இந்தியாவில் நடைபெறும் உலக கோப்பையில் கடந்த 2 போட்டிகளின் முடிவுகள் கிரிக்கெட் ரசிகர்களின் புருவத்தை உயர வைத்திருக்கிறது. நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை ஆப்கானிஸ்தான் வீழ்த்திய சில நாட்களுக்குள் பலம் வாய்ந்த தென்னாப்பிரிக்கா அணியை சாய்த்திருக்கிறது நெதர்லாந்து. கத்துக்குட்டி அணிகளாக பார்க்கப்பட்ட இரு அணிகளும் பலம் வாய்ந்த அணிகளை வீழ்த்தியிருப்பது சாதாரணமான விஷயம் அல்ல. குறிப்பாக நெதர்லாந்து அணியில் விளையாடும் வீரர்களுக்கு சர்வதேச கிரிக்கெட் அனுபவம் அல்லது லீக் கிரிக்கெட் அனுபவம் என்பது மற்ற அணிகளுடன் ஒப்பிடும்போது அந்தளவுக்கு இல்லை. இருப்பினும் நெதர்லாந்து அணி தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தியது எப்படி? என்ற கேள்விக்கு பின்னணியில் இருக்கும் பதில் தான் நெதர்லாந்து அணியின் பயிற்சியாளர் ரியான் குக்.
இவர் தென்னாப்பிரிக்கா அணியிடமே மொத்த வித்தையையும் கற்றுக் கொண்டு இப்போது அந்த அணியை வீழ்த்த நெதர்லாந்து அணிக்கு பயிற்சி கொடுத்திருக்கிறார் அவர். ஏப்ரல் 2022 ஆம் ஆண்டு நெதர்லாந்து அணியின் அப்போதைய பயிற்சியாளர் ரியான் காம்ப்பெல் மாரடைப்பு காரணமாக அப்பொறுப்பில் இருந்து விலகினார். அவருக்கு பதிலாக ரியான் குக் புதிய பயிற்சியாளராக நெதர்லாந்து அணிக்கு நியமிக்கப்பட்டார். அதன்பிறகு நெதர்லாந்து அணி முதல் போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொண்டது. அப்போட்டியில் 498 ரன்களை விளாசி இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது. இருப்பினும் பயிற்சியாளராக இருந்த ரியான் குக், தன்னுடைய பயிற்சி யுக்தியில் நெதர்லாந்து அணியை சிறப்பாக முன்னேற்றினார்.
இதன்தொடர்ச்சியாக நெதர்லாந்து பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டு ஒருநாள் போட்டிகளில் 17 ரன்கள் மற்றும் 9 ரன்கள் வித்தியாசத்தில் மட்டுமே தோல்வியடைந்தது. அப்போது முதல் நெதர்லாந்து அணியின் ஆட்டம் வேறுமாதிரியாக இருந்தது. ஆஸ்திரேலியாவில் நடந்த ஐ.சி.சி டி20 உலகக் கோப்பையில் ஜிம்பாப்வே மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளை வீழ்த்தியது நெதர்லாந்து. ஒருநாள் உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் 2 முறை சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக வென்று முத்திரை பதித்தது.
இப்போது தான் நெதர்லாந்து அணியின் பயிற்சியாளர் ரியான் குக் மீது அனைவரது பார்வையும் விழுந்தது. யார் அவர்? என தேடியபோது, ஏற்கனவே தென்னாப்பிரிக்கா 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியின் உதவிப் பயிற்சியாளராக இருந்துள்ளார். கேரி கிரிஸ்டனுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறார். அவரிடம் இருந்து நிறைய அனுபவங்களையும் பெற்றிருக்கிறார். இது குறித்து ரியான் குக் பேசும்போது, " கேரி கிரிஸ்டன் ஒருமுறை என்னிடம் சொன்னது என்னவென்றால் கிரிக்கெட் ஒரு குழு விளையாட்டு. ஒரு ஆட்டத்தில் வெற்றிபெற உங்களுக்கு 11 பேரின் புத்திசாலித்தனம் தேவை. ஒன்றிரண்டு நல்ல செயல்பாடு போதுமானதாக இருக்கக்கூடாது என அவர் கூறினார். கேப்டவுனில் உள்ள அவரது கிரிக்கெட் அகாடமியில் அவருடன் சில மாதங்கள் பணியாற்றினேன். இது ஒரு சிறந்த கற்றல் அனுபவமாக இருந்தது. மன ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை நான் புரிந்துகொண்டேன்.
நெதர்லாந்து அணியினர் கிரிக்கெட் அனுபவத்தில் குறைவாக இருந்தாலும், அவர்கள் திறமை நிறைந்தவர்கள். எட்வர்ட்ஸ், லோகன் வான் பீக் மற்றும் பாஸ் டி லீட் போன்ற வீரர்கள் நல்ல திறமைகளை கொண்டவர்கள். மேலும் அவர்களில் பலர் இலங்கிலாந்து லீக் கிரிக்கெட்டிலும் விளையாடுகிறார்கள். பால் வான் மீகெரென் போன்ற பல நெதர்லாந்து வீரர்களும் டி20 லீக்குகளில் விளையாடியுள்ளனர். எங்களால் உலக கோப்பையில் சிறப்பாக விளையாட முடியும் என்று நம்புகிறோம். ரிசல்ட் அதற்கு ஏற்ப இருக்கும்" என தெரிவித்துள்ளார்.
இதில் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால் நெதர்லாந்து அணி உலக கோப்பைக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பாகவே இந்தியா வந்தனர். அவர்கள் கர்நாடகாவுக்கு எதிராக மூன்று பயிற்சி ஆட்டங்களில் விளையாடினர். அதில் தோல்வியை தழுவினாலும், இந்தியாவில் இருக்கும் பந்துவீச்சாளர்களை கொண்டு பயிற்சியில் ஈடுபட்டனர். இப்போது அந்த பயிற்சிகளுக்கு பலனாக பலம் வாய்ந்த தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தியிருக்கிறது நெதர்லாந்து. பயிற்சியாளர் ரியான் குக், தான் கற்றுக்கொண்ட அணியிடமே மொத்த வித்தையையும் காண்பித்து வென்றிருக்கிறார். இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் ரியான் குக் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்தவர். அவருடைய தந்தை மற்றும் சகோதரர் தென்னாப்பிரிக்கா அணிக்காக விளையாடி இருக்கின்றனர்.
மேலும் படிக்க | தோனியை போல் ரோஹித்... கேப்டன்ஸியில் கெத்து காட்டும் ஹிட்மேன் - 3ஆவது கப் லோடிங்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ