் பிளேயர் ஆஃப் தி சீசன்: இந்த ஆண்டின் சிறந்த இளம் வளர்ந்து வரும் வீரருக்கான விருதை வென்று அதற்காக ரூ. 10 லட்சம் பரிசையும் பெற்றார்.
விருதுகள் மற்றும் தனிநபர் பரிசுகள் மூலமாக மட்டுமே அவர் மொத்தம் ரூ. 55 லட்சத்தை அள்ளியுள்ளார்.
ஐபிஎல் விதிகளின்படி, ஒரு வீரரின் ஆண்டு ஒப்பந்தத் தொகை ரூ. 1.10 கோடி தவிர, அவர்கள் விளையாடும் ஒவ்வொரு போட்டிக்கும் தனித் தொகையாக Match Fees வழங்கப்படும். அதன்படி வைபவ் சூர்யவன்ஷிக்கு ஒரு போட்டிக்கு ரூ. 7.5 லட்சம் வீதம் வழங்கப்பட்டது. இந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடிய 16 போட்டிகளிலும் வைபவ் களமிறங்கினார். இதன் மூலம் போட்டி கட்டணமாக மட்டுமே அவர் ரூ. 1.20 கோடியைத் தனது கணக்கில் சேர்த்துள்ளார்.
ஆண்டு தக்கவைப்புத் தொகை : ரூ. 1.10 கோடி
போட்டி கட்டணங்கள் : ரூ. 1.20 கோடி
தொடர் இறுதி விருதுகள்: ரூ. 55 லட்சம்
இதுமட்டுமன்றி, ஒவ்வொரு போட்டியின் போதும் சிறப்பாக விளையாடி அவர் பெற்ற 'எலக்ட்ரிக் ஸ்டிரைக்கர் ஆஃப் தி மேட்ச்' மற்றும் 'மோஸ்ட் சிக்ஸர்ஸ் ஆஃப் தி மேட்ச்' போன்ற சிறிய ஆட்டநாயகன் விருதுகள் மூலம் தலா ரூ. 1 லட்சம் வீதம் பல லட்சங்களை சம்பாதித்துள்ளார்.
இவை அனைத்தையும் கணக்கிட்டுப் பார்க்கும்போது, 15 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷியின் ஐபிஎல் 2026 சீசன் ஒட்டுமொத்த வருமானம் ரூ. 2.50 கோடிக்கும் அதிகமாக உயர்ந்து சாதனை படைத்துள்ளது.