)
FIFA World Cup 2026, Messi vs Ronaldo : பிபா கால்பந்து உலகக் கோப்பை 2026 தொடர் ஜூன் 11ஆம் தேதி தொடங்கி ஜூலை 20ஆம் தேதிவரை நடைபெற இருக்கிறது. அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோ உள்ளிட்ட மூன்று அணிகள் இத்தொடரை நடத்துகின்றன.
இந்தியாவில் பிபா உலகக் கோப்பை ஒளிபரப்பு உரிமைத்தை Zee Entertainment நிறுவனம் பெற்றிருக்கிறது. உங்கள் தொலைக்காட்சியில் இத்தொடரை பார்க்க வேண்டும் என்றால், உங்கள் தொலைக்காட்சியில் Unite8 Sports 1, Unite8 Sports 1 HD, Unite8 Sports 2, Unite8 Sports 2 HD சேனல்களில் பார்க்கலாம். அதேபோல், Zee5 ஓடிடி தளத்தில் சிறப்பு சந்தா செலுத்தி நேரலையில் காணலாம்.
இப்படியிருக்க, நடப்பு தொடர் சிறப்புமிக்கதாக கருதப்படுவதற்கு முக்கிய காரணம், லியானல் மெஸ்ஸி மற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோ போன்ற கால்பந்து ஜாம்பவான்கள் கடைசியாக விளையாடும் உலகக் கோப்பை தொடராகவும். இது இவர்கள் இருவருக்கும் தொடர்ச்சியாக 6வது பிபா உலகக் கோப்பை, இதுவே தனி சாதனை எனலாம்.
பெரும்பாலும் இந்த இரண்டு ஜாம்பவான்கள் நேருக்கு நேர் மோதிக்கொள்வது பார்ப்பது அரிதானதாகும். மெஸ்ஸிக்கு வயது 38, ரொனால்டோவுக்கோ 41. மெஸ்ஸி அமெரிக்காவைச் சேர்ந்த Inter Miami லீக் அணியிலும், ரொனால்டோ சௌதி அரேபியாவின் Al-Nassar லீக் அணியிலும் விளையாடி வருகின்றனர்.
அதாவது, இவர்களின் வயது, இவர்கள் விளையாடும் அணிகளை பார்த்தால், இருவரும் நேருக்கு நேர் மோதுவதற்கு சாத்தியமே இல்லை எனலாம். எனவே, ஒரு கடைசி வாய்ப்பாக (!) உள்ளது, நடப்பு பிபா உலகக் கோப்பை தொடர்தான்.
மெஸ்ஸி விளையாடும் அர்ஜென்டினா அணி, J பிரிவில் இடம்பிடித்துள்ளது. இதில் அல்ஜீரியா அணியுடன் ஜூன் 16ஆம் தேதி அன்றும், ஆஸ்திரியா அணியுடன் ஜூன் 22ஆம் தேதி அன்றும், ஜோர்டன் அணியுடன் ஜூன் 27ஆம் தேதி அன்றும் அர்ஜென்டினா மோத இருக்கிறது.
லீக் சுற்று பிரிவில் அர்ஜென்டினா முதலிடத்தை பிடிக்கும்பட்சத்தில், ரவுண்ட் ஆப் 32 சுற்றில் வரும் ஜூலை 4ஆம் தேதி H பிரிவில் இடம்பெற்று 2வது இடம்பிடிக்கும் அணியுடன் மோதும். அதாவது, ஸ்பெயின், பராகுவே, கேப் வெர்தே, சௌதி அரேபியா ஆகிய அணிகளில் ஒன்றுடன் மோதும்.
கிறிஸ்டியானோ ரொனால்டோ விளையாடும் போர்ச்சுகல் அணி K பிரிவில் இடம்பெற்றுள்ளது. வரும் ஜூன் 17ஆம் தேதி டிஆர் காங்கோ அணிக்கு எதிராகவும், ஜூன் 23ஆம் தேதி உஸ்பெகிஸ்தான் அணிக்கு எதிராகவும், ஜூன் 27ஆம் தேதி கொலம்பியா அணிக்கு எதிராகவும் மோத உள்ளது.
போர்ச்சுகல் அணி லீக் சுற்றில் முதலிடத்தை பிடித்தால், வரும் ஜூலை 4ஆம் தேதி அன்று D/E/I/J/L என்ற தேர்வு செய்யப்படும் ஏதாவது ஒரு குரூப்பில் 3வது இடம்பிடிக்கும் அணிகளுடன் மோதும். இதனால் லீக் சுற்றிலும், ரவுண்ட் ஆப் 32 சுற்றிலும் அர்ஜென்டினா - போர்ச்சுகல் மோத முடியாது.
காலிறுதிப் போட்டி: அர்ஜென்டினா மற்றும் போர்ச்சுகல் அணிகள் லீக் சுற்றில் தங்கள் பிரிவில் முதலிடத்தை பிடித்து, ரவுண்ட் ஆப் 32 போட்டி மற்றும் ரவுண்ட் ஆப் 16 போட்டியை வென்றால், இரு அணிகளும் காலிறுதியில் மோத அதிக வாய்ப்புள்ளது.
ரவுண்ட் ஆப் 16 : ஒருவேளை ரவுண்ட் ஆப் 32 சுற்றில் போர்ச்சுகல் - அர்ஜென்டினா இரு அணிகளும் தனது பிரிவில் இரண்டாவது இடம் பிடித்தால், ரவுண்ட் ஆப் 16 சுற்றில் மோத வாய்ப்புள்ளது.
இறுதிப்போட்டி : ஒருவேளை இரண்டு அணிகளும் இறுதிப்போட்டிக்கு வந்தால் மட்டுமே ரொனால்டோ - மெஸ்ஸி நேருக்கு நேர் மோதிக்கொள்ள முடியும்.