)
சிஎஸ்கே அணியின் அடையாளமாக திகழும் தோனி, 2026 ஐபிஎல் தொடருடன் ஓய்வு பெறுவார் என்றும் அவருக்கு சிஎஸ்கே அணியில் முக்கிய பொறுப்பு அளிக்கப்படும் என கூறப்பட்டு வரும் நிலையில், அவர் ஓய்வுக்கு பின்னர் விளையாட்டுடன் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ள மாட்டார் என்ற அதிர்ச்சிகரமான செய்தியை முன்னாள் ஆஸ்திரேலியா வீரர் மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி என்றாலே அனைவருக்கும் நியாபகம் வரும் முகம் தோனியின் முகம் தான். அப்படி இருக்கையில், அவர் இந்தாண்டு ஐபிஎல் தொடருடன் ஓய்வு பெறுகிறார் என்று கூறப்படுகிறது. அவர் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 2026 ஐபிஎல்லின் தொடக்கம் முதலே அவர் காயம் காரணமாக விலகி விளையாடாமல் இருந்து வருகிறார்/ இது ரசிகர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே கடந்த ஐபிஎல் தொடரில் முட்டு வலியால் அவதிப்பட்டு வந்த அவர், இத்தொடரிலும் அதனால் அவர் சிரமப்பட்டு வருகிறார். இதன் காரணமாக அவர் இன்னும் சென்னை அணியில் இணைந்த பாடில்லை.
எம்.எஸ். தோனி தொடர்ந்து வலைப்பயிற்சி மேற்கொண்டு அவர், பேட்டிங்கில் சிறப்பாக செயல்படுகிறார் என்று சிஎஸ்கே அணி பயிற்சியாளர்கள் கூறுகின்றனர். இருப்பினும், அவரால் ஓடி ரன் எடுக்க முடியாத சூழல் நிலவி வருவதாக கூறப்படுகிறது. இதனாலேயே அவர் இன்னும் அணியில் இணையாமல் இருந்து வருகிறார். இந்த நிலையில், தோனி குறித்து சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார் முன்னாள் ஆஸ்திரேலியா வீரர் மைக்கேள் கிளார்க்.
இது தொடர்பாக பியாண்ட் 23 கிரிக்கெட் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பேசிய கிளார்க், “சிஎஸ்கே போட்டியை நீங்கள் நேரில் பார்த்தாலோ அல்லது டிவியில் கவனித்தாலோ, மைதானம் முழுவதும் நம்பர் 7 மஞ்சள் ஜெர்சிதான் அதிகமாக தெரியும். ஒரு அணி மீது ஸ்பான்சர்கள் ஈர்க்கப்பட வேண்டுமெனில், அந்த அணியில் தோனி இருப்பது மிகப்பெரிய காரணமாக இருக்கும். இந்திய கிரிக்கெட்டில் அவருக்கு உள்ள தாக்கமும், சிஎஸ்கேவில் அவருடைய முக்கியத்துவமும் அளவிட முடியாதது” என்றார்.
மேலும், “தோனியை விட சிறந்த விக்கெட் கீப்பர் இருக்கிறார் என்று யாராலும் என்னை நம்ப வைக்க முடியாது. இன்றும் டி20 கிரிக்கெட்டில் மிகச் சிறந்த விக்கெட் கீப்பர்களில் ஒருவர் தோனிதான். அவர் சாதாரண வீரர் அல்ல, தனி அடையாளம் கொண்ட கிரிக்கெட் ஜாம்பவான். அதனால், அவர் ஓய்வு பெற வேண்டும் என்று கூறுபவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்” என்றும் கிளார்க் கூறியுள்ளார்.
“தோனி ஒருமுறை ஓய்வு பெற்றுவிட்டால், அதன் பிறகு அவரை கிரிக்கெட் உலகில் அடிக்கடி பார்க்க முடியாது. அவர் கமெண்ட்ரி செய்வார் என்பதற்கும் வாய்ப்பு குறைவாகத்தான் தெரிகிறது. அதேபோல் சிஎஸ்கே அணியின் மெண்டராக அல்லது வழிகாட்டியாக நீண்ட காலம் இருப்பாரா என்பதிலும் உறுதி இல்லை. அவர் முழுநேர பயிற்சியாளராக செயல்படுவார் என்று கூட நினைக்க முடியவில்லை. அதனால் ரசிகர்களும் விமர்சகர்களும் அவரை உடனே ஓய்வு பெறச் சொல்லாமல், இன்னும் சில காலம் கிரிக்கெட்டில் தொடர ஊக்கப்படுத்த வேண்டும்,” என்று கிளார்க் தெரிவித்துள்ளார்.