மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 5 போட்டிகளில் விளையாடி 1 விக்கெட்டை கூட எடுக்க முடியாமல் இருந்து வருகிறார். இது அவரது ஐபிஎலில் கரியரில் ஒரு மோசமான தொடராக மாறி வருகிறது.

தனது யாக்கர் பந்துகளால் பேட்டர்களை பதறவைக்கும் ஜஸ்பிரித் பும்ரா, நடப்பாண்டு ஐபிஎல்லில் இன்னும் ஒரு விக்கெட் கூட எடுக்காமல் மிகவும் ஒரு மோசமான நிலையில் இருக்கிறார். இது மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மார்ச் 28 ஆம் தேதி தொடங்கி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடி வருகிறது. இதுவரை 5 போட்டிகளில் விளையாடி உள்ள அந்த அணி வெறும் 1 போட்டியில் மட்டுமே வென்று மிகவும் தடுமாற்றத்தில் இருந்து வருகிறது. தனது முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக விளையாடி வெற்றி பெற்றது. அதன்பின்னர் டெல்லி, ராஜஸ்தான், பெங்களூரு, பஞ்சாப் என அடுத்தடுத்த 4 போட்டிகளில் தொடர் தோல்விகளை சந்தித்திருக்கிறது.
இந்த சூழலில், அந்த அணி 2 புள்ளிகளுடன் -1.076 என்ற நெட் ரன் ரேட்டுடன் புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. இது ஒரு பக்கம் ரசிகர்களின் சோகமாக இருந்தாலும் அணியின் நட்சத்திர வீரர் ஜஸ்பிரித் பும்ரா இத்தொடரில் இதுவரை தனது விக்கெட் வேட்டை தொடங்காதது அவர்களுக்கு பேரதிர்ச்சியாக உள்ளது.
ஜஸ்பிரித் பும்ரா மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை விளையாடிய 5 போட்டிகளிலும் விளையாடி உள்ளார். ஆனால் ஒரு விக்கெட்டை கூட எடுக்காமல் இந்த சீசனில் எதிர்பாராத தடுமாற்றத்தில் உள்ளார். மொத்தமாக 19 முதல் 20 ஓவர்களை வரை வீசிய அவர் கிடத்தட்ட 164 ரன்கள் விட்டுக்கொடுத்துள்ளார். இதில் டெல்லி அணிக்கு எதிராக தனது சிறப்பான பந்து வீச்சை வீசி இருக்கிறார். அவர் அப்போட்டியில் 4 ஓவர்கள் வீசி 21 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்துள்ளார். இது இந்த 5 போட்டிகளில் சிறந்த பந்து வீச்சாக உள்ளது. 2026 ஐபிஎல் தொடரில் பும்ரா மட்டுமல்ல மற்ற அணிகளிலும் இதுபோன்ற ஒரு நிலை காணப்படுகிறது.
பும்ராவை போல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் நட்சத்திர வீரர் வருண் சக்கரவர்த்தியும் 2026 ஐபிஎல் தொடரில் இன்னும் ஒரு விக்கெட்டை கூட வீழ்த்தவில்லை. அவர் இதுவரை 3 போட்டிகளில் விளையாடி 9 ஓவர்களை வீசி உள்ளார். இதில் அவர் 105 ரன்களை விட்டுகொடுத்து மோசமான எகானமி ரேட்டை வைத்துள்ளார். அவரது எகானமி ரேட் 11-க்கு மேல் உள்ளது.
முன்னதாக ஜஸ்பிரித் பும்ராவின் இந்த தடுமாற்றம் குறித்து மும்பை இந்தியன்ஸ் அணி தலைமை பயிற்சியாளர் மஹேல ஜெயவர்தனேவிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், பும்ரா நன்றாக பந்து வீசுகிறார் என நான் நினைக்கிறேன். நாங்கள் அவருக்கு எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை. பேட்ஸ்மேன்கள் பும்ராவுக்கு எதிராக ரிஸ்க் எடுக்க யோசிக்கிறார்கள். நாங்கள் சில வித்தியாசமான உத்திகளை முயற்சித்தோம். ஆனால் எதிரணி நன்றாக பேட்டிங் செய்கிறது. ஆனால் பும்ரா ஒரு குறிப்பிட்ட காரணங்களுக்காக விக்கெட்டை வீழ்த்தவில்லை என்பதை என்னால் சொல்லமுடியாது என பும்ராவுக்கு ஆதரவாக ஜெயவர்தனே பேசினார்.
பும்ரா 2013 ஆண்டு முதல் ஐபிஎல்லில் விளையாடி வருகிறார். இதுவரை 150 போட்டிகளில் விளையாடிய அவர் 183 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். கடந்த 2025 ஐபிஎல் சீசனில் 12 போட்டிகளில் விளையாடி 18 விக்கெட்களை வீழ்த்தினார். இந்த நிலையில், இத்தொடரில் தனது விக்கெட் வேட்டையை தொடராதது அதிர்ச்சியாக உள்ளது. இருப்பினும் வரும் போட்டிகளில் சிறப்பாக பந்து வீசி விக்கெட்டை கைப்பற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மும்பை இந்தியன்ஸ் அணி அடுத்த போட்டியில் ஏப்ரல் 20 ஆம் தேதி அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக விளையாடுவது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!