)
Ravindra Jadeja About IND vs AUS Series: இந்திய அணி தற்போது மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் (India vs West Indies Test Series) விளையாடி வருகிறது. அகமதாபாத் நகரில் நடைபெற்ற முதல் டெஸ்டில் வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் இந்தியா தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. முதல் டெஸ்டில் சதமும் அடித்து, 7 விக்கெட்டை வீழ்த்திய ஜடேஜா ஆட்ட நாயகன் விருதையும் வென்றார்.
தொடர்ந்து, டெல்லியில் இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 5 விக்கெட் இழப்பிற்கு 518 ரன்களை அடித்து டிக்ளர் செய்தது. சுப்மான் கில் 129 ரன்களை அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஜெய்ஸ்வால் 175 ரன்களை அடித்து துரதிருஷ்டவசமாக ரன் அவுட்டானார்.
மேற்கு இந்திய தீவுகள் அணி இன்றைய நாள் முடிவில், 140 ரன்களை அடித்து 4 விக்கெட்டை இழந்துள்ளது. இன்னும் இந்தியா 378 ரன்கள் முன்னிலையில் உள்ளது. இன்று ஜடேஜா (Ravindra Jadeja) மூன்று விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். நாளைய ஆட்டத்திலும் ஜடேஜா முக்கிய பங்கு வகிப்பார் எனலாம். துரதிருஷ்டவசமாக, முதல் இன்னிங்ஸில் ஜடேஜா பேட்டிங் செய்யவில்லை, ஆனால் பந்துவீச்சில் கலக்கி வருகிறார். துணை கேப்டனாக செயல்படும் ஜடேஜா மிகச்சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில், இன்றைய ஆட்டத்திற்கு பின்னர் ஜடேஜாவிடம் வர்ணனையாளர்கள் சில கேள்விகளை கேட்டனர். அப்போது 2027 ஐசிசி உலகக் கோப்பை விளையாடுவது குறித்து பேசிய ஜடேஜா, "நிச்சயமாக, நான் விளையாட விரும்புகிறேன். உலகக் கோப்பையை வெல்வது அனைவருக்கும் ஒரு கனவுதான்; 2023ஆம் ஆண்டு நாங்கள் அதை நெருங்கி வந்து தவறவிட்டோம். ஆனால் இறுதியில், அது அணி நிர்வாகத்தின் முடிவுதான்.
(ஆஸ்திரேலியா) தொடருக்கு என்னைத் தேர்வு செய்யாததற்கு அவர்களுக்குத் தனிப்பட்ட காரணங்கள் இருந்தன, அதை அவர்கள் எனக்கு விளக்கினர். நான் ஏன் தேர்வு செய்யப்படவில்லை என்பதை கேப்டன், பயிற்சியாளர் மற்றும் தேர்வாளர் எனக்கு விளக்கியதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். அவர்கள் எனக்கு அணி அறிவிக்கப்படும் முன்னரே சொல்லிவிட்டனர்" என்றார்.
ஜடேஜாவின் இந்த பதில் மூலம் பெரிய சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் உடனான முதல் டெஸ்டில் இந்தியா வெற்றிபெற்று, ஜடேஜா ஆட்ட நாயகன் விருதை வென்ற சில மணிநேரங்களில் ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய ஸ்குவாட் அறிவிக்கப்பட்டது. அப்போது, ஜடேஜா தேர்வு செய்யப்படாதது பெரும் சர்ச்சையை ரசிகர்கள் மத்தியில் கிளப்பியது. இந்திய அணியில் அக்சர் பட்டேலுக்கும், வாஷிங்டன் சுந்தருக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்றும் 2027இல் ஜடேஜா இடம்பெறுவது சந்தேகம் என்றும் கூறப்பட்டது.
ஆனால், அகர்கர் இதுகுறித்து ஸ்குவாட் அறிவிப்பின்போதே பேசியிருந்தார். அக்ரகர் கூறியதாவது, "இப்போதைக்கு, ஆஸ்திரேலிய தொடருக்கு ஒரே ஒரு இடது கை சுழற்பந்து வீச்சாளரை (அக்சர் படேல்) மட்டுமே தேர்வு செய்ய முடியும். இரண்டு பேரையும் சேர்த்து விளையாடுவது கடினம். ரவீந்திர ஜடேஜா எங்கள் திட்டங்களில் முழுமையாக இருக்கிறார். அவர் எவ்வளவு சிறந்த வீரராக, ஆல்ரவுண்டராக, ஃபீல்டராக அவர் என்ன வழங்குகிறார் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் இந்த தொடருக்கு, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ் ஆகியோருடன் அணியில் சமநிலையை உருவாக்க விரும்பினோம்" என்றார். இந்நிலையில், தற்போது ஜடேஜாவின் இந்த கூற்றும் அகர்கரின் பேச்சை உறுதிசெய்துள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ