)
இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் மிகவும் வெற்றிகரமான அணிகளில் ஒன்றான மும்பை இந்தியன்ஸ், கடந்த சில சீசன்களாக மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தியது. ஐபிஎல் மெகா ஏலத்தில் நல்ல நல்ல வீரர்களை எடுத்து இருந்தாலும், அவர்களால் வெற்றி பெற முடியவில்லை. இதனால் வரவிருக்கும் 2026ம் ஆண்டு IPL மினி ஏலத்திற்கு முன்பாக, அணியில் சில அதிரடி மாற்றங்களை செய்ய அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, கடந்த சீசனில் எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பாக செயல்படாத சில முக்கிய வீரர்களை அணியிலிருந்து நீக்கி, ஏலத்திற்கான தொகையை அதிகரிக்க மும்பை இந்தியன்ஸ் அணி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தீபக் சாஹர்
ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் ரூ.9.25 கோடி என்ற பெரும் தொகைக்கு வாங்கப்பட்ட தீபக் சாஹர், அந்த விலைக்கு ஏற்ற ஒரு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறினார். குறிப்பாக பவர்பிளே மற்றும் டெத் ஓவர்களில் அதிக ரன்களை வாரி வழங்கினார். 14 போட்டிகளில், 11 விக்கெட்டுகள் மட்டுமே எடுத்துள்ளார். எனவே, மும்பை அணி இவரை விடுவிப்பதன் மூலம், ஏலத்தில் சுமார் ரூ.9 கோடிக்கு மேல் சேமிக்க முடியும்.
வில் ஜேக்ஸ்
இங்கிலாந்தை சேர்ந்த அதிரடி ஆல்-ரவுண்டரான வில் ஜேக்ஸ், இந்த ஆண்டு ஒரு சில போட்டிகளில் மட்டுமே மும்பை அணிக்காக விளையாடினார். வெளிநாட்டு வீரர்களுக்கான போட்டி அதிகம் உள்ள நிலையில், ஒரு நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறியதால், இவரை விடுவித்துவிட்டு வேறு ஒரு சிறந்த வெளிநாட்டு வீரரை அணிக்குள் கொண்டுவர மும்பை அணி திட்டமிடலாம்.
ராபின் மின்ஸ்
ஜார்கண்டை சேர்ந்த இளம் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனான ராபின் மின்ஸ், பயிற்சி ஆட்டங்களில் சிறப்பாக செயல்பட்டாலும், கிடைத்த வாய்ப்புகளை அவர் சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான தனது அறிமுக போட்டியில், வெறும் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். எனவே, இவருக்கு பதிலாக, அனுபவம் வாய்ந்த ஒரு மாற்று விக்கெட் கீப்பரை தேர்ந்தெடுக்க அணி நிர்வாகம் விரும்பலாம்.
அர்ஜுன் டெண்டுல்கர்
சச்சின் டெண்டுல்கரின் மகனான அர்ஜுன், கடந்த சில சீசன்களாக மும்பை அணியில் இடம் பெற்றிருந்தாலும், அவருக்கு போதுமான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. ஒரு இளம் வீரராக அவருக்கு அதிக போட்டிகளில் விளையாடும் அனுபவம் தேவை. எனவே, அவரை விடுவித்து அவர் வேறு அணிகளில் சேர்ந்து தனது திறமையை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்க மும்பை அணி முன் வரலாம். இந்த வீரர்களை விடுவிப்பதன் மூலம், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஏலத்தில் சுமார் ரூ.15 கோடிக்கு மேல் சேமிப்பாகும். இந்த தொகையை வைத்து, 2026 மினி ஏலத்தில் தங்களது அணியின் பலவீனங்களை சரி செய்து ஒரு புதிய, வலிமையான அணியை கட்டமைக்க மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ