IPL 2025 SRH vs LSG: ஐபிஎல் 2025 தொடரின் 7வது லீக் போட்டி இன்று ஹைதராபாத் நகரில் நடைபெற்றது. இப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி எதிர்கொண்டது.
IPL 2025 SRH vs LSG: தைரியமாக களமிறங்கிய ரிஷப் பண்ட்
இப்போட்டியில் டாஸ் வென்ற ரிஷப் பண்ட் தயங்காமல் பந்துவீச்சை தேர்வு செய்தார். ஹைதராபாத் மைதானத்தில் எஸ்ஆர்ஹெச் அணிக்கு முதல் பேட்டிங்கின் போது பல்வேறு சாதனைகள் இருந்தாலும், அதை பற்றி கவலைப்படாமல் ரிஷப் பண்ட் அந்த முடிவை எடுத்தார். எஸ்ஆர்ஹெச் எவ்வளவு ரன்கள் அடித்தாலும் அதனை நாங்கள் சேஸ் செய்வோம் என்ற நம்பிக்கை வார்த்தைகளை அவர் டாஸின் போதே உதிர்த்தார்.
IPL 2025 SRH vs LSG: பிளேயிங் லெவன் மாற்றம்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பிளேயிங் லெவனில் எவ்வித மாற்றத்தையும் செய்யவில்லை. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் மணிமாறன் சித்தார்த், ஷாபாஸ் அகமது ஆகியோர் நீக்கப்பட்டு ஆவேஷ் கான், அப்துல் சமத் சேர்க்கப்பட்டார். அந்த வகையில், லக்னோ அணிக்கு ஷர்துல் தாக்கூருடன், ஆவேஷ் கான் தொடக்க கட்ட ஓவர்களை வீசினார்.
IPL 2025 SRH vs LSG: இரு அணிகளுக்கும் நல்ல தொடக்கம்
பேட்டிங் செய்த ஹைதராபாத் அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. ஷர்துல் தாக்கூரின் தாக்குதலில் அபிஷேக் சர்மா 6, இஷான் கிஷன் 0 என அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டமிழந்தனர். இது ஹைதராபாத் அணிக்கு அதிர்ச்சியாக இருந்தாலும் டிராவிஸ் ஹெட் பவர்பிளேவில் அசத்தலாக ரன்களை குவித்தார். டிராவிஸ் ஹெட் கொடுத்த நல்ல வாய்ப்புகளை லக்னோ பீல்டர்கள் தவறவிட்டனர்.
IPL 2025 SRH vs LSG: அடுத்தடுத்து சரிந்து விக்கெட்டுகள்
பவர்பிளேவில் ஹைதராபாத் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 62 ரன்கள் எடுத்திருந்தது. ஆனால், அதன் பின்னரும் லக்னோ பந்துவீச்சாளர்களின் ஆதிக்கமே இருந்தது. இளம் பந்துவீச்சாளர் பிரின்ஸ் யாதவ் டிராவிஸ் ஹெட்டை ஆட்டமிழக்கச் செய்தார். அவர் 28 பந்துகளில் 5 பவுண்டரி, 3 சிக்ஸர் உடன் 47 ரன்களை அடித்தார்.
இதன்பின் 4வது விக்கெட்டுக்கு நிதிஷ் குமார் ரெட்டியுடன், கிளாசென் ஒரு சிறிய பார்ட்னர்ஷிப்பை கொடுத்தார். வழக்கத்திற்கு மாறாக இந்த ஜோடி நிதானம் காட்டியது. அதற்கு முக்கிய காரணம், இரு பேட்டர்களுக்கும் சிரமத்தை அளிக்கும் வகையில் பந்துவீச்சாளர்கள் தனித் தனி திட்டங்களை கொண்டுவந்து, அவற்றை கச்சிதமாக செயல்படுத்தினார். இந்த ஜோடி 34 ரன்களை சேர்த்தபோது, கிளாசன் துரதிருஷ்டவசமான ரன்-அவுட் மூலம் ஆட்டமிழந்தார். அவர் 17 பந்துகளில் 2 பவுண்டரி, 1 சிக்ஸர் உடன் 26 ரன்களை அடித்திருந்தார். தொடர்ந்து, நிதிஷ் ரெட்டி 28 பந்துகளில் 2 பவுண்டரியுடன் 32 ரன்களுடன் ஆட்டமிழந்தார்.
IPL 2025 SRH vs LSG: 5 சிக்ஸரை பறக்கவிட்ட அனிகேத் வர்மா
ஆனாலும், இதையடுத்து அனிகேத் வர்மா களமிறங்கிய சிக்ஸராக பறக்கவிட்டார். அவர் 13 பந்துகளில் 5 சிக்ஸரை பறக்கவிட்டு 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரை அடுத்து அபினவ் மனோகர் 2 ரன்களில் வெளியேறினார். கடைசி கட்டத்தில் கம்மின்ஸ் 18, ஹர்ஷல் பட்டேல் 12* அடித்து ஆறுதல் அளித்தனர்.
இதன்மூலம், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 190 ரன்களை அடித்தது. ஷர்துல் தாக்கூர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆவேஷ் கான், திக்வேஷ் ரத்தி, ரவி பிஷ்னோய், பிரின்ஸ் யாதவ் ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.
IPL 2025 SRH vs LSG: சொதப்பல் மார்க்ரம்
191 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணிக்கு இம்முறையும் எய்டன் மார்க்ரம் ஏமாற்றம் அளித்தார். அவர் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். எனவே ஏப். 1ஆம் தேதி பஞ்சாப் அணிக்கு எதிரான அடுத்த போட்டியில் லக்னோ அணி, மார்க்ரமிற்கு பதில் மற்றொரு தென்னாப்பிரிக்க வீரரான மேத்தியூ பிரீட்ஸ்கேவை ஓபனிங்கில் இறக்கலாம். அவர் அதிரடிக்கு பெயர் பெற்றவர்.
IPL 2025 SRH vs LSG: ஆட்டத்தையே மாற்றிய பூரன்
மார்க்ரம் ஆட்டமிழந்ததும் களத்திற்குள் வந்த நிக்கோலஸ் பூரன் ஆட்டத்தையே தலைகீழாக மாற்றினார். முகமது ஷமி, சிமர்ஜித் சிங், அபிஷேக் சர்மா, பாட் கம்மின்ஸ் என பவர்பிளேவில் அனைவரையும் போட்டுத்தாக்கினார். பவர்பிளேவில் லக்னோ 1 விக்கெட்டை மட்டும் இழந்து 77 ரன்களை குவித்தது. பவர்பிளே முடிந்தும் பூரன் அதிரடியை நிறுத்தவில்லை. மிட்செல் மார்ஷும் அவருக்கு துணையாக நின்று ரன்களை குவித்தார்.
IPL 2025 SRH vs LSG: லக்னோ பெரிய வெற்றி
நிக்கோலஸ் பூரன் 18 பந்துகளிலேயே அரைசதம் கடந்து மிரட்டினார். 7.3 ஓவர்களில் லக்னோ அணியின் ஸ்கோரை 100 ரன்களை தாண்டிவிட்டது. அந்தளவிற்கு வேகமாக பூரன் ஸ்கோரை உயர்த்தி வந்தார். மிட்செல் மார்ஷும் பவுண்டரிகளை அவ்வப்போது அடித்தார். அப்போது பாட் கம்மின்ஸ் வீசிய ஓவரில் 9வது ஓவரில் நிக்கோலஸ் பூரன் ஆட்டமிழந்தார். அவர் 26 பந்துகளில் 6 பவுண்டரி, 6 சிக்ஸருடன் 70 ரன்களை சேர்த்திருந்தார்.
மிட்செல் மார்ஷ் அரைசதம் கடந்த ஆட்டமிழந்தார். அவர் 31 பந்துகளில் 7 பவுண்டரி, 2 சிக்ஸருடன் 52 ரன்களை அடித்திருந்தார். அதன்பின் வந்த ஆயுஷ் பதோனி 6, ரிஷப் பண்ட் 15 ரன்களில் ஆட்டமிழந்தனர். ஆனால், அப்துல் சமத் கடைசி பவுண்டரியை குவித்தார். மில்லர் வின்னிங் ஷாட் அடிக்க லக்னோ 16.1 ஓவர்களிலேயே இலக்கை கடந்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது. அதாவது, 23 பந்துகள் மிச்சம் இருந்ததும் இங்கு கவனிக்கத்தக்கது.
IPL 2025 SRH vs LSG: ஆட்ட நாயகன் மற்றும் பர்பிள் கேப்
அப்துல் சமத் 22 (8), டேவிட் மில்லர் 13 (7) ரன்களுடன் களத்தில் இருந்தனர். பாட் கம்மின்ஸ் 2 விக்கெட்டுகள், ஷமி, ஜாம்பா, ஹர்ஷல் பட்டேல் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருதை மட்டுமின்றி, தொடரில் அதிக விக்கெட்டுகளை எடுத்து பர்பிள் கேப்பையும் லக்னோ அணி வீரர் ஷர்துல் தாக்கூர் வைத்துள்ளார். மற்றொரு லக்னோ அணி வீரரான பூரன் அதிக ரன்களை அடித்து தற்போது ஆரஞ்ச கேப்பையும் வைத்துள்ளார்.
Match 7. Lucknow Super Giants Won by 5 Wicket(s) https://t.co/X6vyVEvxwz #SRHvLSG #TATAIPL #IPL2025
— IndianPremierLeague (@IPL) March 27, 2025
IPL 2025 SRH vs LSG: புள்ளிப்பட்டியில் பெரிய மாற்றம்
லக்னோ அணியின் இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ தோல்வியடைந்தாலும் கடைசி ஓவரில் கோட்டைவிட்டதால் நெட் ரன்ரேட் பெரியளவில் குறையவில்லை. தற்போது இந்த போட்டியை பெரிய வித்தியாசத்தில் வென்றுள்ளதால் நெட் ரன்ரேட் எகிறியுள்ளது. இதனால், 7வது இடத்தில் இருந்த லக்னோ 2வது இடத்திற்கு பாய்ந்துள்ளது.
அதே நேரத்தில், நெட் ரன்ரேட் அடிப்படையில் முதல் இடத்தில் இருந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் தற்போது 6வது இடத்திற்கு சரிந்துள்ளனர். முதலிடத்தில் ஆர்சிபி அணி உள்ளது. பஞ்சாப் கிங்ஸ், சிஎஸ்கே, டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் முறையே 3வது, 4வது, 5வது இடத்தில் உள்ளன. கொல்கத்தா 7வது இடத்தில் உள்ளது. மும்பை, குஜராத், ராஜஸ்தான் அணிகள் முறையே கடைசி 3 இடங்களில் உள்ளன.
மேலும் படிக்க | சிஎஸ்கேவை திணறடிக்க... ஆர்சிபியின் அந்த 3வது ஸ்பின்னர் யார்? DK சொன்ன ரகசியம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









