IPL 2026, CSK Kartik Sharma: ஐபிஎல் 2026 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இளம் வீரரான கார்த்திக் சர்மா மீது தற்போது அதிக விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், அவர் குடும்ப பின்னணி குறித்து விரிவாக இங்கு காணலாம்.

IPL 2026, CSK Kartik Sharma: ஐபிஎல் தொடர், இந்திய கிரிக்கெட்டுக்கு ஒவ்வொரு ஆண்டும் புத்தம் புதிய திறமைகளை வழங்கிக் கொண்டே இருக்கிறது. தற்போது டெஸ்ட், ஓடிஐ, டி20ஐ என எந்த பார்மட்டை எடுத்துக்கொண்டாலும், இந்திய அணியில் இடம்பெற்றிருக்கும் பெரும்பாலான வீரர்கள் ஐபிஎல் தொடரில் அடையாளம் காணப்பட்டவர்களே எனலாம்.
ஹர்திக் பாண்டியா, ஜஸ்பிரித் பும்ரா, சஞ்சு சாம்சன், அக்சர் பட்டேல், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், சுப்மான் கில், தேவ்தத் படிக்கல், ருதுராஜ் கெய்க்வாட், யஷஸ்வி ஜெய்ஸ்வால், அபிஷேக் சர்மா, நிதிஷ்குமார் ரெட்டி என லிஸ்ட் போய்கொண்டே இருக்கும். இந்தாண்டும் பல புதிய வீரர்கள் ஜொலிப்பதை பார்க்க முடிகிறது. இரண்டு நாள்களுக்கு முன் கேகேஆர் அணிக்கு எதிராக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் 21 வயதே ஆன முகுல் சௌத்ரி 7 சிக்ஸர்களை பறக்கவிட்டு, அணிக்கு வெற்றியை தேடி தந்தார். அவரது சிக்ஸர்கள் அனைத்து் தோனியையே நினைவுப்படுத்தின.
இந்தச் சூழலில், உள்நாட்டில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வரும் முகுல் சௌத்ரியை போன்ற அதிரடிக்கு பெயர் போன மற்றொரு வீரர் கார்த்திக் சர்மா. இவரும் ராஜஸ்தான் அணி வீரர் ஆவார். ஆனால், ஐபிஎல் தொடரில் கார்த்திக் சர்மா, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுகிறார். அவரை ரூ.14.20 கோடிக்கு சிஎஸ்கே எடுத்தது. வெறும் 19 வயதான இளைஞனை இந்தளவிற்கு சிஎஸ்கே கோடிகளை கொட்டி, எடுத்திருக்கிறதே... அவர் அந்தளவுக்கு என்ன செய்வார்? என்ற கேள்விகள் அனைவரிடத்திலும் இருந்தன, இன்னும் இருக்கிறது. இவரை பிளேயிங் லெவனில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்ற குரல்களும் ரசிகர்கள், வல்லுநர்கள் மத்தியில் எழத் தொடங்கிவிட்டன.
ஏனென்றால் முகுல் சௌத்ரியை போல் கார்த்திக் சர்மா இன்னும் அந்த பெரிய இன்னிங்ஸை விளையாடவில்லை. மூன்று போட்டிகளில் களமிறங்கி 25 ரன்களை மட்டுமே அடித்திருக்கிறார், அதுவும் இரண்டு முறை ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தார். அழுத்தம் நிறைந்த கட்டத்தில் அவரால் பெரியளவில் சோபிக்க முடியவில்லை. இன்றைய டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் டெவால்ட் பிரெவிஸ் வருவதால், பிளேயிங் லெவனில் இருந்து கார்த்திக் சர்மா நீக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. இவர் சொதப்பியது உண்மை என்றாலும் வெறும் 3 போட்டிகளை வைத்து மட்டும் ஒருவரை மதிப்பிடுவது சரியாக இருக்காது. இந்தச் சூழலில், கார்த்திக் சர்மாவின் குடும்ப பின்னணி? இந்த உயரத்தை 19 வயதிலேயே அடைவதற்கு அவரின் கடின உழைப்பு என்ன? ஆகியவற்றை இங்கு காணலாம். இதன்மூலம் அவர் மீதான விமர்சனங்களை நீங்கள் குறைத்துக்கொள்ளவும் வாய்ப்புள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் நகரில் பிறந்தவர் கார்த்திக் சர்மா. வீட்டில் பெரிய வராண்டா இருக்குமாம். அந்த வராண்டாவில் பிளாஸ்டிக் பேட் மற்றும் பிளாஸ்டிக் பந்து இருக்குமாம். அந்த பேட், பந்தை அவரின் அப்பா அவருக்காக வாங்கிக் கொடுத்துள்ளார். அன்று முதல் நாள், கார்த்திக் பேட்டை பிடித்து நின்றுள்ளார், அவரின் அப்பா பந்தை வீசியிருக்கிறார். அந்த பந்தை கார்த்திக் அடித்தபோது, அங்கிருந்த சாமி படத்தில் பட்டுள்ளது, இதில் சாமி புகைப்படம் உடைந்திருக்கிறது. அன்றில் இருந்து கிரிக்கெட் விளையாட தொடங்கியிருக்கிறார், கார்த்திக் சர்மா.
கார்த்திக் சர்மாவின் கிரிக்கெட் வாழ்க்கைக்காக அவரின் பெற்றோர் பல தியாகங்களை செய்துள்ளனர். அவரது தந்தையிடம் ஆறு கடைகள் இருந்துள்ளன, அதில் நான்கு கடைகளை அவர் விற்றுள்ளார். மேலும், கிராமத்தில் நிலமும், பண்ணையும் இருந்துள்ளன. அதையும் அவர் விற்றுள்ளார். அவரது மகனுக்காக எக்கச்சக்கமாக கடன்களை பெற்றுள்ளார்.
கார்த்திக் சர்மாவின் தாயின் தியாகமும் கவனிக்கப்பட வேண்டியது. அவரிடம் நகைகள் இருந்திருக்கின்றன, அவரின் அனைத்து நகைகளையும் விற்றுள்ளார். மேலும் கார்த்திக்கின் கிரிக்கெட் உபகரணங்களுக்காக குடும்ப உறுப்பினர்களிடம் பலரிடமும் அவரது தாயார் கடன் பெற்றுள்ளார். பல பேரிடம் கடன் பெற்றுதான் அவரின் பெற்றோர் கார்த்திக் சர்மாவை பெரும் கிரிக்கெட் வீரராக வளர்த்துள்ளனர்.
நடுத்தர குடும்ப பின்னணியில் இருந்து வரும் கார்த்திக் சர்மா, இதுவரை சோபிக்காவிட்டாலும் நிச்சயம் அவர் பெரிய வீரராக உருவெடுக்க வாய்ப்புள்ளது. சிஎஸ்கே அணியுடன் கடந்த சில ஆண்டுகளாகவே கார்த்திக் சர்மா பயணித்து வருகிறார். கார்த்திக் சர்மாவின் இயல்பான ஆட்டத்தை பார்த்துதான் சிஎஸ்கே அவரை அணிக்குள், இத்தனை கோடி கொடுத்து எடுத்திருக்கிறது. நிச்சயம் சிஎஸ்கேவின் எதிர்காலமாக கூட இவரை பார்த்திருக்கலாம். எனவேஸ அவரை கடுமையாக விமர்சிப்பதை குறைத்து, ரசிகர்கள் சற்று ஆதரவளிக்க வேண்டும். அவருக்கு 19 வயதுதான் ஆகிறது, நிச்சயம் அடுத்தடுத்த சீசன்களில் கார்த்திக் சர்மா நம்பிக்கை அளிக்கும் வீரராக உருவெடுப்பார், இந்த சீசனில் கூட அது நடக்க அதிக வாய்ப்புள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ