IPL 2025 Qualifier 2: ஐபிஎல் வரலாற்றில் மும்பை இந்தியன்ஸ் அணி எத்தனை குவாலிபயர் 2 போட்டிகளில் விளையாடி, அதில் எத்தனை முறை வென்றுள்ளது என்பதை இங்கு பார்க்கலாம்.

IPL 2025 Qualifier 2: ஐபிஎல் 2025 தொடரில் (IPL 2025) இன்று (ஜூன் 1) மிக முக்கியமான போட்டி நடைபெற உள்ளது. வரும் ஜூன் 3இல் நடைபெற இருக்கும் இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும் 2வது அணி எது என்பதை உறுதிசெய்யும் குவாலிபயர் 2 போட்டி இன்று நடைபெறுகிறது.
IPL 2025 Qualifier 2: பஞ்சாப் vs மும்பை மோதல்
குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் (Punjab Kings vs Mumbai Indians) மோதுகின்றன. இறுதிப்போட்டியும் இதே மைதானத்தில்தான் நடைபெறுகிறது. பஞ்சாப் கிங்ஸ் அணி தோல்வியுடனும், மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றியுடனும் இந்த போட்டியில் காலடி வைத்துள்ளனர்.
PBKS vs MI: இறுதிப்போட்டிக்கு போவது யார்?
அதிலும் மும்பை இந்தியன்ஸ் அணி ( Mumbai Indians) தனது 6வது ஐபிஎல் கோப்பையை குறிவைக்கும்போது, பஞ்சாப் கிங்ஸ் இப்போதுதான் முதல் கோப்பையை வாங்கும் முனைப்பில் விளையாடி வருகிறது. இதுவரை பஞ்சாப் கிங்ஸ் (Punjab Kings) முதலும் கடைசியாக 2014 சீசனில்தான் இறுதிப்போட்டியில் விளையாடியது. அந்த சீசனிலும் குவாலிபயர் 2இல் சிஎஸ்கேவை வீழ்த்தியே இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது. ஆனால் இறுதிப்போட்டியில் கேகேஆர் அணியிடம் தோற்றது.
Mumbai Indians: குவாலிபயர் 2 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ்
மறுபுறம் மும்பை இந்தியன்ஸ் அணி கடைசியாக 2020ஆம் ஆண்டில்தான் இறுதிப்போட்டியில் விளையாடியது. இதுவரை 6 முறை இறுதிப்போட்டிக்கு வந்து 5 முறை கோப்பையை அடித்திருக்கிறது மும்பை. இந்த சூழலில், மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் வரலாற்றில் குவாலிபயர் 2 போட்டிகளில் (IPL Qualifiers 2) எப்படி செயல்பட்டுள்ளது?, எத்தனை போட்டிகளை விளையாடி எத்தனை போட்டிகளில் வென்றுள்ளது? என்பதை இங்கு காணலாம்.
2011ஆம் ஆண்டில்தான் பிளே ஆப் முறை கொண்டுவரப்பட்டது. அதற்கு முன் 3 சீசன்களுக்கு அரையிறுதி போட்டிகள், இறுதிப்போட்டி என்ற முறையே பின்பற்றப்பட்டது. 2011ஆம் ஆண்டில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணி 4 முறை குவாலிபயர் 2 போட்டிகளில் விளையாடியிருக்கிறது. இதில் 2 முறை வென்று, 2 முறை தோற்றும் உள்ளது. ஆனால், குவாலிபயர் 2 போட்டியில் வென்ற 2 முறையும் மும்பைதான் கோப்பையை அடித்திருக்கிறது. மும்பைக்கு 5வது முறை இன்று குவாலிபயர் 2 போட்டியில் விளையாட இருக்கிறது.
Mumbai Indians: 2011 குவாலிபயர் 2 போட்டி
2011 சீசனில் கேகேஆர் அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி குவாலிபயர் 2 போட்டிக்கு தகுதிபெற்றது. ஆனால், அந்த போட்டியில் 43 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபியிடம் தோற்று வெளியேறியது. சச்சின் அந்த போட்டியில் 40 ரன்களை அடித்தும் இலக்கை எட்ட முடியாமல் மும்பை தோற்றது. அந்த சீசனில் சிஎஸ்கே அணி ஆர்சிபியை வீழ்த்தி அதன் 2வது கோப்பையை வென்றது.
Mumbai Indians: 2013 குவாலிபயர் 2 போட்டி
2013 சீசனில் குவாலிபயர் 1 போட்டியில் சிஎஸ்கேவிடம் 48 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று, அதன்மூலம் குவாலிபயர் 2 போட்டிக்கு வந்தது மும்பை இந்தியன்ஸ். அந்த போட்டியில் ராஜஸ்தானை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது. இறுதிப்போட்டியிலும் சிஎஸ்கேவை தோற்கடித்து மும்பை தனது முதல் கோப்பையை வென்றது. சச்சினின் கடைசி சீசன் அதுதான்.
Mumbai Indians: 2017 குவாலிபயர் 2 போட்டி
2017 சீசனில் ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியிடம் குவாலிபயர் 1 போட்டியில் 20 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று, குவாலிபயர் 2 போட்டியில் விளையாடியது. அந்த போட்டியில் கேகேஆர் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்றது. இறுதிப்போட்டியில் RPSG அணியை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி தனது 3வது கோப்பையை மும்பை வென்றது.
Mumbai Indians: 2023 குவாலிபயர் 2 போட்டி
ரோஹித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கடைசியாக 2023 சீசனில்தான் கேப்டனாக இருந்தார். இந்த சீசனின் எலிமினேட்டர் போட்டியில் லக்னோவை 81 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை குவாலிபயர் 2 போட்டிக்கு தகுதிபெற்றது. ஆனால், குஜராத் அணி மும்பை இந்தியன்ஸை 62 ரன்களுக்கு வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது. மும்பை வெளியேறியது. கடைசியில் குஜராத்தை வீழ்த்தி சிஎஸ்கே அதன் 5வது கோப்பையை கைப்பற்றியது.
மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை எலிமினேட்டரில் வென்று அடுத்து இறுதிப்போட்டிக்கு வந்து கோப்பையை வென்றதில்லை. அது இந்த சீசனில் மாறுமா அல்லது தொடருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ