Cricket Records : கிரிக்கெட் விளையாட்டு என்றாலே சாதனைகளுக்கும், ஆச்சரியங்களுக்கும் பஞ்சம் இருக்காது. ஒரு ஓவரில் 7 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டது முதல் ஒரு பந்தில் 20 ரன்கள் எடுக்கப்பட்டது வரை எல்லாம் கூட பார்த்திருக்கிறோம். ஆனால், கிரிக்கெட் வரலாற்றில் ஒரே ஒரு பந்தில் 286 ரன்கள் எடுக்கப்பட்டது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?. ஆம், சுமார் 131 ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலிய மண்ணில் இத்தகைய ஒரு விசித்திரமான சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.
சம்பவம் நடந்தது எங்கே? எப்பொழுது?
இந்தச் சம்பவம் 1894-ஆம் ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி மேற்கு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஒரு உள்ளூர் போட்டியின் போது நிகழ்ந்துள்ளது. விக்டோரியா மற்றும் ஸ்க்ராட்ச் XI ஆகிய அணிகளுக்கு இடையே இந்தப் போட்டி நடைபெற்றது. 1894-ஆம் ஆண்டு லண்டனில் இருந்து வெளியான பால் மால் கெசட் (Pall Mall Gazette) என்ற செய்தித்தாள் இந்தச் செய்தியை முதன்முதலில் வெளியிட்டு கிரிக்கெட் உலகையே அதிர வைத்தது.
மரத்தின் உச்சியில் சிக்கிய பந்து
போட்டியின் போது விக்டோரியா அணியின் பேட்ஸ்மேன் ஒருவர் ஒரு பந்தை மிக உயரமாக அடித்தார். அந்த மைதானத்தின் எல்லைக்கு அருகிலிருந்த ஒரு பெரிய ஜார்ரா மரத்தின் கிளையில் பந்து போய் சிக்கிக்கொண்டது. அந்தப் பந்து கீழே விழவே இல்லை. இதைப் பார்த்த பேட்ஸ்மேன்கள் இருவரும் பிட்ச்சில் ஓடி ரன்களைச் சேர்க்கத் தொடங்கினர்.
துப்பாக்கியால் சுடப்பட்ட பந்து
பந்து கண்ணுக்குத் தெரிந்தும் அதை எடுக்க முடியாத நிலையில் எதிரணி வீரர்கள் தவித்தனர். பந்து தொலைந்துவிட்டால் தொலைந்த பந்து என அதை அறிவிக்கலாம். ஆனால் பந்து கண்ணுக்குத் தெரிந்ததால் நடுவர்கள் அதை 'லாஸ்ட் பால்' என்று அறிவிக்க மறுத்துவிட்டனர். இதனையடுத்து, பிளேயர்கள் மரத்தில் ஏறி பந்தை எடுக்க முயன்றும் அது பலனளிக்கவில்லை. மரத்தை வெட்ட கோடரி தேடியும் கிடைக்கவில்லை. இறுதியில், ஒரு துப்பாக்கியைக் கொண்டு வந்து பந்து இருந்த கிளையை நோக்கிச் சுட்டனர். பலமுறை சுட்ட பிறகு, ஒரு வழியாகப் பந்து கீழே விழுந்தது. ஆனால், அதற்குள் விக்டோரியா அணியின் பேட்ஸ்மேன்கள் ஓடி ஓடியே 286 ரன்களைக் கடந்திருந்தனர்.
விதிகளில் இருந்த ஓட்டை
ஸ்க்ராட்ச் XI அணியினர் இது குறித்து நடுவரிடம் முறையிட்டனர். ரன்கள் ஓடி எடுப்பதை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஆனால், அந்த காலத்தில் ஒரு பந்தில் இவ்வளவுதான் ரன்கள் எடுக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு விதி புத்தகத்தில் இல்லை. விதிகளில் இருந்த இந்த ஓட்டையைப் பயன்படுத்தி விக்டோரியா அணி வீரர்கள் 286 ரன்களைத் தங்கள் கணக்கில் சேர்த்தனர். அந்த ஒரு பந்தின் ரன்களாலேயே அவர்கள் ஆட்டத்தை வென்றதாகவும் கூறப்படுகிறது.
உண்மையா அல்லது வெறும் கதையா?
இந்தச் சம்பவம் நடந்து இன்றுடன் 131 ஆண்டுகள் ஆகிறது. சுமார் 6 கிலோமீட்டர் தூரம் ஓடினால் மட்டுமே 286 ரன்களைப் பெற முடியும் என்பதால், இது ஒரு கற்பனையான கதையாக இருக்கலாம் என்று ஆஸ்திரேலிய ஊடகங்கள் அப்போதே சந்தேகம் கிளப்பின. வெஸ்டர்ன் மெயில் போன்ற இதழ்கள் இதை ஒரு கட்டுக்கதை என்றே வர்ணித்தன. இருப்பினும், கிரிக்கெட் வரலாற்றின் சுவாரசியமான மர்மங்களில் ஒன்றாக இது இன்றும் பேசப்பட்டு வருகிறது.
ஒரு பந்தில் இத்தனை ரன்கள் எடுக்கப்பட்டது என்பது அறிவியல்பூர்வமாகச் சாத்தியமற்றது போலத் தோன்றினாலும், கிரிக்கெட் ஆர்வலர்கள் மத்தியில் இக்கதை இன்றும் நிலைத்திருக்கிறது.
மேலும் படிக்க | முதல் போட்டியில் CSK vs RCB மோதலா? IPL அட்டவணை குறித்து பிசிசிஐ அப்டேட்
மேலும் படிக்க | டி20 உலகக் கோப்பையில் கலக்கிய டாப் 6 ஐபிஎல் வீரர்கள்! லிஸ்ட்டில் ஒரே ஒரு CSK வீரர்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









